சபாநாயகர் தனபால் மீது நம்பிக்கையில்லா தீர்மானத்துக்கு ஒப்புதல் கேட்டு அவரிடமே மனு கொடுத் திருக்கிறது திமுக.
ரகசிய வாக்கெடுப்பிற்கு ஒப்புதல் தராமல் நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்தி அரசை வெற்றி பெற வைத்ததுடன் இல்லாமல் தி மு க மீது சாதி சார்ந்த குற்றச்சாட்டையும் சுமத்தியதால் திமுக நம்பிக்கையில்லா தீர்மானத்தை முன்வைக்கிறது.
அவரை அகற்றுவது மட்டுமல்ல நோக்கம். இந்த தீர்மானம் சபையில் விவாதத்துக்கு வரும். அப்போது எடப்பாடி ஆதரவு உறுப்பினர்கள் சபைக்கு வந்துதானே ஆகவேண்டும்.
இப்போதே தொகுதிக்கு செல்ல முடியாமல் தவித்துக் கொண்டிருக்கும் அவர்கள் மீண்டும் ஒரு போராட்டத்தை சட்ட மன்றத்துக்கு உள்ளேயே நடத்த தயாராக வேண்டும்.
அப்போது என்னவெல்லாம் நடக்குமோ?
விவாதத்தை துணை சபாநாயகர் தலைமை தாங்கி நடத்த வேண்டும். அதற்குள் சபை நடவடிக்கைகளை தொலை காட்சியில் ஒளிபரப்ப அனுமதிக்க வேண்டும். இல்லாவிட்டால் அரசின் அனுமதி பெற்று ஒரு தொலைகாட்சி மட்டும் வெளியிடும் காட்சிகளை மற்றவர்கள் ஒப்புக் கொள்ள மறுப்பார்கள்.
அதற்குள் யாரோ சில உறுப்பினர்களுக்கு மனமாற்றம் வந்து மாறி வாக்களித்தால் அது அரசின் மீதான நம்பிக்கையின்மையாக கருதப் படும்.
கட்டுப்பெட்டியான உறுப்பினர்கள் ஆதரவு நிலைத்தன்மை கொண்டதல்ல.
உள்ளாட்சி தேர்தல்கள் வேறு மே மாதத்திற்குள் நடத்தி முடிப்பதாக அரசு நீதி மன்றத்தில் ஒப்புக் கொண்டிருக்கிறது.
ஊருக்குப் போக முடியாத அல்லது தன்னம்பிக்கை இல்லாத உறுப்பினர்கள் என்றைக்கு வேண்டுமானாலும் மாறுவார்கள்.
உண்மையில் நம்பிக்கையில்லா தீர்மானம் அரசுக்கு அடுத்த கண்டம்தான் .