18 எம் எல் ஏக்கள் தகுதி இழப்பு வழக்கில் தலைமை நீதிபதியை விமர்சித்தவர்கள் மீது என்ன நடவடிக்கை என மாண்புமிகு நீதியரசர் கிருபாகரன் அவர்கள் கேள்வியெழுப்பி காவல்துறை அறிக்கை கேட்டு உத்தரவிட்டுள்ளார்.
வரவேற்க வேண்டியதுதான். நீதிமன்ற மாண்பு காக்கப் பட வேண்டும் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்தில்லை.
தங்க தமிழ்ச் செல்வன் மீது நடவடிக்கை கோரி ஒரு வழக்கறிஞர் முறையிட அதற்கும் விசாரணை வரலாம். விசாரிக்கட்டும். அவர் தவறு செய்திருந்தால் தண்டிக்கட்டும்.
இந்த விசாரணை மற்றொரு கோணத்திலும் வரவேற்கப் பட வேண்டிய ஒன்று.
எல்லா பாமர மக்களுக்கும் ஏற்பட்ட சந்தேகம் இன்னும் தீர்க்கப் படவில்லை.
கொறடா உத்தரவை மீறி அரசை எதிர்த்து வாக்களித்த ஓ பன்னீர்செல்வம் அமைச்சராக அதே அமைச்சரவையில் தொடர்கிறார்.
முதல் அமைச்சர் மீது நம்பிக்கை இல்லை என்று ஆளுநரிடம் மனு கொடுத்த 19 எம் எல் ஏக்களில் ஒருவர் பின் வாங்கியதால் அவர் மட்டும் மன்னிக்கப் பட்டு மற்ற 18 பேரும் தகுதி இழக்கிறார்கள் என்று ஒரு தீர்ப்பு வருகிறது.
ஓ பி எஸ் உள்ளிட்டவர்களின் தீர்ப்பு வந்த போதே இந்த தீர்ப்பும் வந்திருக்கலாம். அது முதலில் வருகிறது. தீர்ப்புக்கு ஒதுக்கப் பட்ட நாளில் இருந்து ஏறத்தாழ ஐந்தரை மாதங்கள் கழித்து இந்த தீர்ப்பு வருகிறது.
இரண்டு தரப்பிலும் மெத்தப் படித்த வழக்கறிஞர்கள் வாதிட்டு வந்த தீர்ப்பு இது.
தாமதித்து தீர்ப்பு வழங்கியதால் ஏற்பட்ட இழப்புகள் எத்தனை எத்தனை. அதை யார் ஈடு கட்டுவது.?
அது நீதிமன்றங்களின் தனி உரிமை. தாமதத்தை யாரும் கேள்வி கேட்க கூடாது. நீதி மன்ற அவமதிப்பாகிவிடும். வேலைப் பளு போன்ற பல காரணங்கள் இருக்கலாம். அந்த இழப்புகளை பொதுமக்களும் சம்பந்தப் பட்ட வர்களும் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும்.
பொதுவாக நீதிமன்றங்கள் மீது நம்பிக்கை இல்லை என்பது வேறு. தீர்ப்பு சொன்ன பிறகு குறிப்பிட்ட நீதிபதி மீது உள்ளர்த்தம் கற்பித்து குற்றம் சுமத்துவது என்பது வேறு.
உணர்ச்சிப் பெருக்கில் குற்றம் சுமத்துவது சரியல்ல. நீதிபதிகளை சந்தேகிப்பதும் உள்ளர்த்தம் கற்பித்து குற்றம் சாட்டுவதும் குற்றமே. தங்க தமிழ்ச் செல்வன் கூறியது பற்றி அவர்தான் விளக்கம் அளிக்க வேண்டும். ஆதாரமில்லாமல் , வழங்கப் பட்ட தீர்ப்பல்ல. வாங்கப்பட்ட தீர்ப்பு என்றெல்லாம் பேசுவது தவறு. அதற்கு ஆதாரம் இருந்தால் வெளியிடட்டும்.
அதற்காக ஊடகங்களில் கருத்து சொல்வோர் விவாதிப்போர் மீதெல்லாம் நடவடிக்கை என்று தொடங்கினால் கருத்து சுதந்திரம் என்ன வாகும் என்பதையும் நீதிபதிகள் கருத்தில் கொள்ள வேண்டும்.
விமர்சனம் செய்வோரை பாதுகாக்கும் கடமை கொண்ட நீதிபதி ஒருவரே இத்தகைய உத்தரவை பிறப்பித்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது.
அதே நேரத்தில் வேண்டுமென்றே திட்டமிட்டு நீதிபதிகளை அவதூறு செய்வோர் மீது நடவடிக்கை எடுப்பதில் எந்த ஆட்சேபணையும் இல்லை.
இந்த வழக்கில் மறைந்திருக்கும் பல மர்ம முடிச்சுகள் இன்னும் அவிழ்க்கப் பட வில்லை.
இரண்டு நீதிபதிகள் கருத்து மாறுபடுகிறார்கள் என்றால் அதற்கு என்ன காரணம்? மாறுபட்ட பார்வை தானே?
மூன்றாவது நீதிபதி யின் பார்வைதான் இறுதி செய்யும். கட்டுப் படுத்தும்.
அதற்கும் மேலே உச்ச நீதி மன்றம் என்ன சொல்லப் போகிறதோ? எப்போது இந்த பிரச்னை ஒரு முடிவுக்கு வருமோ? அதற்குள் இந்த ஆட்சி தன் காலத்தை ஒட்டி விடும் என்பதுதானே நிதர்சனம்.
தாமதிக்கப் பட்ட நீதிகள் விமர்சனத்துக்கு உள்ளாகத்தான் செய்யும். அந்த விமர்சனம் நியாயமாக இருக்க வேண்டும்.
என்ன நடந்தாலும் நீதி மன்றங்கள் தான் பாமர மக்களுக்கு கடைசி புகலிடம். அதை நாமும் மறக்கக் கூடாது. நீதிமன்றங்களும் மறக்கக் கூடாது.