ஆளுநர் ஆய்வு செய்வது குடியரசுத் தலைவர் ஆட்சிக்கு முன்னோட்டமா?!!

banwarilal-purohit
banwarilal-purohit

வரலாற்றில் இல்லாத புதுமையாக தமிழக ஆளுநர் கோவையில் மாவட்ட ஆட்சியர்  மற்றும் அதிகாரிகளுடன் வளர்ச்சிப் பணிகள் குறித்து ஆலோசனை நடத்தினர்.   கொடுமை என்னவென்றால் உள்ளாட்சி அமைச்சர் எஸ் பி வேலுமணி யும் இதில் கலந்து கொண்டு ஆளுநர் வந்ததை  பெருமையாக பேசியதுதான்.

ஆளுநர்   பன்வாரிலால் புரோஹித் அசாம் , மேகாலயாவில் தான் இப்படித்தான் அடிக்கடி ஆய்வு செய்ததாக வேறு  நியாயம் கற்பிக்கிறார். எந்த மாநிலத்திலும் இப்படி ஆளுநர்கள் ஆய்வு செய்வதாக வரலாறே இல்லை.

டெல்லி, புதுச்சேரி போன்ற மாநிலங்களில் தான் இப்படி லெப்டினென்ட் கவர்னருக்கு அதிகாரமா மக்களால் தேர்ந்தெடுக்கப் பட்ட பிரதிநிதிகளுக்கா  என்ற சர்ச்சை வளர்ந்து வருகிறது. இது எதில் கொண்டு போய் விடும்?    ஆளுநர் நாளை உத்தரவிட்டால் அதை நிறைவேற்றுவதும் அமைச்சர்களின் கடைமை என்றாகிவிடுமா?

மாநிலத்தில் சுயாட்சி மத்தியில் கூட்டாட்சி என்று நாளும் குரல் கொடுத்துக் கொண்டிருக்கும் தமிழகத்தில் இப்படி ஒரு அவலம் நடைபெறுவதை எப்படி சகித்துக் கொள்வது.?

ஆய்வு செய்தால் தானே பாராட்ட முடியும் என்று கூடுதல் விளக்கம் தருகிறார் ஆளுநர்.   தான் தமிழ் படித்து வருவதாகவும் தமிழிலேயே பேச போவதாகவும் கூறினர். தமிழில் பேசுவது அதிகாரத்தை கையில் எடுத்துக்கொள்வதை நியாயப் படுத்தி விடுமா?

அரசியல் சட்ட பிரிவு  167 ன் படி  ஆளுநருக்கு  ஏதாவது தகவல் தேவைப்பட்டால் அதை முதல்வரிடம்தாம் கேட்டு பெற வேண்டும்,     தான் சொல்வது எதையும் முதல்வர் மூலம் தான் கையாள வேண்டுமே தவிர நேரடியாக எந்த அதிகாரியிடமும் தகவல் பெறவோ கட்டளை பிறப்பிக்கவோ ஆளுநருக்கு அதிகாரம் கிடையாது.

ஆளுநர் பதவி என்பது ஆட்டுக்கு தாடி போல என்று அறிஞர் அண்ணா கூறியது எவ்வளவு பொருத்தம்.. ! தமிழகத்தின் கிரண் பேடியாக புரோஹித் நிச்சயம் உருவாக வாய்ப்பே இல்லை. ஏனென்றால் இங்கே இருப்பவர்கள் தான் ஆளுநர் செய்வது எல்லாமே சரி என்பவர்கள் ஆயிற்றே?

டேக் இட் ஈசி என்கிறார் திண்டுக்கல் சீனிவாசன்  எஸ் பி வேலுமணி  செல்லூர் ராசு உதயகுமார் என எல்லா அமைச்சர்களும் நாங்கள் அடிமைகள் என்று மட்டும் சொல்லவில்லை அதை தவிர ஒரு அடிமை என்னென்ன சொல்ல முடியுமோ அவைகள் அனைத்தையும் சொல்லி விட்டார்கள்.

அ தி மு க எம் பி அன்வர் ராஜா மட்டும்தான் இது அதிகார அத்துமீறல் என்கிறார். சென்ற ஆண்டு உச்சநீதி மன்றம் ஐந்து நீதிபதிகள் கொண்ட பெஞ்ச் மூலம் ஆளுநர்கள் அதிகாரம் பற்றி கொடுத்த தீர்ப்பு எல்லாரையும் கட்டுப் படுத்தக் கூடியது.

ஆனால் கேள்வி கேட்க வேண்டியவர்களே அடங்கிப் போனால் தீர்ப்பு இருந்து என்ன பயன். ?இதுவரை முதல்வர் பழனிசாமி வாய் திறக்க வில்லை. இதேபோல் ஆய்வை எல்லா மாவட்டங்களிலும் மேற்கொள்வேன் என்று ஆளுநர் அறிவித்து இருப்பதுதான் பிரச்னை. ஆங்காங்கே மக்கள் கிளர்ந்து எழுந்து தான் இந்த  அதிகார அத்து மீறலை தடுக்க முடியும் என்ற சூழலை ஆட்சியாளர்கள் ஏற்படுத்த கூடாது.

மோடியின் மத்திய அரசுக்கு தெரியாமல் இந்த அத்து மீறல் நடக்க வாய்ப்பில்லை என்பதால் இதற்கெல்லாம் மத்திய அரசுதான் பொறுப்பேற்க வேண்டி வரும்.

அதுவும் சென்னை உயர்நீதிமன்றம் தகுதி நீக்கம்  வாக்கெடுப்பு உட்பட  ஏழு வழக்குகள் விசாரணையை துவங்கி விட்ட நிலையில் வர இருக்கும் தீர்ப்பு அரசை அசைக்கலாம் என்ற நிலையில் ஆளுநர் இந்த அத்து மீறலை தொடங்கி இருப்பது குடியரசு தலைவர் ஆட்சி அமுல்படுத்தப் படவேண்டிய  சூழ்நிலை எழுந்தால் எடுக்க நடவடிக்கை களை இப்போதே ஆளுநர் துவங்கி விட்டார் என்றுதான் மக்கள் புரிந்து கொள்வார்கள்.