ஐ டி ரெய்டு என்றாலே மத்திய அரசின் மிரட்டல் என்றாகி விட்டது.
அன்புநாதன் , சேகர் ரெட்டி விடயத்தில் அப்படித்தானே ஆனது.
இப்போது சத்து மாவு முட்டை விநியோகத்தில் கிறிஸ்டி நிறுவனம் ரூ ஐந்தாயிரம் கோடிக்கு மேல் வருமான வரி ஏய்ப்பு செய்ததாக வருமான வரித்துறை 72 இடங்களுக்கு மேல் சோதனை நடத்தி இருபது கோடி பணம் பதினைந்து கிலோ தங்கம் கணக்கிட முடியாத அளவு ஆவணங்களை கைப்பற்றியதாக செய்திகள் வருகின்றன.
இவையெல்லாம் வெறும் வருமான வரி ஏய்ப்புக்குத்தானா அல்லது தமிழக அரசை நடத்தும் முதல்வர் பழனிச்சாமியை மிரட்டி பணிய வைக்கும் முயற்சியா என்ற ஐயம எழுகின்றது.
பாராளுமன்ற தேர்தல் வரும் சமயம் நெருங்க நெருங்க இன்னும் எத்தனை சோதனைகள் நடை பெறுமோ என்ற எதிர்பார்ப்பும் அதிகரிக்கிறது.
அரசியல் காரணங்களுக்காக சி பி ஐ , ஐ டி , அமுலாக்க த்துறை போன்றவை பயன் படுத்தப் படுவதாக வரும் குற்றச்சாட்டுகளை தவறு என்று நிரூபிக்க அந்த அமைப்புகளுக்கு கடமை இருக்கிறது.
இவ்வளவு பெரிய ஊழலை தனி ஒருவர் செய்து விட முடியாது.
அரசில் பொறுப்பில் இருப்பவர்கள் சம்பத்தப் படாமல் எப்படி ஒரு நிறுவனம் ஊழல் செய்து விட முடியும். ?
இந்த அடிப்படை உண்மையை கணக்கில் எடுத்துக் கொண்டு தான் விசாரணை நடத்தப் பட வேண்டும்.
லோக் ஆயுக்தா சட்டம் வேறு நிறைவேற்றப் பட்ட நிலையில் இந்த ஊழல் குற்ற சாட்டுகளை எப்படி விசாரிக்கப் போகிறார்கள். ?
இதை வெறும் வருமான வரி பிரச்னையைப் போல் அமைச்சர் ஜெயக்குமார் பேசுவது இந்த அரசுக்கு ஊழலில் சம்பந்தம் இல்லை என்பது போல் இவரே சான்றிதழ் அளிப்பது போல் இருக்கிறது.
அதுவும் நுகர் பொருள் வாணிப கழக இயக்குனர் ஐ ஏ எஸ் அதிகாரி சுதா தேவியும் இதில் சம்பத்தப் பட்டிருப்பதால் அரசுக்கு தொடர்பு இல்லை என்று சொல்லவே முடியாது.
முட்டை ஊழல் சம்பந்தமான விசாரணையும் முட்டையாகி விடக்கூடாது.