எம்.ஏ பாடத்திட்டத்தில் இருந்து அண்ணாவின் ‘நீதிதேவன் மயக்கம்’ நீக்கம்?

anna-dmk

திராவிட இயக்கத்தின் மீதான மறைமுக தாக்குதல்கள் தொடர்கின்றன என்பதற்கு சாட்சியாக அரசு நடத்தும் அழகப்பா பல்கலை கழகத்தின் எம் ஏ தமிழ் முதுகலை பாடத்திட்டத்தில் இருந்து அண்ணாவின் புகழ் பெற்ற ‘ நீதிதேவன் மயக்கம்’ நாடகம் நீக்கப் பட்டிருக்கிறது.

அந்தப் பல்கலை கழகத்துடன் இணைந்த ஏறத்தாழ  40  கல்லூரிகளில் இருந்து அண்ணாவின் நாடகத்துக்கு பதிலாக அரு.  ராமநாதன் எழுதிய ‘ ராஜ ராஜ சோழன் ‘ இடம் பெரும் என்று அதன் தலைவர் /கல்லூரி வளர்ச்சி குழு , எஸ் ராஜமோகன் அறிவித்துள்ளார்.    அதாவது இந்த முடிவு  Board of Studies ‘  பாடத்திட்ட குழுவின் பரிந்துரையால் எடுக்கப் பட்டதாக அவர் கூறினார்.

இந்த முடிவு எடுக்கப்பட அந்தக் குழு கூறும் காரணம்தான் வியக்கத் தக்கது.    தகுதியானவர்கள் தான் குழுவில் இருக்கிறார்களா என்ற ஐயத்தை அது ஏற்படுத்துகிறது.

அதாவது மாணவர்கள் அண்ணாவின் நாடகத்தை விளக்க போதுமான விளக்க ஏடுகள் ( guides ) கிடைக்காமல் சிரமம் அடைகிறார்கள் என்பதுதான் அந்த காரணம். அவற்றை பெற மாணவர்கள் அதிக பணம் செலவழிக்க வேண்டியிருக்கிறதாம்.

1940 களில் வெளிவந்த இந்த நாடகம் ராமாயண மகாபாரத படிப்பினைகள் குறித்து ஒரு நீதிபதியுடன் உரையாடுவது. இதற்கு ராமாயணம் மகாபாரதம் தெரிந்தால் போதுமே.  அதுதான் நாடு முழுதும் அறியப் பட்டதாயிற்றே? ராமாயணத்தையும் மகாபாரதத்தையும் பற்றி கேள்விகள் கேட்கப் படக் கூடாது என்று நினைப்பவர்கள் தான் திட்டமிட்டு இந்த நூலை அகற்றி இருக்கிறார்கள்.

பாமரரும் அறியும் வண்ணம் அண்ணா இயற்றிய அந்த நாடகம் எதிர்கால சந்ததியினருக்கு போய் சேரக் கூடாது என்று கயவர்கள் திட்டமிட்டிருக்கிறார்கள் .

எதிர்ப்பு கிளம்பிய பின் டீன் ராஜமோகன் நாங்கள் மீண்டும் அண்ணாவின் நாடகத்தை பாடப் புத்தகத்தில் வைக்கத் தயார் என்றும் முன்பு அனுப்பிய சுற்றறிக்கையை செல்லாது என்று அறிவிக்க இருப்பதாகவும் கூறுகிறார்.

மீண்டும் வைக்காவிட்டால் போராட்டம் வெடிக்கும் என்பதை ஊகித்து இப்போதைக்கு அவர்கள் பின்னால் சென்றாலும் மீண்டும் வரலாற்றை மறைக்க முயற்சிப்பார்கள் என்பது உறுதி.

அண்ணாவின் வேலைக்காரி  , ஓரிரவு,  கம்பரசம் போன்ற  படைப்புகள் திராவிட இயக்க வளர்ச்சியில் மகத்தான பங்காற்றியவை.

இந்த சூழ்ச்சியாளர்கள் , மத்திய அரசின் ஊது குழலாக ஆட்சி செய்யும் அதிமுக அரசு ஆட்சியில் இருப்பதை பயன்படுத்தி இந்த கேவலமான முயற்சியில் இறங்கியிருக்கிறார்கள்.

வரலாற்றை மறைக்க முற்படுவோர்  தோல்வியே காண்பர்.