அகில இந்திக் கட்சிகள்

காங்கிரசு , பாரதீய ஜனதா ,ஜனதா தளம் ( எஸ் ) ,கம்யுனிஸ்டு , போன்ற எந்த அகில இந்தியக் கட்சியாக இருந்தாலும் சரி ,அது இந்தி தெரிந்த வர்களுக்கான கட்சிகளாகதான் இருக்கின்றனவே தவிர , மாநில மொழிகள் மட்டும் தெரிந்தவர்களுக்கான கட்சிகளாக இல்லை.
தாய்மொழி தவிர்த்த மற்றும ஒரு மொழியை கற்றால் தான் , அது இந்தியோ அல்லது ஆங்கிலமோ , இந்தியனாக வாழ முடியும் என்பது கொடுமை அல்லவா ? ஆங்கிலம் மட்டும் இல்லையென்றால் இந்தி பேசாத மக்கள் தவித்துப் போவார்கள்.
இந்து, டைம்ஸ் ஆப இந்தியா , ஹிந்துஸ்தான் டைம்ஸ் , டெக்கான் , க்ராநிகில் , போன்ற ஆங்கில பத்திரிக்கைகள் மட்டும் இல்லையென்றால் இந்தி பேசாத மக்கள் வடநாட்டு செய்திகளையே ஆராய முடியாது.   தினமணி, தினத்தந்தி ,தினகரன் போன்ற நாளிதழ்கள் தரும் அரைகுறை செய்திகளையே நம்பி இருக்கவேண்டிய நிலை ஏற்படும். இந்த நாளிதழ்கள் செய்யும் மொழிபெயர்ப்பு வேலையைத்தான் அகில இந்திய கட்சிகள் ,அமைப்புகள் அனைத்தும் செய்ய வேண்டும் என்கிறேன்.
எத்தனை அகில இந்தியக் கட்சிகளில் இந்தியோ ஆங்கிலமோ தெரியாத தாய் மொழி மட்டுமே தெரிந்த ,இந்தியர்கள் அகில இந்திய அளவில் தெரிந்த தலைவர்களாக, இருக்கிறார்கள்.    ஓரிருவர் இருந்தால் அரிது.   காமராசர் இருந்தார் என்றால் அவரும் ஓரளவு ஆங்கிலத்தை கற்றுக் கொண்டதனால் அது முடிந்தது.     விதிவிலக்குகள் விதிகள் ஆக முடியாது .
கர்நாடக, ஆந்திர ,கேரளா , மராட்டிய, வங்காள மாநிலத்தவர்கள் கூட இந்தியை வைத்துக் கொண்டுதான் சமாளிக்கிறார்கள் என்றால் அவர்களது தாய் மொழிகளில் சமஸ்க்ரிதம் கலப்பு அதிகம் என்பதால் இந்தியை எளிதில் கற்றுக் கொள்ள முடிகிறது.   அவர்களிலும் கூட தாய் மொழி மட்டுமே தெரிந்த அகில இந்திய தலைவர்களை அடையாளம் காண முடியாது.
நான் பாஜகவில் இருந்தபோது அகில இந்திய விவசாய அணி கூட்டங்களுக்குப் போனபோது , எல்லாரும் இந்தியிலேயே பேசினார்கள்.  ஒன்றும் புரியவில்லை.   அப்போது அகில இந்திய தலைவராக இருந்த ஜனா. கிருஷ்ணமுர்த்தி , தலையிட்டு , தமிழ் நாட்டில் இருந்து வைத்தியலிங்கம் வந்திருக்கிறார் எனவே ஆங்கிலத்திலும் பேசுங்கள் என்று சொல்லிய பிறகும் அங்கே மொழி பெயர்த்து சொல்ல ஆளில்லை.    பயணம் வீணானதுதான் மிச்சம்.
