கொளத்தூர் நகை கடையில் கொள்ளையடித்து சென்ற ராஜஸ்தான் நாதுராம் கும்பலை பிடிக்க தமிழ் நாட்டு காவல் துறையின் ஐந்து நபர் குழு அவர்களை நள்ளிரவு இரண்டு மணிக்கு பிடிக்க முற்பட்டபோது துப்பாக்கியால் சுடப் பட்டு ஆய்வாளர் பெரியபாண்டியன் சம்பவ இடத்திலேயே வீர மரணம் அடைந்திருக்கிறார் .
பெரிய பாண்டியன் அல்லது ஆய்வாளர் முனிசேகர் ஆகிய இருவரது துப்பாக்கி களில் ஒன்றில் இருந்த குண்டுதான் பெரிய பாண்டியனின் உயிரை பறித்துள்ளது .
தவறி விழுந்த துப்பாக்கியை எடுத்து கொள்ளையர்கள் தான் பெரியபாண்டியனை சுட்டார்கள் என்றுதான் முதல் தகவல்கள் தெரிவித்தன.
முதல் முறை சென்று சிலரை கைது செய்து அழைத்து வந்த தமிழ்நாட்டு போலீஸ் உள்ளூர் போலீசின் உதவியை நாடிபெற்று செயல் பட்டிருந்தது. என்ன நினைத்தார்களோ இரண்டாம் முறை சென்றபோது உள்ளூர் போலீசுக்கு தகவல் கொடுக்காமலேயே நாதுராமை பிடிக்க முயற்சி செய்து இருக்கிறார்கள். உள்ளூர் போலீஸ் தகவல் கொடுத்து விடும் என்ற சந்தேகமா?
இப்போது திடுக்கிடும் வகையில் ராஜஸ்தான் போலீஸ் பெரிய பாண்டியனை கொன்றது முனி சேகர் துப்பாக்கியில் இருந்த குண்டுதான் என்று சொல்லி முனிசேகர் மீது வழக்கு பதிவு செய்திருக்கிறார்கள்.
இந்த திடுக்கிடும் தகவலை ராஜஸ்தான் மாநில போலீஸ் கண்காணிப்பாளர் தீபக் பார்கவா தெரிவிக்கிறார்.
ஆனால் இதுபற்றி தமிழக போலீஸ் ஏன் இதுவரை அறிக்கை எதையும் தாக்கல் செய்ய வில்லை.?
எதிர்பாராமல் நடைபெற்ற விபத்து என்ற அடிப்படையில் விசாரணை சென்றால் கொலைக்குற்றத்தில் இருந்து நாதுராம் தப்பிக்க வழி ஏற்பட்டு விடும்.
இரண்டு மாநிலம் சம்பந்தப் பட்ட வழக்கில் இரு மாநில காவல் துறையினர் இடையே இருக்க வேண்டிய இணக்கம் இருந்திருக்கிறதா என்பதே கேள்விக்குறியாக எழுந்திருப்பது கவலைக்குரியது.
அதாவது தப்பிக்கும்போது முனி சேகர் நாதுராமை நோக்கி சுட்ட போது குறி தவறி பெரிய பாண்டியனை குண்டு தாக்கி இறந்தார் என்றால் இதில் நாதுராம் தப்பிக்க வழி இருக்கிறதா இல்லையா?
ஒரு காவல் ஆய்வாளர் துணிச்சலுடன் கொள்ளையன் ஒருவனை எப்படியாவது பிடிக்க வேண்டும் என்ற குறிக்கோளுடன் செயல் பட்ட போது எல்லாரும் ஒன்றிணைந்து செயல் பட்டிருக்க வேண்டும். போதிய ஆயுதங்களும் போதிய ஆட்களும் இல்லாமல் வெளி மாநிலம் ஒன்றில் இரவு நேரத்தில் தமிழக போலீசை இயக்கியது யார்?
நடந்து விட்ட குளறுபடிக்கு தமிழக காவல் துறையும் ஒரு வகையில் பொறுப்பாகிறது.
பெரிய பாண்டியன் குடும்பத்திற்கு அரசு அளித்திருக்கும் உதவித்துகை இரண்டு கோடி. பொதுமக்களும் உதவ வங்கி கணக்கு துவங்க அனுமதி அளித்திருக்கிறார்கள் .
என்ன செய்தாலும் ஈடு கட்ட முடியாத இழப்பு அவரது மரணம்.
நாதுராம் தங்கியிருந்த இடம் ராஜஸ்தான் போலீசுக்கு தெரிந்த பின் அவர்கள் என்ன நடவடிக்கை எடுத்தார்கள். ?
வடநாட்டு கொள்ளைக்காரர்கள் தான் இங்கு வந்து அக்கிரமம் செய்கிறார்கள் என்றால் அங்குள்ள காவல் துறையுமா பொறுப்பற்று இருக்கும்?
தவறு எங்கு நிகழ்ந்தது யார் அதற்கு காரணம் என்பதை பொதுமக்களுக்கு தெரிவிக்க தமிழக காவல் துறைக்கு கடமை இருக்கிறது.