கர்நாடகத்தில் நடந்த ஜனநாயக படுகொலை பா ஜ க என்ற பாசிச கட்சி அதிகாரத்தை தக்க வைக்க எத்தகைய மூர்க்கத் தனமான தாக்குதல்களை யும் நடத்தும் என்பதற்கு சாட்சியாக விளங்குகிறது.
மோடி என்ற தர்மத்தலைவராக உருவகப் படுத்தப் படும் தலைவர் உண்மையில் இந்தியாவின் ஹிட்லர் என்று உருவகப் படுத்தப் பட வேண்டியவர் என்பதையும் சம்பவங்கள் நிரூபிக்கின்றன.
104 உறுப்பினர்களை கொண்ட பாஜக பெரும்பான்மைக்கு தேவையான 111 உறுப்பினர்கள் ஆதரவு இல்லாமலேயே ஆளுநரின் பா ஜ க ஆதரவுப் போக்கினால் அழைக்கப் பெற்று எடியூரப்பா முதல்வராக பதவி ஏற்றுக் கொண்டார்.
இதில் விவசாயிகள் கடன் ஒரு லட்சம் இருந்தால் தள்ளுபடி என்ற அறிவிப்பு வேறு??
118 உறுப்பினர்கள் ஆதரவு இருந்தும் காங்கிரஸ் -மத சார்பற்ற ஜனதா தள கட்சிகள் ஆதரவு பெற்ற குமாரசாமி முதல்வராகாமல் தடுக்கப் பெற்றிக்கிறார்.
பல தீர்ப்புகள் , தொங்கு சட்டமன்றம் அமையும் பட்சத்தில் , முதலில் தேர்தலுக்கு முன்பான கூட்டணி , பிறகு தனிப்பெரும்பான்மை கொண்ட கட்சி, அடுத்து தேர்தலுக்கு பிறகான கூட்டணி என்ற வரிசையில் அமைச்சரவை அழைக்க வாய்ப்பு கொடுக்கப் படலாம் என்று வரையறுத்தாலும் கோவா மணிப்பூர் . மேகாலயா போன்ற மாநிலங்களில் இதே பா ஜ க ,,தனிப்பெரும்பான்மை கொண்ட கட்சியாக காங்கிரஸ் உருவெடுத்தாலும் தேர்தலுக்கு பிந்தைய கூட்டணி வைத்து ஆட்சியை கைப்பற்றிக் கொண்டது.
அதே முறையில் இப்போது காங்கிரசும் ம ஜ க வும் கூட்டணி வைத்து பெரும்பான்மை பலத்தை வைத்திருக்கும்போது தனிப்பெரும் கட்சி என்ற போர்வையில் ஆட்சியை பிடித்து கட்சி தாவலை ஊக்குவித்து ஆட்சியை தக்க வைக்க பா ஜ க முயற்சிப்பது ஜனநாயகத்தின் குரல் வளையை நெரிப்பது ஆகும்.
உச்சநீதிமன்றம் இரவில் வழக்கை எடுத்துக் கொண்டு நாளை வரை அவகாசம் கொடுத்து இருக்கிறது. எடியூரப்ப கொடுத்த கடிதத்தை கேட்டிருக்கிறது. அதில் அவர் தனக்கு 104 உறுப்பினர்கள் ஆதரவு இருக்கிறது என்றுதான் குறிப்பிட்டிருக்க வேண்டும். எங்கே பெரும்பான்மைக்கு தேவையான மீதி உறுப்பினர்கள் என்று நீதிமன்றம் கேட்டால் அவர்கள் காங்கிரசிலும் மஜாகவிலும் இருக்கிறார்கள் என்றுதான் சொல்ல வேண்டும்.
நூறு கோடியாம், அமைச்சர் பதவியாம்- கூறு போட்டு விற்கிறார்கள் பதவிகளை.
கட்சி தாவல் சட்டம் காற்றில் பறக்கிறது. குறுக்கு வழிகள் ஆராயப் பட்டு ராஜினாமா செய்ய வைக்கலாமா வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாமல் புறக்கணிக்க வைக்கலாமா என்றெல்லாம் திட்டமிடுகிறார்கள்.
பதவியை தக்க வைக்க இப்படி பட்டப் பகலில் பேரம் பேசுபவர்கள் எப்படி ஆட்சிக்கு வந்தபின் நியாயமாக நடந்து கொள்வார்கள். ?
மக்கள் எழுச்சியினால் பதற்றம் ஏற்பட்டு சட்டம் ஒழுங்கு குலையுமானால் யார் பொறுப்பு?
விலைக்கு வாங்க பதினைந்து நாட்கள் அவகாசம் கொடுத்தது எப்படி சரியாகும்?
இரண்டு மூன்று நாளில் பெரும்பான்மையை நிரூபியுங்கள் என்று உத்தரவு இட்டிருந்தால் மன்னிக்கலாம். பதினைந்து நாட்கள் அவகாசம் தந்து தனது விசுவாசத்தை நிரூபித்திருக்கிறார் ஆளுநர்.
உச்சநீதி மன்றம் இந்த அவகாசத்தை குறைத்து இரண்டு மூன்று நாளில் எடியூரப்பா தனது பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்றாவது உத்தரவு இடுமா என்ற கேள்விதான் எல்லார் மனதிலும்.
இடையில் யாராவது விலை போனால் அதற்கு ஆளுநரே காரணம்??!!