டெல்டா பகுதியில் மீத்தேன் எரிவாயு திட்டம் நிரந்தர ரத்து!

டெல்டா பகுதியில் நிலக்கரி படுகை மீத்தேன் திட்டம் நிரந்தரமாக நிறுத்தப் படுவதாக பெட்ரோலிய துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் அறிவித்தார்.

இதேபோல் ஷேல் காஸ் எடுக்கும் திட்டமும் கைவிடப் பட வேண்டும் என்பதே விவசாயிகளின் எதிர்பார்ப்பு.

விவசாயிகளின் ஒப்புதல் பெற்று மீத்தேன் எடுக்கப் படும் என்று அறிவித்தவர்தான் இந்த பிரதான்.

விவசாயிகள் போராட்டம் அதிகமாகி  நிலங்களை கையகப் படுத்த முடியாது என்று தெரிந்த  பின் இப்போது கைவிடுகிறார்கள்.

அதேபோல் ஓ என் ஜி சி நிறுவனமும் தனது செயல் பாட்டை நிறுத்திக் கொண்டால்தான் விவசாயிகள் நிம்மதியாக வாழ முடியும்.

தமிழ்நாட்டில் சுமார் 35  ஆயில் மற்றும் காஸ் வயல்களில் இருந்து நாள் ஒன்றிற்கு  700    டன் ஆயிலும் , 3.8  மில்லியன் கியூபிக் மீட்டர் இயற்கை வாயுவும் இந்த நிறுவனம்  எடுக்கிறது.

இதில் எவ்வளவு தமிழ் நாட்டுக்கு கிடைக்கிறது ,தமிழர்களுக்கு என்ன நன்மை என்றால்  ஏமாற்றம்தான்.

இந்த நிறுவனம் வெளியில் சொல்லாமல் மீத்தேன் ஆய்வை நடத்தியது என்று செய்திகள் வெளியாயின.

போராட்டங்கள் வெடித்தபின் தானாகவே நிறுத்திக் கொண்டார்கள்.   எதையும் மக்களிடம் வெளிப்படையாக விபரங்களை தெரிவிக்காமல் ரகசியமாக வைத்துக் கொண்டு விவசாயிகள்  வாழ்வை  பாழடிப்பது என்ன நியாயம்.

பெட்ரோல் தேவைதான்.    அதை தடையின்றி கிடைக்கும் இடங்களில் இருந்து பெற்று பயன் படுத்த வேண்டுமே தவிர உள்நாட்டு விவசாயத்தை பாழடித்து யாரை வாழ வைக்கப் போகிறீர்கள்?

எத்தனை ஆண்டுகளுக்கு இந்த எண்ணை வயல்கள் பயன் பாட்டில் இருக்கும் அதன் பின் மேற்பரப்பில் உள்ள விவசாய நிலங்களின் தன்மை எவ்விதம் மாறும் என்பதைப்  பற்றி விவசாயிகளுக்கு தெரியப் படுத்த பட்டிருக்கிறதா?

விளைவுகளை அவர்களிடம் கொண்டு செல்ல வேண்டிய கடமை அரசுக்கு  இருக்கிறதா இல்லையா?

தாங்களாகவே  தெரிந்து கொள்ள அவர்கள் விஞ்ஞானிகள் அல்லவே?

ஒ என் ஜி சி நிறுவனத்தின் செயல்பாடுகள்  விவசாயிகள் மத்தியில் விபரங்களோடு விவாதிக்கப் பட வேண்டிய காலம் நெருங்கிக் கொண்டிருக்கிறது.