அரசியலுக்கு ரஜினி; வந்தால் மகிழ்ச்சி வராவிட்டால் மகிழ்ச்சியோடு நிம்மதி !!!!

rajinikanth
rajinikanth

இருபத்தி ஐந்து ஆண்டுகளாக ஒரு நடிகர் அரசியலுக்கு வருவாரா மாட்டாரா என்ற விவாதம் நடந்து வருவதே ஒரு அவமானம்.

அரசியலுக்கு வருவது என்றால் அவருக்கென்று ஏதாவது ஒரு அரசியல் சார்ந்த கொள்கை இருக்கவேண்டும்.   இதுவரை ஏதாவது இருந்திருக்கிறதா?

நல்லவர் .  சிறந்த நடிகர். இதய சுத்தி கொண்டவர்.   பணம் சம்பாதிக்க அரசியலுக்கு வர வேண்டும் என்ற எண்ணம்  இல்லாதவர்.       ஆனால் எந்த கொள்கையிலும் தன்னை அடையாளப் படுத்திக்கொள்ளாதவர் .

இது போதாதா அரசியலுக்கு வருவதற்கு என்று கேட்கும் தமிழர்கள் இருக்கத்தான் செய்வார்கள்.

அவர் தமிழரல்ல.   கன்னடர் அல்ல. மராட்டியருமல்ல.   இந்தியர்.

தமிழரல்லாத அடையாளம் தானே தமிழர்களை ஆள்வதற்கு வேண்டும்.   அதைத்தானே இதுவரை வரலாறு காட்டியிருக்கிறது.

எனவே ரஜினிக்கு இந்த ஆசை துளிர் விட்டிருந்தால் ஆச்சரியப் பட ஒன்றுமில்லை.

ஆளுமை மிகுந்த கலைஞர் ஓய்வில்.   ஜெயலலிதா  மறைந்து விட்டார்.   தமிழக அரசியலில் வெற்றிடம் கண்டிருப்பார் ரஜினி.

புலி  வருது புலி வருது என்ற எச்சரிக்கை குரல்கள் எப்போதுமே பொய்த்து விடும் என்று சொல்ல முடியாது. என்றாவது உண்மையாகலாம்.

தமிழ் நாட்டின் தலை எழுத்து அப்படி இருந்தால் யார்தான் தடுக்க முடியும்.?

எத்தனை கேவலங்களைத் தான் தமிழன் தலையில் சுமக்க வேண்டும் என்று இறைவன் எழுதி இருக்கிறானோ?

தமிழ்ச் சாதித் தலைவர்கள் எங்காவது போய் சுவற்றில் முட்டிக் கொள்ளட்டும்!

அவர்கள் தயவு செய்து அரசியலில் இருந்து விலகி கொண்டாவது கொஞ்சமாவது தன்மானம் உண்டு என்று நிரூபிக்கட்டும் .

சக தமிழர்களை ஏற்றுக் கொள்ளாத நண்டு சாதி தலைவர்கள் இருக்கும் வரை தமிழர்கள் சாதியிலிருந்து எந்த தலைவனும் தோன்றப் போவதில்லை.

தகுதி தனக்கு மட்டுமே உண்டு என்ற அகந்தை எல்லா தமிழ் தலைவர்களுக்கும் இருக்கிறது.

எதிரியையும் அடையாளம் காணத் தெரியாத இவர்கள் எப்படி தமிழர் உரிமைகளை காப்பார்கள்?

கோவாவிலும் அருணாச்சல பிரதேசத்திலும் மக்கள் தீர்ப்பையே மாற்றி எழுதியவர்கள் பா ஜ க வினர். அவர்கள் பார்வை தமிழகம் நோக்கி திரும்பியிருக்கிறது .

விலை போகத் தயாராக இருப்பவர்களையும் காட்டிகொடுக்க தயாராக இருப்பவர்களையும் மிரட்டலுக்கு அஞ்சி ஆட்சியில் இருப்பவர்களையும் ஒருங்கிணைத்து தமிழ் நாட்டில் காலூன்ற தயாராக இருக்கிறது பா ஜ க.

மோடி-அமித்ஷா  அணுகுமுறைகள் தமிழகத்தை சாதி மதத்தால் பிளவு படுத்த முனையும் என்பதில் சந்தேகம் இல்லை.

அகில இந்தியாவையும் வெற்றிகண்ட பல பேரரசுகள் தக்கண பீடபூமியை தொட்டதில்லை.   மகத மௌரிய முகலாய பேரரசுகளின் கதை இதுதான்.     ஆங்கிலேயர்கள் மட்டுமே அதை உடைத்தவர்கள்.    இப்போது இந்துத்துவ பேரரசை நிர்மாணிக்கும் முயற்சியில் இருக்கும் மோடி-அமித்ஷா கூட்டணி திராவிடத்தின் மற்ற மூன்று கூறுகளை வென்றாலும் தமிழ் நாட்டையும் வெல்ல முடியுமா என்பதை வரலாறு தான் விடை கூற வேண்டும்.

தமிழரை தமிழரே ஆள வேண்டும் என்பது அநியாயமான ஆசையா?

மாற்று மொழிக்காரர் ஆளும்  அக்கிரமம் கர்நாடகத்தில் ஆந்திராவில் கேரளாவில் நடந்த துண்டா ?

ரஜினி சூப்பர் ஸ்டாராக மக்கள் மனதில் நிலைத்து விட்டவர்.   அதில் எதிரிகளே கிடையாது.   அரசியலுக்கு வந்தால் நிறைய எதிரிகள் வருவார்கள்.     அவர்களை எதிர்கொண்டு மக்கள் சேவை செய்ய  வேண்டும் என்ற கட்டாயம் ரஜினிக்கு உண்டா?

மக்கள் தொண்டு செய்ய அரசியலை தவிர வேறு வழிகளே இல்லையா?

மக்கள்  தலையில் ஏறி நின்று மட்டுமே அவைகளுக்கு சேவை செய்ய வேண்டுமா?

கடைசி காலத்தை நிம்மதியாக கழிக்காமால் அரசியலில் நுழைந்து போராடுவதில்தான் அவருக்கு மகிழ்ச்சியா?

ரஜினி அவர்களே,

அரசியலுக்கு வருகிறீர்களா  மகிழ்ச்சி!!!

வரவில்லையா  மகிழ்ச்சியோடு கலந்த நிம்மதி.