தாய் மொழி தவிர்த்து எந்த மொழியை கட்டாயப் படுத்தினாலும் அது திணிப்புதான்
எப்படியாவது இந்தியை ஏற்றுக்கொள்ள செய்ய வேண்டும் என்பவர்கள் என்ன சொல்கிறார்கள் ? இரண்டாவது மொழியாக அந்நிய மொழி ஆங்கிலத்துக்கு பதிலாக இந்தியை படித்தால்தான் என்ன ?
இந்தியை தாய் மொழியாக கொண்டவன் இந்தியையும் ஆங்கிலத்தையும் கற்றுக் கொண்டு உலகம் சுற்றப் போய்விடுவான். நாம் மட்டும் தமிழையும் இந்தியையும் மட்டும் கற்றுக்கொண்டு இந்தியாவிலேயே முடங்கி விடவேண்டும். இதுதானே திட்டம். ?
ஆங்கிலம் அந்நிய மொழி என்றால் எனக்கு தமிழ் தவிர்த்து எல்லா மொழிகளும் அன்னியம்தான்.
இந்தியோ , மராத்தியோ வங்காளியோ எதுவாக இருந்தாலும் தேவைக்கு ஏற்ப தமிழன் கற்றுக் கொள்வான்.
தமிழுக்கு வக்காலத்து வாங்குபவர்கள் தமிழை ஆட்சி மொழியாகவும் நீதிமன்ற மொழியாகவும் ஆக்குவார்களேயானால் பாராட்டலாம். அப்போது இந்தியோ ஆங்கிலமோ எதையோ இரண்டாவது மொழியாக கற்றுக் கொண்டு போய் விடுவேன்.
இந்தி பேசும் மாநிலத்தில் இருந்து இங்கு கூலி வேலைக்கு வருபவன் தமிழ் கற்றுக் கொண்டா வருகிறான். டெல்லியில் கூலி வேலை செய்யும் தமிழன் இந்தி கற்றுக் கொண்டா வேலைக்குக் போனான். ? போனபின் கற்றுக் கொள்ள வில்லையா?
என் தாய் நாட்டை என் தாய் மொழியில் வாழ்த்தி ஒலி முழக்கம் செய்ய முடியாது. பாரத் மாதா கீ ஜெய் என்றுதான் கோஷம் போட வேண்டும்.
உயர் நீதி மன்றத்திலோ உச்ச நீதி மன்றத்திலோ என் தாய் மொழியில் நான் வாதிட முடியாது . அதற்கு இந்தியோ ஆங்கிலமோ வேண்டும்.
வங்கி , அஞ்சல், மத்திய அரசின் அலுவலகங்கள் , இன்னும் பல துறைகளிலும் நான் தொடர்பு கொள்ள கருத்துப் பரிமாற என் தாய் மொழி தவிர்த்து இந்தி ஆங்கிலம் இரண்டில் ஒன்றில்தான் நான் பழகியாக வேண்டும்.
இதே நிலைமைதான் எல்லா இந்தி அல்லாத மற்ற மொழிக் காரர்களுக்கும்.
நான் இந்த நாட்டுக் காரன்தானா? சந்தேகம் வந்தால் தவறா?
இந்தியன் எல்லோரும் சமம் என்றால் மொழியை கற்றுக் கொள்ள வேண்டிய பளுவும் எல்லாருக்கும் சமமாகத் தானே இருக்க வேண்டும். இந்தி அல்லாதவரை ஏமாற்றத் தானே மும்மொழித் திட்டம். !
இதுவரை எந்த இந்திக்காரன் தமிழ், தெலுகு, கன்னடம் , ஒரியா என்று கற்றிருக்கிறான் ?
இந்தியை எதிர்த்து விட்டு ஆங்கிலத்தை புகுத்தியதுதான் இந்தி எதிர்ப்பு போரின் சாதனை என்று எழுதுபவர்களின் உள்நோக்கம் ஆங்கிலத்துக்கு பதிலாக இந்தியை கற்றுக் கொள்ளுங்கள் என்பதுதான்.
தமிழனுக்கு எது வேண்டும் என்பதை அவனே தீர்மானித்துக் கொள்ளட்டும்.
முதலில் தமிழுக்கும் ஏனைய அட்டவணை எட்டில் கண்ட எல்லா இந்திய மொழிகளுக்கும் உரிய சம அந்தஸ்தை ,ஆட்சியிலும் நீதிமன்றத்திலும் தந்து விட்டு பிறகு உபதேசம் செய்ய வாருங்கள்.
நான் என் நாட்டில்தான் வாழ்கிறேன் என்ற உணர்வு முதலில் எனக்கு வரட்டும். அதற்கு உதவுங்கள்.
பிறகு உபதேசிக்கலாம்..