இந்தியாவின் இரும்பு மனிதர் என்று வர்ணிக்கப்படும் சுதந்திர இந்தியாவின் முதல் உள்துறை அமைச்சர் சர்தார் வல்லபாய் படேல் பல சிறப்புகளுக்கு உரியவர்.
அப்போது 550 க்கும் மேற்பட்ட குறுநில அரசுகள் அதாவது சமஸ்தானங்கள் இருந்தன. அத்தனையையும் தனது சாதுர்யத்தால் பேசியே இணைத்தவர். அதாவது அதுவரை இந்தியா ஒன்றாக இல்லை. இணைய மறுத்த ஹைதராபாத் நிஜாம் ஜுனாகத் நிஜாம் ஆகியோரை வல்லமையால் இணைய வைத்தவர். அதிலும் ஹைதராபாத் குறுநில அரசை இணைக்கும் போரில் ஏறத்தாழ 40,000-க்கும் அதிகமானோர் கொல்லப் பட்டனர். ஜுனகத் குறுநில அரசை மக்களின் வாக்குப்படி இணைய வைத்தார். ஜுனாகத் அரசின் பெரும்பாலான மக்கள் இந்துக்கள். மன்னர் முஸ்லிம். அங்கே வாக்கெடுப்பு நடத்தப்பட்டு அரசு இணைக்கப்பட்டது. காஷ்மீர் மன்னர் இந்து. பெரும்பாலான மக்கள் முஸ்லிம். வாக்கெடுப்பு நடத்த அனுமதி மறுக்கப்பட்டு இன்னும் முழுமையாக தீர்க்கப் படாத பிரச்னையாக காஷ்மீர் நீடிக்கிறது.
நேரு குடும்பம் படேலுக்கு தகுந்த மரியாதை தரவில்லை என்ற குறை இருந்தது. எல்லா அரசின் திட்டங்களுக்கும் அவர்கள் குடும்ப பெயரையே வைத்துக்கொண்டார்கள் .
அதேபோல் நேதாஜி சுபாஷ் சந்திரபோசுக்கும் தகுந்த மரியாதை தரப்படவில்லை என்ற குறை பரவலாக இருக்கிறது.
அவருக்கு நர்மதை நதிக்கரை ஓரம் 597 அடி ( 182 மீட்டர் ) உயரத்தில் உலகின் மிக உயரமான சிலையை பிரதமர் நரேந்திர மோடி திறந்து நாட்டுக்கு அர்ப்பணித்தார்.
விவசாய குடும்பத்தில் பிறந்த சாதாரண மனிதர் இரும்பு மனிதராக விளங்கி புகழ் பெற்றது பெருமைதான்.
இன்னொரு பெருமையும் அவருக்கு உண்டு. மகாத்மா காந்தி சுடப்பட்டு இறந்தவுடன் ஆர்.எஸ்.எஸ் இயக்கம் தடை செய்யப் பட்டது. அதைசெய்தவர் வல்லபாய் படேல்தான்.
தடையை நீக்க கோரி சங்கம் படேலுடன் கடித போக்குவரத்து நடத்தியது. கொலைக்கும் எங்களுக்கும் சம்பந்தம் இல்லை என்றது.
பதில் எழுதினாராம் வல்லபாய் படேல்’ கொலையில் சம்பந்தம் இல்லாமல் இருக்கலாம். அதற்காக மகாத்மா இறந்தவுடன் இனிப்பு வழங்கி இருக்கக்கூடாது அல்லவா”?
பிறகு ஆர்.எஸ்.எஸ் மீதான் தடை நீக்கப் பட்டது என்பது வேறு. ஆனால் களங்கம் அகற்றப்பட்டதா என்றால் நிச்சயமாக சொல்ல முடியாது.
அத்தகைய இரும்பு மனிதர் வல்லபாய் படேலுக்கு சங்கத்தின் சேவகர் ஆன நரேந்திர மோடி சிலை வைத்து திறந்திருப்பது நல்ல முன்மாதிரி.