கர்நாடக இசைக்கலைஞர் டி.எம்.கிருஷ்ணா தனது இசைக்கச்சேரிகளில் ஏசுவையும் அல்லாவையும் போற்றி சில பாடல்களை பாடுவதை வழக்கமாக வைத்திருந்தாராம்.
அதற்கு இந்து மத அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
டெல்லியில் இந்திய விமான போக்குவரத்து அமைப்பு ஆதரவில் நடைபெற இருந்த டி.எம்.கிருஷ்ணாவின் இசைக்கச்சேரியை எதிர்த்து இந்து அமைப்புகள் வலைதளங்களில் கடுமையாக விமர்சிக்க அவரது நிகழ்ச்சி அல்ப காரணங்களை சொல்லி நிறுத்தப்பட்டது.
பிறகு டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் தலையிட்டு அரசின் ஆதரவோடு அவரது நிகழ்ச்சி நடை பெற்றிருக்கிறது.
அந்த நிகழ்ச்சியில் ஏசுவைப்பற்றி ஒரு மலையாளப் பாடலையும் அல்லாவைப் பற்றி ஒரு தமிழ்ப் பாடலையும் காந்திஜியின் பஜனைப் பாடல், துக்காராம் பாடல், கன்னட தத்துவ அறிஞர் பசவா, பெருமாள் முருகனின் எழுத்துக்கள் போன்ற கருத்து சுதந்திரம் பற்றி எல்லாம் பாடியிருக்கிறார்.
ஏன் கர்நாடக இசையில் ஏசுவையும் அல்லாவையும் பாடினால் இசை தீட்டுப் பட்டு விடுமா?
ஏதோ கர்நாடக இசை இந்துக்களுக்கு மட்டுமே சொந்தம் என்பது போலவும் மற்ற மதங்களின் கடவுளர்களை பாடினால் அது இந்து மதத்துக்கு செய்யும் துரோகம் என்பது போலவும் அவர்கள் பிரச்சாரம் செய்து வருகிறார்கள்.
தங்களுக்கு பிடிக்காதவர்களை தேச துரோகிகள் என்று குற்றம் சாட்டுவது அவர்களின் வழக்கமாகவே உள்ளது.
டி.எம்.கிருஷ்ணாவின் இந்த சர்வ மத பாடல் பாடும் உரிமையை இந்து என் ராம் அவரது சகோதரர் மியுசிக் அகாடெமி தலைவர் என் என் முரளி போன்றோரும் பாடகி நித்யஸ்ரீ மகாதேவன் போன்றோரும் ஆதரவு அளித்திருக்கின்றனர்.
பொதுவாகவே பார்ப்பனர்கள் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுக்க மாட்டார்கள். அந்த வகையில் இல்லாமல் இந்து ராம் போன்றோர் சில சமயங்களில் மனித உரிமைகள் காப்பாற்ற குரல் கொடுத்திருக்கிறார்கள் .
டி.எம்.கிருஷ்ணா விஷயத்திலும் நியாயத்திற்காக குரல் கொடுத்திருக்கும் அனைவரையும் பொதுமேடை பாராட்டுகிறது.