பாராளுமன்றதிலேயும் அதுதான் நடக்கிறது.     அரசியல் சட்டத்தின் எட்டாவது பட்டியலில் கண்ட மொழிகள் அனைத்தும் இந்தியர்களின் மொழிகள் தானே.  அவர்களுக்கு தங்கள் தாய் மொழியில் தங்கள் நாட்டு பாராளுமன்றத்தில் உறுப்பினராக இருந்தாலும் சரி பேச முடியாது, அதற்கு முன்பே ஒப்புதல் பெறவேண்டும், மொழி பெயர்க்க அவகாசம் வேண்டும் என்றெல்லாம் விதிகள் இருந்தால் , நினைத்ததை பேச முடியாமல் போனால் இது என் நாடு என்ற உணர்வு எப்படி வரும்?
என்னை வைத்துக்கொண்டு நாலு நண்பர்கள் மலையாளத்திலோ தெலுங்கிலோ கன்னடத்திலோ உருதிலோ பேசினால் நான் அன்னியர் மத்தியில் இருப்பதாக உணர்கிறேன். அது என் தவறா?    அவர்கள் தவறா?
எனக்கு பஞ்சாபி ,உருது, இந்தி மராட்டி, வங்காளி ,ஓடியா ,தெலுகு, கன்னடம்,   எல்லாமே ஒன்றுதான் அதாவது அன்னியம்தான்.      பேசினால் புரியாது ஆங்கிலம் கற்பிக்கப் பட்டதால் விதிவிலக்கு.
தாய்மொழி தமிழேகூட சொல்லிக்கொடுத்தால்தான் எழுத படிக்க  தெரியும்.   ஆனால் சொல்லிக் கொடுக்காமலே என் தாய் தந்தையருடன் உறவாடியே என் தாய் மொழியை பேச முடியும்.
எல்லா மாநிலங்களிலும் அகில இந்திய கட்சிகள் செல்வாக்கு இழந்து வருவதற்கு முக்கிய காரணம் மொழிதான்.  இந்தித் தலைவர்கள்தான்.  இவர்களால் நிர்வகிக்க படுகிற கட்சிகளில் இந்தி தெரியாதவர்களுக்கு இடம் இல்லாததால் ஆங்கிலம் தெரிந்த மக்கள் செல்வாக்கு இல்லாத நபர்கள் முக்கிய பொறுப்புகளுக்கு வந்து விடுகிறார்கள்.
எண்ணங்களை வெளிப்படுத்த மொழியை தவிர வேறு சாதனங்கள் இல்லை.   அதை இரவல் வாங்கி வெளிப்படுத்த முடியாது.
ஒற்றுமையைபற்றி யார் பேசினாலும் கேட்கிறவர்களுக்கு புரிய வேண்டும் என்ற உணர்வு வண்டும்.
பாரதிய ஜனதா , காங்கிரஸ், பகுஜன் சமாஜ், தேசியவாத காங்கிரஸ் , சி.பி.ஐ , சி.பி.ஐ (எம்) ஆகிய ஆறு கட்சிகள்தான் அகில இந்திய கட்சிகள். மாயாவதி, ராஜ்நாத் சிங் , சோனியா, சரத் பவார், சுதாகர் ரெட்டி , பிரகாஷ் கரத் தலைவர்கள். மராத்தி பேசும் பவார் , தெலுகு பேசும் ரெட்டி உள்பட அனைவருமே இந்தி அல்லது ஆங்கிலம் மூலம்தான் நிர்வாகம் செய்கிறார்கள்.   இவர்களோடு தொடர்பு கொள்ளும் மற்ற மொழி மட்டும் தெரிந்தோர் கருத்து பரிமாற்றம் செய்ய முடியாது.
இந்தியோ ஆங்கிலமோ தெரிந்தால்தான் அகில இந்தியக் கட்சிகளில் நிர்வாகிகளாக வர முடியும் செயல்பட முடியும் என்ற நிலைமை நீடிக்கும் வரை அகில இந்தியக் கட்சிகள் அகில இந்திக் கட்சிகளாகத் தான் காட்சி தரும்.  மாநிலங்களில் மெல்ல மெல்ல மறையும்.
வி.வைத்தியலிங்கம் (Vaithiyalingam.V)

+91-91766-46041