அறநிலையத்துறை அதிகாரிகள் வீட்டுப் பெண்களை கொச்சைப்படுத்திய  ஹெச் ராஜா மீது நடவடிக்கை என்ன?

இந்து அறநிலையத்துறை அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பினர் நாடு முழுதும் எச் ராஜா மீது நடவடிக்கை எடுக்கக்  கோரி ஆர்ப்பாட்டம் நடத்தி இருக்கிறார்கள் . இதற்கு திமுக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் போன்ற பல கட்சி நிர்வாகிகள் ஆதரவளித்திருக்கிறார்கள் .

எச் ராஜா மீது நடவடிக்கை எடுக்க இந்த அரசு தயாராக இல்லை.     அடிமை அரசாங்கம் என்று குற்றம் சுமத்தினால் கூட அதைப்பற்றி கண்டு கொள்வதில்லை இந்த அரசு.       அதனால் தான் ராஜாவுக்கும் எஸ்வி சேகருக்கும் ஒரு நீதி சட்டமன்ற உறுப்பினராக இருந்தாலும் கருணாசுக்கு ஒரு நீதி என்று இந்த அரசு பட்டவர்த்தனமாக பாரபட்சம் காட்டி வருகிறது..

இந்து அறநிலைத்துறை தவறாக நிர்வகிக்கப்படுகிறது என்பது ராஜாவின் குறையாக இருந்தால் அதற்கு போராடட்டும்.     யாரும் தடுக்கவில்லை. ஆனால் அறநிலையத்துறை அதிகாரிகள் லஞ்சம் வாங்கிக்கொண்டு கோவில் நிலங்களை விற்பனை செய்கின்றனர்.     இந்த அதிகாரிகள் தங்கள் வீட்டு பெண்களை விலைபேசி விற்பதை போலதான் அது என்று பேசியிருக்கிறார்.

அந்தப் பேச்சுக்குத்தான் அறநிலை துறை ஊழியர்கள்  கடும் எதிர்ப்பு தெரிவித்து போராடிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் இதுநாள் வரையில் இந்த அரசு அவர்களின் உணர்வுகளை புறந்தள்ளி நடவடிக்கை எடுக்காமல் இருக்கிறது .

எச் ராஜா தான் என்ன பேசினேன் என்பதையும்  அரசு ஊழியர்களை அவர்கள் வீட்டுப் பெண்களை தரக்குறைவாக பேசினாரா இல்லையா என்பதையும் விளக்கமாக கூறி இருக்கலாம். அதற்கு அவர் தயாராக இல்லை என்பது தான் வேதனை. ஆட்சியிலும் அதிகாரத்திலும் இருந்தால் பார்ப்பனர்கள் எத்தகைய மமதையோடு நடந்து கொள்வார்கள் என்பதற்கு இதை விட வேறு சான்று தேவையில்லை.      பேசினாரா இல்லையா என்பதை அவர் தானே சொல்ல வேண்டும்? அவர் மௌனம் காப்பது , நான் அப்படிதான் பேசுவேன் யாரும் என்னை கேட்க முடியாது என்று சவால் விடுவதைப் போல அல்லவா இருக்கிறது?

இதைப்போலத்தான் பாராளுமன்ற உறுப்பினர் அருண்மொழித்தேவன் பற்றியும் அவர் இந்து அறநிலையத்துறைக்கு சொந்தமான பல ஏக்கர் நிலங்களை ஆக்கிரமித்து இருப்பதாக பேசினார்.    அதற்கு அருண்மொழித்தேவன் மறுப்பு தெரிவித்திருக்கிறார் ,சவால் விட்டிருக்கிறார். அதற்கும் இதுவரை எச் ராஜா எந்த பதிலையும் சொல்லவில்லை இவர்கள் தரக்குறைவாக பேசிக்கொண்டே இருப்பார்கள் ஆனால் இந்த அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காது என்றால் எத்தனை காலம் இந்த நிலை நீடிக்கும் என்பதை மானமுள்ள தமிழர்கள் எண்ணிப் பார்க்கவேண்டும் . நேரம் வரும் காத்திருப்போம்!!!