முதல்வர் ஜெயலலிதாவின் ஆட்சியின் செயல்பாடுகள் மக்களுக்கு ஆறுதலை தந்திருக்கிறதா வேதனையை தந்திருக்கிறதா என்ற கேள்விக்கு வேண்டுமானால் பலர் பல விதமான பதில்களை தரலாம்.
ஆனால் அவர் மக்களின் சேவகராக செயல்படுகிறாரா மகாராணியாக செயல் படுகிறாரா என்ற கேள்விக்கு ஒரே பதில்தான் . மகாராணி! மகாராணி!!!!!
மேற்கு ஜெர்மனியின் அதிபர் மெர்கேல ஏஞ்செல் தன் அலுவலகத்துக்கு ரயிலில் வருகிறாராம்!. மக்களோடு மக்களாக!
அது ஜனநாயகமா?
போயஸ் கார்டனில் இருந்து இரண்டு கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள அலுவலகம் வந்தால் பிளக்ஸ் போர்டு வைத்து வரவேற்பு அதுவும் அரை மணி ஒரு மணி நேரம் இருப்பதற்கு!
சட்டமன்றம் என்றால் எந்த அமைச்சர்களுக்கும் வேலை இல்லாமல் 110 விதியின் கீழ் அறிக்கை படித்துவிட்டு கிளம்பி விடுவது.
கொஞ்சம் நேரம் கிடைத்தால் சிறுதாவூர் சென்று ஓய்வு ! அதிக நேரம் கிடைத்தால் கொடநாடு!!!
மொத்த தலைமை செயலகமும் நீலகிரி மாவட்டம் சென்று திரும்பி ஒரு மாதத்திற்கும் மேலாக அலைய வேண்டும்.
எங்கு தங்கி செயல்பட வேண்டும் என்று தீர்மானிப்பது அவரது உரிமையாக இருக்கலாம்..
அதில் அதிகாரிகள் , பொது மக்கள் வசதியை அவர் கவனிக்க வேண்டாமா?
ஒருவேளை அவரது உடல்நிலை அதற்கு காரணமாக இருந்தால் வெளிப்படையாக சொல்லலாம். ஒன்றும் தவறில்லை..
அப்துல் கலாம் மறைவிற்கு நேரில் செல்ல முடியாததற்கு உடல் நலக குறைவைதானே காரணம் காட்டினார்.
தான் மக்களுக்காகவே வாழ்வதாக ஒரு அறிக்கை வெளியிட்டிருக்கிறார். தனக்கு யாரும் ரத்த சொந்தங்கள் இல்லாததை தான் அவர் அப்படி குறிப்பிட்டிருக்க வேண்டும். ஆனால் அவரை சுற்றி இருப்பவர்கள் அவர் நலம் விரும்பிகள்தானே! அவருக்காக எதையும் செய்யும் மன நிலையில் உள்ளவர்கள்தானே
அதற்காகத் தானே சொத்துக் குவிப்பு வழக்கிலும் அவரோடு தோளோடு தோள் கொடுத்து நின்று கொண்டிருக்கிறார்கள்..
தனது style of functioning ஐ , எல்லோரையும் நடத்தும் போக்கை எப்படி அவர் நியாயப்படுத்த முயற்சிக்கிறார்?
ஒரு பத்திரிகையாளர் சந்திப்பையும் அவர் நடத்தியது இல்லை. அதாவது ஆட்சியில் இருக்கும்போது. . பொதுமக்களை சந்திக்க நேரம் ஒதுக்கியதும் கிடையாது. அதாவது யார் வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் சந்திக்க முடிகிற முதல்வர் இல்லை அவர்.
அமைச்சர்களை தனது மாவட்ட செயலாளர்களை போல் பந்தாடுவது மட்டும்தான் சாதனை என்று சொல்ல முடியுமா?
அச்சத்தில் ஆழ்த்தி ஆளும் காலம் நெடுங்காலமாக இருக்காது.
இப்படிப்பட்ட முதல்வர் நமக்கு தேவையா? இந்த ஒரே கேள்விதான் மக்கள் மனதில் இப்போது.!
ஆள்பவர் நல்லவராக இருந்தால் மட்டும் போதாது! வல்லவராகவும் இருக்க வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பு !!
அதற்கும் மேல் போய் எந்த விதிமுறைக்கும் கட்டுப்படாத எதேச்சாதிகார ராணியாக அமைந்து விட்டால்?
விதியை நொந்து கொண்டு விடுபடும் வாய்ப்புக்காக காத்திருக்கும் மனோநிலையில்தான் மக்கள் இருக்கிறார்கள். .