தமிழ்நாட்டில் டெல்டா மாவட்ட விவசாயிகளை மேலும் அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது மோடி அரசு ஆம் 3 இடங்களில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு அனுமதி. அதில் ஒன்று அரசு நிறுவனமான ஓ என் ஜி சி க்கு. இரண்டு வேதாந்தா நிறுவனத்திற்கு.
வேதாந்தா நிறுவனத்தின் செல்வாக்கிற்கு சான்று வேண்டாம். தமிழ்நாட்டு அரசு ஸ்டெர்லைட் ஆலையை மூடுவோம் என்று அறிவித்து விட்டது. வழக்கு உச்சநீதிமன்றத்தில் இருக்கிறது.
13 பேரை சுட்டுக் கொன்று விட்டதால் மக்கள் இனி போராடுவதற்கு அச்சப் படுவார்கள் என்று அரசும் அகர்வாலும் நினைக்கிறார்கள்.
படுகொலைகள் நடத்த பிறகும் ஆய்வு செய்ய அனுமதி வழங்கப் படுகிறது. அனில் அகர்வால் டெல்லியில் இருந்து பேட்டி கொடுக்கிறார். நாங்கள் ஆலையை விரைவில் திறப்போம் என்று.
இந்த தைரியத்தை யார் கொடுத்தார்கள்? மத்திய அரசின் ஆதரவு தனக்கு இருப்பதால்தான் அவர் இப்படி பேட்டி கொடுக்க முடிகிறது.
நாட்டில் மொத்தம் 55 இடங்களில் ஹைட்ரோ கார்பன் எடுக்க திட்டம். அதில் 44 வேதாந்தா நிறுவனத்திற்கு என்றால் செல்வாக்கு தெரிகிறதா இல்லையா? அரசு நிறுவனத்தை மிஞ்சும் வகையில் அவருக்கு அதிக இடங்கள் ஒதுக்க என்ன காரணம் என்பதை மோடி அரசுதான் விளக்க வேண்டும்.
தாமிரம் தேவை என்று சொல்லி ஆலையை திறக்க முனைபவர்கள் ஏன் வேறு மாநிலத்திற்கு இந்த ஆலையை மாற்ற கொண்டு செல்ல கூடாது.
தாது கிடைப்பது ஆஸ்திரேலியாவில். ஆலைமட்டும் நம் பூமியிலா?
ஆஸ்திரேலியா ஏன் அங்கேயே தனது தாமிர தாதுவை பயன் படுத்தி தாமிரம் தயாரிக்க மறுக்கிறது? சுற்றுச்சூழலை மாசு கெடாமல் பாதுகாப்பதில் அவர்களுக்கு அக்கறை.
நமக்கு இல்லை. இருக்குமானால் இருக்கும் ஓ ன் ஜி சி கிணறுகளை டெல்டா மாவட்டத்தில் உடனே மூட வேண்டும்.
உலகில் விவசாயம் மட்டுமே நடக்கும் பகுதிகளில் எந்த நாடுகளில் கனிம வளங்களை அல்லது இயற்கை எரி வாயு மூலப் பொருட்களை தோண்டி எடுக்க அனுமதி அளிக்கிறார்கள்?
அதைவிட இந்த எண்ணெய் எடுக்கும் கிணறுகளால் எதிர் காலத்தில் அந்த மண்ணில் விவசாயம் பாதிக்கப் படாது என்று விவசாயிகளுக்கு உறுதி கொடுக்க வேண்டுமா வேண்டாமா?
அதில் விவசாயிகளுக்கு ஏற்படும் ஐயப்பாடுகளை தீர்க்க வேண்டுமா வேண்டாமா?
அதையெல்லாம் செய்யாமல் அதிரடியாக அதிகாரத்தை பயன்படுத்தி விவசாயிகளை மிரட்டி எண்ணெய் கிணறுகளை பயன்பாட்டுக்கு கொண்டு வந்து விடலாம் என்று அரசு நினைத்தால் அது தவறான கணக்கு.
நெடுவாசல், கதிராமங்கலம் போராட்டங்கள் இன்னும் முற்றுப் பெறவில்லை. அதற்குள் வேறு போராட்டங்களை துவக்க வேண்டிய நிலைமைக்கு விவசாயிகளை மத்திய அரசு தள்ளி விட்டிருக்கிறது.
காவிரி கடலோடு கலக்கும் ஒரு இடத்தில் 1794 சதுர கி .மீ. பரப்பளவிலும் மற்றொர் இடத்தில் 2574 சதுர கி .மீ. பரப்பளவிலும் ஹைட்ரோ கார்பன் எடுக்கப் படும் என்றால் அந்த இடங்களில் விவசாயம் இன்னும் ஐம்பது ஆண்டுகளில் இருக்காது என்றுதான் அர்த்தம். விவசாயிகள் வேறு வேலை தேடி ஓட வேண்டியதுதான்.
எல்லாம் இருக்கட்டும். ஒ என் ஜி சி யை எதிர்த்து அல்லது ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து துண்டறிக்கை கொடுப்பதை இந்த அரசு முரட்டுத் தனமாக முடக்கப் பார்க்கிறதே அது ஏன்?
மக்களுக்கு விழிப்புணர்வு ஊட்ட வேண்டிய அரசே விழிப்புணர்வு பிரசாரத்தை முடக்கலாமா?
எங்காவது நடத்திக் கொள்ளுங்கள். இங்கு வேண்டாம். ஒப்பந்தம் ரத்தாக வில்லையென்றால் நீங்களே மக்கள் போராட்டத்தை தூண்டியவர்கள் ஆவீர்கள் என்பதை மட்டும் மறக்க வேண்டாம்.