ஆளுநரைச் சொல்லி குற்றமில்லை.
அவர் பா ஜ க வால் நியமிக்கப் பட்டவர். பா ஜ க வின் அரசியல் திட்டங்களுக்கு முட்டுக் கொடுப்பது அவர் கடமை.
அண்ணாவின் பெயரில் கட்சி நடத்துவோர் அவரது கொள்கைகளுக்கு வலு சேர்க்க வேண்டாமோ?
ஆட்டுக்குத் தாடி போன்று நாட்டுக்குத் தேவையில்லை ஆளுநர் என்பது அண்ணாவின் கூற்று.
ஆளவந்தோர் பதவியை காப்பாற்றிக் கொள்ள ஆளுநர் அரசின் நிர்வாகத்தில் தலையிடுவதை தடுத்திருக்க வேண்டும். ஆட்சேபித்து இருக்க வேண்டும்.
இவர்களால் முடியாது. எனவேதான் எதிர்க்கட்சி அந்த வேலையை செய்கிறது.
மாவட்டங்களுக்கு ஆய்வுக்கு செல்லும் ஆளுநருக்கு கறுப்புக் கொடி காட்டுகிறார்கள்.
நாமக்கல்லில் கறுப்புக் கொடி காட்டியோர் 293 பேர் கைது செய்யப்பட்டு சிறைக்கு அனுப்பப் பட்டிருக் கிறார்கள்.
எனவே இந்த அடக்கு முறையை கண்டித்து இன்று ஸ்டாலின் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தி கைதாகி இருக்கிறார்.
அவர் கைதானதால் மாநிலம் முழுதும் தி மு க வினர் கைதாகி இருக்கிறார்கள்.
தூய்மை பணியை நாமக்கல் பஸ் நிலையத்தில் தொடங்க இருந்த ஆளுனர் எல்லா இடங்களிலும் சுத்தப் படுத்தி விட்டு இவர் சுத்தப் படுத்துவதற்காக கொஞ்சம் இடத்தை குப்பையாக வைத்திருந்ததை கவனித்து விட்டு தொடங்காமலே திரும்ப வந்திருக்கிறார்.
இந்த போலித்தனம் தேவையா?
நாட்டில் எத்தனை மாநிலங்களில் ஆளுநர்கள் ஆய்வு நடத்துகிறார்கள்?
ஆளுமை வாய்ந்த முதல் அமைச்சர் இருக்கும் பட்சத்தில் ஒரு ஆளுநர் இப்படி அதிகாரம் செலுத்துவாரா?
சட்டப்படி ஆளுநர் செய்வது சரியில்லை என்பதுதான் உண்மை.
ஆளும் கட்சியே அமைதியாக இருக்கும் போது மற்றவர்கள் ஆட்சேபிக்கலாமா? வேறு வழி? உரிமையை விட்டுக் கொடுத்து விடலாமா?
மக்கள் பிரதிநிதிகள் ஆட்சி செய்வதை கொச்சை படுத்தும் வகையில் மறைமுகமாக யார் ஆள திட்டமிட்டாலும் அதை முறியடித்தே தீரவேண்டும்.
ஆளுனரை திரும்ப அழைத்துக் கொள்ள வேண்டும் மத்திய அரசு. பா ஜ க அதை செய்யாது.
பாலியல் புகாரில் கைதான பேராசிரியை நிர்மலா தேவி இன்னும் சிறையில். ஆளுநர் பெயர் அதில் அடிபட்டதே உண்மை என்ன?
பல்கலை கழகங்கள் நிர்வாகத்தில் ஆளுநர் வேந்தர் அடிப்படையில் தலையிடுவதில் கூட வரையறை இருக்க வேண்டும்.
பதவிக்கு பெருமை சேர்க்க வேண்டும் பன்வாரிலால். ஆனால் இதுவரை அப்படி இல்லை. இனியாவது சுய பரிசோதனை செய்வாரா?