நிரந்தர நதி நீர் தீர்ப்பாயம் அமைக்க திட்டமிடுகிறது மோடி அரசு.
மூன்றாண்டுகளுக்குள் தீர்வைக்காண அது உதவும் என்று அரசு நம்புகிறது
ஆனால் கடந்த கால அனுபவம் எதையும் இவர்கள் கணக்கில் எடுத்துக் கொள்ள வில்லை என்பதையே இது காட்டுகிறது.
காவிரி நதி நீரைப் பெற்றுத் தருவதில் மத்திய அரசு காட்டி வரும் அருவருக்கத் தக்க அரசியல் இவர்கள் எதையும் செய்வார்கள் என்ற உருவத்தை ஏற்படுத்தி விட்டதே?
இன்று வரை கர்நாடகா 109 டி எம் சி நீர் தரவேண்டும் இறுதி தீர்ப்பின் படி. அது கிடைத்தால் இந்த ஆண்டு டெல்டா விவசாயிகள் பிழைத்துக் கொள்வார்கள். இன்று பயிர் காய்ந்து போய் செத்து மடிகிறார்கள்.
தீர்ப்பை அமுல்படுத்த மேலாண்மை வாரியமும் ஒழுங்காற்றுக் குழுவும் அமைப்பதில் மத்திய அரசு காட்டி வரும் தில்லு முல்லு தயக்கம் எதை காட்டுகிறது? அரசியல் லாபம்தான் அவர்களுக்கு முக்கியம் என்பதை காட்ட வில்லையா?
இப்போது இருக்கும் எட்டு தீர்பாயங்கள் எல்லாம் நிரந்தர தீர்வை தந்து விட்டனவா?
எதுவும் நிரந்தரமல்ல என்பதுதான் இது வரையிலான அனுபவம்.
ஒப்புக்கொள்ளப் பட்ட தீர்ப்புகளையே ஒவ்வொரு பத்து அல்லாத இருபது ஆண்டுகளுக்கு பிறகு மறு பரிசீலனை செய்ய வேண்டி உள்ளது.
எல்லாம் சரி. மோடி அரசுக்கு நல்ல எண்ணம்தான் உள்ளது என்றால் காவிரி நதி நீர் மேலாண்மை வாரியத்தை அமைத்து விட்டு எப்போது வேண்டுமானாலும் நிரந்தர தீர்ப்பாயம் அமைக்கட்டும்.
மேலாண்மை வாரியம் அமைப்பதை தவிர்க்க இதை ஒரு சாக்காக பயன் படுத்தும் முயற்சியை ஒரு போதும் ஏற்க முடியாது.
நிரந்தர அமைப்பு அமைய இன்னும் ஐந்து ஆண்டுகள் ஆகுமென்றால் அது வரை இறுதி தீர்ப்பை பெற்றவர்கள் பொறுத்திருக்க வேண்டுமா?
தேசிய நதிநீர் கட்டமைப்பு மசோதா 2016, National Water Framework Bill 2016 , தேசிய நதிநீர் கொள்கை National Water Policy 2012 ஆகிய முயற்சிகளின் மூலம் நதிகளை தனியார் மயமாக்கி மாநிலங்களின் அதிகாரங்களை பறித்து பன்னாட்டு கம்பெனிகளிடம் கொடுக்க திட்டமிடுகிறது மத்திய அரசு.
மாநிலங்களின் அதிகார பறிப்பு, மத்திய அதிகார குவிப்பு , பன்னாட்டு கம்பெனிகளிடம் ஒப்படைப்பு – இதுதான் மத்திய அரசின் நீண்டகால திட்டம்.
ஆட்சிமாறினால் தவிர காட்சி மாறாது.