பதான்கொட் தாக்குதலை ஒளி பரப்பிய பிரச்னையில் என் டி டி வி யை ஒரு நாள் தடை செய்த பா ஜ க வின் மத்திய அரசு பல முனை விமர்சனங்கள் தங்களுக்கு எதிராக திரும்பியதை உணர்ந்து உச்ச நீதி மன்றம் குட்டு வைப்பதற்கு முன்பே தானாகவே முன்வந்து தான் விதித்த தடையை நிறுத்தி வைத்து அறிவித்தது.
தடையை எதிர்த்து என் டி டி வி உச்ச நீதி மன்றத்தில் தாக்கல் செய்த வழக்கு ஜனவரி மாதம் விசாரணைக்கு வரும் என தெரிகிறது.
எல்லா ஊடகங்களும் வெளியிட்டதை தான் நாங்களும் வெளியிட்டோம் . எங்கள் மீது மட்டும் ஏன் தடை என்ற என் டி டி வி யின் கேள்விக்கு பதிலேதும் இல்லை.
தானே குற்றம் சாட்டுபவர் தானே தண்டணை அளிப்பவர் என்று மத்திய அரசு செயல் பட்டிருப்பது கண்டனத்துக்கு உரியதாகும்.
வக்கீல்கள் மீது நடவடிக்கை எடுக்க பார் கவுன்சில் என்று இருப்பதை போல பத்திரிகைகள் மீது நடவடிக்கை எடுக்க ப்ரெஸ் கவுன்சில் இருப்பதை போல ஒளிபரப்பு ஊடகங்கள் மீது நடவடிக்கை எடுக்க நியுஸ் பிராட்காஸ்டிங் ஸ்டான்டர்ட்ஸ் அதாரிட்டி என்ற அமைப்பு இருக்கிறது.
அந்த அமைப்பிடம் மத்திய அரசு புகார் அனுப்பி நடவடிக்கை எடுக்க சொல்லி இருக்கலாம். .
மாறாக பல அமைச்சக அதிகாரிகளை கொண்ட அமைப்பு மூலம் அறிவிப்பு அனுப்புதல் , விளக்கம்கேட்டல், விசாரணை , முடிவெடுத்தல் என்ற அதிகாரங்களை தானே மேற்கொண்டதன் மூலம் மத்திய அரசு ஊடகங்களை அச்சுறுத்தும் வேலையை முடுக்கி விட்டுள்ளது என்றுதான் பொருள் கொள்ளப்படும்.
இந்திரா காந்தியின் அவசர நிலை காலத்தில் அதிகம் பாதிக்கப் பட்டவர்கள் பா ஜ க வின் தலைவர்கள் . ஆனால் அதிகாரத்துக்கு வந்த பின் அதே சர்வாதிகாரம்தான் தங்களின் பதவியை நிலை நிறுத்தும் என்று நம்பத் தொடங்கி விட்டதுதான் பரிதாபம்.
அரசியல் சட்டம் உறுதியளித்திருக்கிற அடிப்படை உரிமைகளை பாதிக்கிற எந்த நடவடிக்கையில் யார் இறங்கினாலும் அது மக்களால் நிராகரிக்கப் படும்.
நியாயமான கட்டுப்பாடுகள் விதிக்க அரசுக்கு இருக்கும் அதிகாரத்தை பயன்படுத்தும் போது கூட எல்லா தரப்பையும் கலந்து ஆலோசித்துதான் அந்த முடிவை எடுக்க வேண்டுமே தவிர ஆட்சி நிலைப்பதற்காக அடக்கு முறை உத்தியாக அந்த உரிமையை பயன் படுத்தினால் நிச்சயம் மக்களின் எதிர்ப்பைத்தான் இந்த அரசு சந்திக்கவேண்டிவரும்.
அப்போது இவர்களை பதவி யிலிருந்து தூக்கி எறிய மக்கள் தயங்க ஆட்டார்கள் என்பதை சர்வாதிகாரத்தை கையிலெடுக்க முயற்சிக்கும் ஆட்சியாளர்கள் உணரட்டும்.