தமிழ்நாட்டில் 1967 ல் இருந்து இந்து சுயமரியாதை திருமணங்கள் சட்ட பூர்வமாக்கப் பட்டு விட்டன. அறிஞர் அண்ணா செய்த அரும்புரட்சி அது.
அது முதல் தமிழ் நாட்டில் நடைபெறும் திருமணங்களில் ஐம்பது சதத்துக்கு மேல் சுயமரியாதை திருமணங்கள் தான் நடை பெற்று வருகின்றன.
புரோகிதர்கள் சொல்லும் சமஸ்க்ரித மந்திரங்களின் பொருள் என்னவென்றே தெரியாமல் கண் மூடித்தனமாக சொல்வதை செய்து கடமையே என்று தாலி கட்டி திருமணம் செய்வதுதான் தமிழர் திருமணம் என்று கேவலமாக சொல்லிக் கொண்டிருந்தனர்.
அந்த கேவலத்தை மாற்றியவர்கள் பெரியாரும் அண்ணாவும்.
தமிழர் திருமணம் நடத்துவது எப்படி என்று 1937 லேயே மறைமலை அடிகள் வரையறை செய்து மணமக்கள் பெரியோர் முன்பு இறை நம்பிக்கையோடு உறுதி மொழி எடுத்துக் கொண்டு மணமகன் மணமகள் கழுத்தில் மங்கல நாண் அணிவிப்பதை அமுல் படுத்தினார்கள்.
இன்று நாட்டிலேயே மாலை மாற்றிக்கொண்டு, மோதிரம் மாற்றிக்கொண்டு , உறுதி மொழி எடுத்துக் கொண்டு , தாலி கட்டிக்கொண்டு, என்று ஏதாவது ஒரு முறையில் சாட்சிகள் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டால் சட்டப் படி செல்லும் என்று சட்டம் இருப்பது தமிழ் நாட்டில் மட்டுமே.
சுயமரியாதை திருமணங்கள் என்பன நாத்திக திருமணங்கள் அல்ல. இறை நம்பிக்கையோடு அவரவர் குடும்ப சடங்குகளை நடத்திக் கொண்டு முறையாக மங்கல நாண் அணிவித்து திருமணம் செய்வதுதான் தமிழர் திருமணம். எல்லா சாதிகளுக்கும் பொருந்தும் விதத்தில் ஒரு மண முறையை வகுத்துக் கொடுப்பது தமிழ் அறிஞர்களின் தலையாய பணி. அத்தகைய ஒரு அரசியல் , சாதி சமயம் சாரா பொது தமிழ் அறிஞர் அமைப்பை ஏற்படுத்துவது மிக மிக மிக அவசரம் அவசியம்.
இதே சட்டத்தை நாடு முழுதும் அமுல் படுத்தும் முயற்சிகளை தி மு க தொடர்ந்து எடுத்துக் கொண்டிருக்கிறது.
பழந்தமிழர்கள் தங்கள் வீடுகளிலேயே உறவினர்கள் முன்னிலையில் மங்கல நாண் அணிவித்து திருமணம் செய்வதை வழக்கமாக கொண்டிருந்ததை ஆரியர்கள் எப்படியோ மாற்றி விட்டார்கள்.
அதிலிருந்து மீண்டு மானமுள்ள மண முறைக்கு தமிழர் மாற வேண்டும் என்பது காலத்தின் கட்டாயம்.
நாம் கேட்கும் கேள்வி . நாட்டில் நடந்து கொண்டிருக்கும் சுயமரியாதை நடை முறையை ஏன் சினிமாவிலும் தொலைக்காட்சித் தொடர்களிலும் காட்ட மறுக்கிறீர்கள்? யார் தடுப்பது? சதியா? அறியாமையா?
இயக்குனர்களுக்கு நாட்டில் நடப்பது தெரியாதா?
தவிரவும் சுயமரியாதை திருமணங்களை எள்ளி நகையாடும் விதத்தில் கேவலமாக சித்தரிப்பதும் நடக்கும். அது நடந்தால் தமிழர்கள் கிளர்ந்தெழுந்து போராட வேண்டும்?
இயக்குனர்கள் சிந்திக்கட்டும்!!!