சொராபுதீன் போலி என்கவுண்டர் வழக்கில் அமித் ஷா உள்ளிட்டோர் குற்றவாளிகளாக சேர்க்கப் பட்டிருந்தனர்.
அந்த வழக்கை விசாரித்த சி பி ஐ நீதிமன்ற நீதிபதி லோயா 48 வயதில் திடீர் என இறந்தார். அவருக்குப் பின் வந்த நீதிபதி அமித் ஷா வையும் மற்றவர்களையும் வழக்கில் இருந்து விடுவித்தார். அது லோயாவின் மரணத்தில் சந்தேகம் ஏற்படுத்தியது.
நீதிபதி மரணம் குறித்த வழக்கு உச்ச நீதிமன்றத்துக்கு வந்தபோது தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தன்னிச்சையாக வழக்கத்துக்கு மாறாக இந்த வழக்கை வேறு பெஞ்சுக்கு மாற்றியது குறித்து அவருக்கு அடுத்த நிலையில் இருக்கும் நான்கு நீதிபதிகள் வரலாற்றில் இல்லாத நிகழ்வாக பத்திரிகைகளை கூட்டி பேட்டி கொடுத்தார்கள்.
நீதிபதிகள் சலமேச்வர், ரஞ்சன கோகாய், மதன் லாகூர் ,குரியன் ஜோசப் ஆகிய நால்வரும், தலைமை நீதிபதியின் தன்னிச்சையான போக்கு நல்லதல்ல என்றும், லோயா சம்பத்தப் பட்ட வழக்கை வேறு பெஞ்சுக்கு மாற்றியது குறித்து தாங்கள் அவரிடம் பேசியது பலன் அளிக்க வில்லை என்றும் எனவே நாட்டுக்கு உண்மை நிலவரத்தை தெரிய படுத்த வேண்டி பேட்டி கொடுப்பதாகவும் கூறினார்கள்.
இதில் பல பிரச்னைகள் அடங்கி இருக்கின்றன.
உச்ச நீதிமன்றத்தில் தவறுகள் நடக்க வாய்ப்பு இருக்கிறது. செல்வாக்கு பயன் படுத்தப் படுகிறது. எனவே என்னென்ன வழக்குகளில் இந்த செல்வாக்கு தவறாக பயன் படுத்தப் பட்டது என்பது ஊகங்களுக்கு உட்பட்டது.
அவர்களுக்குள் வழக்கறிஞர்கள் சங்கம் பேசி சமாதானம் செய்யலாம். ஆனால் உச்ச நீதிமன்றத்தின் நம்பகத் தன்மை அசைக்கப் பட்டு விட்டது.
எந்தெந்த வழக்குகளில் என்னென்ன நடந்ததோ என்று மக்கள் ஆராய வேண்டிய நிலைக்கு தள்ளியது யார்.?
இந்த நான்கு நீதிபதிகளும் போற்றுதலுக்கு உரியவர்கள். மனசாட்சிப் படி நடந்திருக்கிறார்கள் .
இப்படி நாலு பேர் இருப்பதால்தான் இன்னும் நம்பிக்கை மிச்சம் இருக்கிறது.