122 வாக்குகளை பெற்று எடப்பாடி பழனிசாமி வெற்று பெற்று முதல்வர் பதவியை தக்க வைத்துக் கொண்டார். தற்காலிகமாக.
சபாநாயகர் தனபால் ஏன் ரகசிய வாக்கெடுப்புக்கு ஒப்புக் கொள்ளவில்லை ?
அப்படி நடத்தினால் கூவத்தூரில் இருந்து பத்திரமாக அழைத்து வந்த சட்ட மன்ற உறுப்பினர்கள் எத்தனை பேர் மாறி வாக்களிப்பார்கள் என்பது யாருக்குமே தெரியாது.
ஓ பி எஸ் அணியில் பதினோரு பேருக்கு மேல் தேறவில்லை.
மத்திய அரசின் , மோடி அரசின் , தோல்விதான் இது. அவர்களால் அதற்கு மேல் ஓ பி எஸ் அணிக்கு ஆள் சேர்க்க முடியவில்லை.
ஸ்டாலின் நடத்திய போராட்டம் அவருக்கானது அல்ல. பழனிச்சாமி தோற்றால் திமுக ஆட்சிக்கு வந்து விடுமா என்ன?
ஆனால் சசிகலா ஜெயிலில் இருந்து ஆட்சி செய்வார் என்பது உறுதி செய்யப் பட்டிருக்கிறது.
இது பெருமை தரக் தக்கதா?
கவுண்டர் ஒருவர் தமிழக முதல்வராக ஆக முடிந்தது வேண்டுமானால் சாதனையாக பேசப் படலாம்.
அவர் யாரை பிரதிநிதித்துவப் படுத்துகிறார் என்பது முக்கியம் அல்லவா?
ஊழல் குற்றவாளி என்று உச்ச நீதி மன்றத்தால் உறுதி செய்யப் பட்ட ஜெயலலிதாவின் ஆட்சியை தொடர்வேன் என்கிறார் அவர்.
சசிகலா அணியாக இருந்தாலும் ஓ பி எஸ் அணியாக இருந்தாலும் எல்லாரும் ஊழல் அணிதானே?
வரும் மாதங்களில் பழனிசாமி எடுக்கும் நடவடிக்கைகள் அவரது ஆட்சி தொடர வேண்டுமா அல்லது உடனே முடிக்கப் பட வேண்டுமா என்பதை தீர்மானிக்கும்.
பழி வாங்கும் நடவடிக்கைகளில் கவனம் செலுத்தாமல் வாய்ப்பை பயன் படுத்தி கொஞ்சமாவது நல்ல பெயர் வாங்க முயற்சித்தால் வரவேற்கலாம்.
அள்ளிக் குவித்தவர்கள் எப்படி உடனே நிறுத்துவார்கள்?
ஜானகி தோற்றபின் அரசியலை விட்டே ஒதுங்கினார். ஓ பி எஸ் ஒதுங்குவாரா? கூட இருப்பவர்கள் ஒதுங்க விடுவார்களா?
ஓ பி எஸ் -தீபா கூட்டணி பெரிதும் சாதிக்கும் என்று சொல்லி திரிபவர்கள் தங்களை தாங்களே ஏமாற்றிக் கொள்கிறார்கள்.
தமிழர்கள் நிலைமை கொஞ்சம் கவலைக்கிடம்தான் .