வெளிநாடுகளில் பதுக்கி வைத்த கருப்பு பணத்தை திரும்ப கொண்டு வந்து எல்லா இந்தியர் கணக்கிலும் பதினைந்து லட்சம் போடுவேன் என்று உறுதியளித்து ஆட்சிக்கு வந்த மோடி அதை காற்றில் பறக்க விட்டு விட்டார்.
அரசு அனுமதி இல்லாமல் வெளி நாடுகளில் பணம் போடுவோரின் இந்திய குடியுரிமை பறிக்கப் படும் என்ற அறிவிப்பு செய்தால் போதும் எவருக்கும் வெளி நாடுகளில் பணம் போடும் எண்ணமே வராது. அதை விட்டு விட்டு இரட்டை வரி விதிப்பு ஒப்பந்தம் என்று சொல்லிக்கொண்டு எந்த பணத்தையும் கொண்டு வந்த பாடில்லை.
ஆட்சிக்கு வந்து இரண்டாண்டு ஆகிவிட்டது. உ பி தேர்தல் வருகிறது. ஏதாவது செய்ய வேண்டும் என்று திட்டமிட்டு நடுத்தர மக்களின் வாழ்க்கையோடு விளையாட தொடங்கி விட்டார்.
500 , 1,000 ரூபாய் நோட்டுகளை செல்லாது என்று அறிவித்து விட்டால் நாட்டில் உள்ள கருப்பு பணம் எல்லாம் வங்கியில் வந்து கொட்டி விடும் என்று நம்புகிறாரா?
1938, 1946 , 1978 ம் ஆண்டுகளில் பெரிய ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டது. எதிர் பார்த்த பலன் கிட்டவில்லையே?
இப்போது என்ன திட்டத்திற்காக இந்த நடவடிக்கை?
- கறுப்புப் பணம்; பணமாகவா மட்டும் இருக்கிறது கருப்பு பணம். நிலமாக , பங்கு சந்தை முதலீடாக, கார்பொரேட் கம்பனிகளில் பலவிதங்களில் முதலீடாக, தங்கமாக , வைரமாக, வெளிநாடுகளில் வங்கிகளில் டிபாசிட்டாக என்று பல விதங்களில் முடங்கி கிடக்கிறது. இன்று ஆயிரம் ரூபாய் நாடுகளை பதுக்கியவன் நாளை இரண்டாயிரம் நோட்டுகளை பதுக்குவான். நாணயமாக வரி கட்ட வேண்டும் என்ற எண்ணத்தை எல்லார் மனத்திலும் விதைக்கும் விதத்தில் வரி விதிப்புக் கொள்கை இல்லாவிட்டால் ஒரு போதும் கருப்பு பணத்தை ஒழிக்கவே முடியாது. வருமான வரி விலக்கை ஐந்து லட்சமாக உயர்த்துங்கள். எல்லாரும் வரி கட்டுவார்கள்..
- கள்ள நோட்டுகள் ; பாகிஸ்தானில் இருந்து அச்சடித்து வருவதாக சொல்கிறார்கள். இப்போதும் பத்து சதம் கள்ளப் பணம் புழக்கத்தில் இருப்பதாக சொல்கிறார்கள். அரசு கண்காணிப்புடன் இருந்து தடுக்க வேண்டிய வேலை இது.
- வருமான வரி கட்ட வைக்க; ஜன் தன் திட்ட மூலம் இருபது கோடி பேருக்கு வங்கி கணக்கு வந்து விட்டது. இரண்டரை லட்ச ரூபாய்க்கு மேல் வருவாய் உள்ளவர்கள் வரி கட்டாமல் இருப்பதை தடுத்து அவர்களை வரி கட்ட வைக்கலாம். ஏனெனில் ஐந்திலிருந்து பத்து இருபது லட்ச ரூபாய் சேமிப்பு வைத்திருப்போர் வங்கியில் கட்டியாவது வரி போக மிச்ச பணம் கிடைக்கட்டும் என்று டெப்பாசிட் செய்வார்கள். இது ஒன்றுதான் மோடி நடவடிக்கையின் பயனாக இருக்கலாம்.
- ஹவாலா பண பரிமாற்றம் குறையலாம்;
- இந்திய பங்கு சந்தையில் முதலீடு செய்பவர்கள் வெளி நாட்டு வாழ் இந்தியராக இருந்தால் அவர்கள் பணத்தை பி நோட்ஸ் என்ற ‘ Participatory Notes ” மூலம் முதலீடு செய்யலாம் . ஆனால் அவருடைய பெயரை வெளியிட வேண்டும் என்ற அவசியம் கிடையாதாம். இந்த முறையை ஒழிக்க முன்வருவாரா மோடி ? உச்சநீதி மன்றத்தில் கருப்பு பணத்தை மீட்க அரசுக்கு உத்தரவிடக்கோரி நிலுவையில் உள்ள வழக்கில் மத்திய அரசு ஏன் ஒத்துழையாமை கொள்கையை கடைப் பிடிக்கிறது. ?. லோக் பால் அமைப்பை கொண்டு வர வேண்டும் என்று அன்னா ஹசாரே போராடி வருகிறார். ஏன் அதைப்பற்றி மோடி கண்டு கொள்ளவில்லை.? இன்று வங்கி முன் வரிசையில் எந்த பணக்காரனும் நிற்கவில்லை. எல்லாம் சரி. கொண்டு வந்ததுதான் கொண்டு வந்தீர்கள். ஏன் இத்தனை அவசரம்? ஐம்பது நாள் அவகாசம் கொடுத்தீர்கள் பணத்தை வங்கியில் டிபாசிட் செய்ய. அது வரைக்கும் மட்டும்தான் இவை செல்லும் என்றால் என்ன கெட்டு விடும்.? பணத்தை வைத்திருப்பவர்கள் வங்கியில் போட வேண்டும் என்பது மட்டும்தானே உங்கள் நோக்கம். இல்லை அவர்களை வதைப்பதா? அதுவும் இருநூறு சதம் அபராதம் வேறு? வரி வேறு? பொது மக்களின் எரிச்சலை வாரிக் கட்டி கொண்டதைத் தவிர மோடி எதையும் சாதிக்க வில்லை நன்மைகள் பத்து சதம் என்றால் தொண்ணுறு சதம் நடுத்தர மக்களை வதைத்ததுதான் மோடி அரசின் சாதனை !!!
- பிரச்னை உச்சநீதி மன்றத்தில் இருக்கிறது. அதுவாவது தலையிட்டு கால அவகாசம் நீட்டித்தால் அரசின் நடவடிக்கையால் ஏற்பட்ட குழப்பம் கொஞ்சம் தீரும்.