திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோவிலில் பெண்கள் சுரிதார் அணிந்து வரலாம் என்று கோவில் நிர்வாக அதிகாரி உத்தரவிட்டார்.
நிர்வாக கமிட்டி கூடி நிர்வாக அதிகாரியின் உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டது.
பெண்கள் சுரிதார் அணிந்து வந்தால் அதன் மேலே ஒரு வேட்டியை சுற்றிக்கொண்டு கோவிலில் நுழைந்து வழிபடும் அவலம் நடந்து கொண்டு இருக்கிறது.
உலகம் எத்தனை மாறினாலும் உளுத்துப் போன சம்பிரதாயங்களை காரணம் காட்டி மாற்றங்களுக்கு தடை விதிக்கும் பத்தாம் பசலிகள் ஆட்சிதான் இன்னும் நடந்து கொண்டு இருக்கிறது.
ரியா ராஜி என்ற பெண் பக்தர் வக்கீல் இந்த உடை மாற்றம் கோரி உயர் நீதி மன்றத்தில் வழக்கு தொடுத்தார்.
நிர்வாக அதிகாரியின் உத்தரவு உயர் நீதி மன்ற உத்தரவின் பேரில் எடுக்கப்பட்டது. இதற்கெல்லாமா நீதி மன்றம் செல்ல வேண்டும் என்றால் அதுதான் உண்மை.
தேவஸ்வம் அமைச்சர் நிர்வாக அதிகாரியின் உத்தரவு சரியே என்று சொன்னாலும் பிராமண சபாவை சேர்ந்தவர்களும் அவர்களால் தூண்டி விடப் பட்டவர்களும் சத்தம் போட்டுக் கொண்டுதான் இருக்கிறார்கள்.
மற்றொரு வழியில் பெண்கள் சுரிதார் அணிந்து கோவிலுக்குள் நுழைந்து வழிபடுவதை யாரும் தடுக்க வில்லை.
பக்தர்கள் எனப்படுவோர் தங்களுக்குள் ஒற்றுமை இல்லாமல் சுய நலமிகளின் செல்லாத கட்டளைகளுக்கு பணியும் வரை இந்த பத்தாம் பசலிகளின் கோணங்கித்தனம் தொடர்ந்து கொண்டுதான் இருக்கும்.