காஷ்மீரில் இந்து முஸ்லிம் கூட்டாட்சி ! வென்றது மோடியா? முப்தியா?

                இந்தியாவில் முஸ்லிம் பெரும்பான்மை மாநிலம்

 காஷ்மீர் மட்டுமே!

                 இந்துக் கட்சி என்று பெயர் வாங்கிய பா.ஜ.க.. முஸ்லிம் பிரிவினைவாத கட்சி என்று பெயர் வாங்கிய மக்கள் ஜனநாயககட்சியோடு கூட்டணி வைத்து ஆட்சியில் பங்கு பெற்று அரசு அமைத்திருப்பது மோடியின் வெற்றியா?  அல்லது முப்தி முஹம்மது சயீதின் வெற்றியா? 
                 காங்கிரசோடு கூட்டணி அமைத்து ஆட்சி அமைக்காமல்  எதிரியான பா.ஜ.க.வோடு கூட்டணி அமைத்தது  முப்தி முகமது சயீதின் ராஜ தந்திரம் என்றாலும் மத்தியில் ஆட்சியில் உள்ள பா.ஜ..க.வை பகைத்துக் கொண்டு ஆட்சி நடத்தி சாதிப்பது கடினம் என்பதே  இந்த முடிவுக்கு காரணம் என்பதே உண்மை. 
              தேர்தல் அமைதியாக நடக்க பாகிஸ்தானும் ஹூரியத் அமைப்பும் காரணம் என்ற முப்தியின் பேச்சும் பாராளுமன்ற தாக்குதல் குற்றவாளி அப்சல் குருவின் உடலை அவரின் உறவினர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எதிர்பார்த்த படியே புயலைக் கிளப்பினாலும் இரு தரப்புமே சாதுரியமாக பிரச்சினை பெரிதாகாமல் பார்த்துக் கொண்டார்கள். 
               தேர்தல் அமைதியாக நடந்ததற்கு தேர்தல் கமிஷனும் ராணுவமும் காஷ்மீர் மக்களுமே காரணம் என்றும் குருவின் உடலை ஒப்படைக்கும் பேச்சுக்கே இடமில்லை என்றும் பா.ஜ.க.தெளிவாக தெரிவித்து பிரச்சினையை முடித்துக் கொண்டது. 
                 முப்தியை பொறுத்தவரை எல்லா தரப்பையும் அனுசரித்துப் போக வேண்டிய நிலையில் அவர் இருப்பதை மறுக்க முடியாது. 
                     எந்த கோணத்தில் பார்த்தாலும் நடந்திருப்பது நல்லதற்கே என்றே கருத வேண்டி உள்ளது. 
                      அதை உறுதி படுத்த வேண்டிய கடமை ஆட்சியில் பங்கு பெற்றிருக்க கூடிய பா.ஜ.க. மற்றும் மக்கள் .ஜனநாயக .கட்சியினருக்கே உள்ளது..

வி.வைத்தியலிங்கம் (Vaithiyalingam.V)