ஜெயலலிதா ………
திரையில் ஒளிவிட்டு மின்னிய நட்சத்திரம் . சொகுசான வாழ்க்கைக்கு சொந்தக்காரர். மெத்தப் படித்தவர்.
ஒளிவு மறைவின்றி தன் வாழ்க்கையை தன் விருப்பத்துக்கு அமைத்துக் கொண்டவர். சுய சிந்தனையாளர். எவரையும் ஏமாற்றாமல் தான் மட்டுமே ஏமாந்தவர்.
பிடிவாதக்காரர். தான் செய்வது சரியோ தவறோ தன் மனதுக்கு சரி என்று பட்டால் தொடர்ந்து அதையே செய்பவர்.
எம்ஜியாரின் வாரிசாக தமிழக அரசியலில் நுழைந்தார். எம்ஜியார் திராவிட கட்சியின் உறுப்பினர். பார்ப்பனீய ஆதிக்கத்தை எதிர்ப்பதும் சுயமரியாதை கொள்கைகளை கடைப் பிடிப்பதும் அந்த இயக்கத்தின் கொள்கைகள் என்பதால் அதற்கு எதிராக எம்ஜியார் செயல்பட்டதில்லை .
பெரியார், அண்ணா வழியில்தான் எம்ஜியார் அரசியல் பயணம் அமைந்தது.
ஒன்றே குலம் ஒருவனே தெய்வம் என்ற கொள்கை கொண்ட திராவிட கட்சியில் பார்ப்பனீய ஆன்மிகத்தை அரசல் புரசலாக பின்பற்றுவார்களே தவிர மிகவும் வெளிப்படையாக அல்ல.
ஆனால் எம்ஜியாரின் மறைவுக்குப்பின் திராவிட கட்சியின் தலைமைப் பீடத்தை பிடித்த ஜெயலலிதா பார்பனீய இந்துத்துவத்தை தன் அளவில் தீவிரமாக வெளிப்படையாக பின்பற்றினார். எனவே அவரின் ஆதரவு தேவைப்பட்ட தொண்டர்கள் அவரை பின்பற்றி அதையே வெளிப்படையாக பின்பற்றினார்கள். தோழி சசிகலாவும் அவர் வழியில் தீவிர பார்பனிய இந்துத்துவ பக்தரானார்.
பெரியார் பிறந்த நாளில் ஜெயலலிதா மாலை போட்டு மரியாதை செய்வார். அண்ணா பிறந்த நாளில் விழா கொண்டாட அழைப்பு விடுப்பார். இட ஒதுக்கீட்டு கொள்கையை பார்ப்பனீயத்தின் விருப்பத்துக்கு மாறாக ஆதரிப்பார். கி வீரமணியே ‘ சமூக நீதி காத்த வீராங்கனை’ என்று பட்டம் கொடுக்கும் அளவுக்கு இட ஒதுக்கீடு கொள்கையை அமுல்படுதினார்.
சாதி, சமய பாகுபாடுகளை தாண்டி விசுவாசம் ஒன்றையே அளவுகோலாக்கி அனைவரையும் அரவணைத்தார்.
எல்லாரும் எல்லாமும் பெறவேண்டும் என்ற நோக்கில் அரசின் கஜானாவை ஏழைகளையும் சாமானியர்களையும் நோக்கி திறந்து விட்டார்.
தனது ரத்த சொந்தங்களை நெருங்க அனுமதிக்கவில்லை. அதனால் அவர் எவ்வளவு சொத்து சேர்த்தாலும் எல்லாம் யாருக்காக என்று மக்களே கேட்க ஆரம்பித்தார்கள். அதை ஒரு பொருட்டாகவே மக்கள் பாவிக்க வில்லை.
ஆமாம் நான் பாப்பாத்திதான் என்று சட்ட மன்றத்திலேயே அறிவித்தவர். ஆனால் அந்த அடிப்படையில் யாரையும் இழிவுபடுத்தாதவர்.
துணிவின் பிரதி பிம்பம் அவர். விளைவைப் பற்றி கவலைப்படாமல் முயற்சிகளை தொடர்ந்தவர்.
தாய்க்குலத்தின் அளப்பரிய அன்பைப் பெற்றவர். ஆணாதிக்க சமூகத்தில் ஒரு பெண்ணால் அரசாள முடியும் என நிரூபித்தவர்.
அறுபத்தெட்டு வயதில் மறைவார் என யாரும் எதிபார்த்திருக்க மாட்டார்கள். எழுபத்து ஐந்து நாட்கள் போராட்டத்துக்கு பின் , அம்மா , மறைந்து விட்டார்.
மறைவு கேட்டு மரித்தவர்கள் பலர். அந்தளவு மக்கள் மனதில் இடம் பிடித்தவர்.
தனக்கென தனி இடம் பிடித்த அவரின் இடத்தை நிரப்ப யாராலும் முடியாது.
எதிர்காலம் என்னாகும்? என்னவானாலும் ஆகட்டும். !
அம்மாவின் ஆன்ம சாந்திக்காக நாடே பிரார்த்திக்கிறது.