உச்சநீதி மன்றத்தால் தியேட்டர்களில் திணிக்கப் படும் தேசிய கீத தேசபக்தி ??!!!

sc-national-anthem

சினிமா பார்ப்பதற்கு முன்பு இனிமேல் ரசிகர்கள் எழுந்து நின்று தேசிய கீதத்திற்கு மரியாதை செலுத்தி தேச பக்தியை நிருபித்த பின்தான் படம் பார்க்க முடியும்.

அப்படிதான் உத்தரவு பிறப்பித்திருக்கிறது உச்சநீதி மன்றம்.

1960, 1970  களில் அப்படி ஒரு மரபு கடைபிடிக்கப் பட்டு வந்தது.      தியேட்டர் முதலாளிகள் அதை  அமுல் படுத்த முடியாமல் போனதால் நிறுத்தப் பட்டது.

2015 ல் சென்னை உயர்நீதி மன்றம்  சட்ட ஒழுங்கு கெடும் என்பதாலும் குழப்பம் விளையும் என்பதாலும்  தேசிய கீதம்  கட்டாயமாக ஒலிப்பதற்கு  எதிராக தீர்ப்பளித்தது .

பா ஜ க ஆட்சியில் இருப்பதால் இந்த உத்தரவா?    இயல்பாகவே அவர்கள் இதை வரவேற்பார்கள்.

அவசர நிலை பிரகடனம் பிறப்பிக்கப் பட்ட போது இப்படித்தான் தேசபக்தியை நிரூபிக்க புது புது வழிகளை ஆட்சியில் இருந்தோர் அறிமுகப் படுத்தினர்.

மொரார்ஜி தேசாய் , இந்திரா காந்தி ஆட்சிகாலத்தில் நடந்தவை எல்லாம் மோடி ஆட்சி காலத்தில் வேறு வேறு வடிவங்களில் அமுலாக்கம் பெறுகின்றன.

ரூபாய் நோட்டு செல்லாது என்ற உத்தரவிலும் தங்கத்துக்கு கட்டுப்பாடு விதிக்கும் திட்டத்திலும்  அதுதான் தெரிந்தன.

இதை எப்படி அமுல் படுத்துவார்கள் என்பதுதான் தெரியவில்லை.

சொலி சொராப்ஜி , ராஜீவ் தவான் போன்ற மூத்த வழக்கறிஞர்கள் இதை கடுமையாக கண்டித்து கருத்து சொல்லி இருக்கிறார்கள்.

தேசிய கோடி தேசிய கீதம்  போன்ற அரசியல் சட்ட இலட்சியங்களுக்கு கட்டுபட வேண்டிய குடிமகனின் கடமையை அரசியல் சட்ட பிரிவு 51  விதிக்கிறது.

ஆனால் ,       இது நீதிமன்றத்தின் வேலையல்ல என்பது முதல் ஆட்சேபணை.

அரசு கொள்கை முடிவு எடுத்து அமுல் படுத்த வேண்டிய காரியத்தை நீதிமன்றம் முன்னெடுக்க வேண்டிய அவசியம் என்ன வந்தது. ?            முன்பே சொல்லப் பட்ட தீர்ப்புகளை சரியாக பின்பற்றியிருக்கிறார்களா?

திரையில்   தேசிய கீதம் பாடப்பட்டு முடிந்தவுடன்  உள்ளே நுழைபவர்கள் எண்ணிக்கைதான் அதிகமாகும்.   கடைசியில் போட்டால் படம் முடியும் முன்பே வெளியே வந்து விடுவார்கள்.   அதைத்தானே முன்காலங்களில் பார்த்தோம்.

தேசிய கீதம் என்பது புனிதமானது.   மரியாதை தர வேண்டிய கடமையை கேளிக்கை கூடத்தில் அமுல் படுத்த முனைந்தால் அங்கே அவமரியாதை நிகழ்ந்தால் யார் பொறுப்பேற்பது?

தியேட்டர் முதலாளிகள் ரசிகர்களை கட்டுப் படுத்த முடியுமா?       நடவடிக்கை எடுப்பது  சாத்தியமா?  இதற்கென ஆட்களை நியமித்தால் அதன் செலவை யார் ஏற்பது?

முல்லிம்கள் இறைவனைத்தவிர யாருக்கும் தலை வணங்க மாட்டோம்  என்பார்கள்.    எழுந்து  நிற்பார்களே தவிர   தலை குனிய மாட்டார்கள்.      அதை அவமரியாதை என்று எடுத்துக் கொள்ள முடியுமா ?

ஏற்கனெவே வந்தே மாதரம் பாடலை தேசிய கீதமாக்க வேண்டும் என்று சிலர் கோரி வருகிறார்கள்.

தாகூர் எழுதிய வங்க மொழிப் பாடலை விட சமஸ்கிருதத்தில் இருக்கும் வந்தே மாதரம் பாடல் தான் தேசிய கீதம் ஆகும் தகுதி பெற்றது என்பவர்கள் அவர்கள்.

இந்திய ஜனநாயகம் வேற்றுமையில் ஒற்றுமை என்னும் கோட்பாட்டில் வேரூன்றி இருக்கிறது என்பதை மறந்தால் ஆபத்து ஜனநாயகத்துக்கு மட்டுமல்ல, ஒற்றுமைக்கும்தான்.

தேசபக்தி உள்ளத்தில் தானாக ஊற்றெடுக்க வேண்டும்.    இது என் நாடு  என்ற உணர்வு இயல்பாக வர வேண்டுமே தவிர பிறர் சொல்லிக் கொடுத்தோ கட்டாயப் படுத்தியோ வர வேண்டிய ஒன்றல்ல.

இந்த உண்மை உச்ச நீதிமன்றத்துக்கு தெரியாதா?     தனது எல்லை என்ன என்பதை அறியாததா உச்ச நீதி மன்றம். ?

மறுபரிசீலனை செய்யப்  பட வேண்டிய தீர்ப்பு இது.