வெற்றிவேல் வெளியிட்ட ஜெயலலிதா வீடியோ??!!

vetrivel
vetrivel

அப்போல்லோவில் சிகிச்சையில் இருந்தபோது சசிகலா எடுத்த ஜெயலலிதாவின் வீடியோ பதிவை தினகரன் அணியை சேர்ந்த எம் எல் ஏ வெற்றிவேல்  நேற்று வெளியிட்டார்.

அதில் ஜெயலலிதா படுக்கையில் இருந்தபடி இடது கையால் ஜூஸ் சாப்பிடுகிறார்.   வலது கையில் மருத்துவர்கள் பொருத்திய சாதனம் சுற்றப் பட்டிருக்கிறது.   டெலிவிஷன் பார்க்கிறார்.        கால்கள் இரண்டும் தெரிகின்றன.

தீவிர சிகிச்சை பிரிவில்  இருந்து மாற்றப் பட்டு சாதாரண அறையில் இருந்தபோது எடுத்தது என்றால் அவர் நல்ல நிலையில் தான் இருந்தார் என்பது வெளிச்சமாகிறது

இதை ஏன் சசிகலா இத்தனை நாள் மறைக்க வேண்டும் என்பதுதான் புரியவில்லை.

இது ஒன்றும் ஜெயலலிதாவின் கௌரவத்தை குலைப்பதாக அமையவில்லை.     எல்லாருக்கும் வரும் சிகிச்சை நேர தோற்றம்தான் தெரிகிறதே தவிர இதில் என்ன தவறு இருக்கிறது.

ஒப்பனையுடன் மட்டுமே வெளியில் தெரிந்த ஜெயலலிதாவின் சிகிச்சை தோற்றம் மக்களுக்கு தெரியக் கூடாது என்று சசிகலா நினைத்திருந்தால் அது தவறு.

எத்தனை வதந்திகளை அது தவிர்த்திருக்கும்.     இன்னும் சொல்லப் போனால் கட்சி உடைவதற்கே அது ஒரு காரணமாக இருந்திருக்க முடியாது.

மறைக்க மறைக்கத்தான் அதில் ஏதோ இன்னும் இருக்கிறது என்ற சந்தேகம் அதிகரிக்கும்.

இன்னும் பல விடியோக்கள் இருக்கின்றன என்கிறார்கள்.   அவைகளை அவர்கள் தாமாகவே முன்வந்து விசாரணை  கமிஷன் முன் சமர்ப்பித்து அவைகளை ஆவணப் படுத்துவதே முறையானது.

ஜெயலலிதாவின் பெருவிரல் ரேகை இரட்டை இலையை பெறுவதற்கு  பயன்படுத்தப பட்டது இன்னும் நிலைமையை சிக்கலாகி இருக்கிறது.    ஒத்துப் போகாவிட்டால் அது பல ஊகங்களுக்கு இடம் கொடுக்கும்.    பலரும் தண்டனை  பெரும் நிலையும் உருவாகும்.

சாட்சி சொன்ன டாக்டர் பாலாஜி மாட்டலாம்.

தேர்தல் ஆணையம் இந்த வீடியோவை வெளியிட வேண்டாம் என்று ஊடகங்களுக்கு தகவல் கொடுத்தது.     தேர்தல் விதியை மீறிய செயலாம்.       நூறு  கோடிக்கு மேல் வாக்காளர்களுக்கு லஞ்சம் கொடுக்கப் பட்டதை தடுக்க முடியவில்லை    இந்த  தேர்தல் ஆணையத்தால்.

இதற்கிடையே இளவரசியின் மகள் கிரிஷ்ணபிரியா வெற்றிவேல் செய்தது தவறு என்கிறார்.   குடும்பத்துக்குள்ளே கருத்து வேறுபாடு.

வெற்றிவேல் மீது வழக்கு பதிவு செய்யப் பட்டிருக்கிறதாம்.   இதற்கும் இடைத் தேர்தலுக்கும் என்ன தொடர்பு இருக்கும்?    இது எப்படி ஒரு பிரச்சாரம் ஆகும்?    தேர்தல் ஆணைய நீதியே தனி??!!

எப்படி இருந்தாலும் வெற்றிவேல் வெளியிட்ட வீடியோ ஜெயலலிதா சிகிச்சை பற்றிய ஒரு புதிய உண்மையை மக்களுக்கு தெரியப் படுத்திவிட்டது என்பது மட்டும் உண்மை.

இன்னும் முழு உண்மைகளையும் மக்களுக்கு தெரியப் படுத்த வேண்டியது அதை வைத்திருப்பவர்களின் கடமை.