தர்மபுரி அருகில் ஒரு மலை சாதி மாணவி, வயது 17, இயற்கை கடன் கழிக்கச் சென்ற இடத்தில் அதே சாதியை சேர்ந்த இரண்டு வாலிபர்களால் கற்பழிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.
இதில் காணப்படும் சமுதாய கொடுமைகள்;
நூற்றைம்பது குடும்பங்கள் வாழும் கிராமத்தில் சுமார் நாற்பது வீடுகளில்தான் கழிப்பறை வசதி உள்ளது. மற்றவர்கள் திறந்த வெளியில்தான் போக வேண்டும்.
கற்பழித்தவர்கள் மிகவும் கொடுமையான முறையில் அரக்கத் தனமாக நடந்து கொண்டிருக்கிறார்கள். வாயில் துணியை திணித்து மூச்சு விடாமல் செய்து அந்த தவறை செய்திருக்கிறார்கள். நிர்பயா வழக்கில் இருந்த அத்துணை கொடுமைகளும் இதிலும் நடந்திருக்கிறது.
காவல் துறை மிகவும் கேவலமாக நடந்திருக்கிறது. தாமதமாக முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்ததில் இருந்து கற்பழிப்பை வெளியில் சொல்லாதே என்று புகார் கொடுத்தவரை மிரட்டியது, அவர்களிடம் செலவுக்கு என்று ரூபாய் ஆறாயிரம் பெற்றது, குற்றவாளி ஒருவனின் தாய் சாராய வியாபாரம் செய்து வந்ததில் காவல் துறையிடம் இருந்த செல்வாக்கை வைத்து அவனை கைது செய்வதில் மெத்தனம் காட்டியது, உடனே மருத்துவமனை கொண்டு செல்லாமல் காப்பகம் கொண்டு சென்று தாமதம் செய்தது என்று காவல் துறை செய்த அக்கிரமங்கள்தான் அதிகம். ஆய்வாளரை மாற்றினால் மட்டும் போதுமா?
எல்லா அரசியல் கட்சி தலைவர்களும் விசாரணை கேட்டிருக்கிறார்கள்.
விசாரணை நடந்து இனிமேலாவது இத்தகைய கொடுமைகள் நிகழா வண்ணம் அரசு உறுதி செய்ய வேண்டும்.