ஏழைகளுக்கு உதவ தமிழ்நாடு அரசு கொண்டு வந்த இலவச அரிசி திட்டம் அரசியல் காரணங்களுக்காக பயன்படுத்தப்படுவதாகவும் அது மக்களை சோம்பேறிகளாக்கி விட்டதாகவும் உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்திருக்கிறது.
இதனால் வேலைக்கு ஆள் கிடைப்பது கூட அரிதாகி விட்டது என்றும் வேலைக்கு வட நாட்டில் இருந்து ஆட்களை இறக்குமதி செய்யும் அளவுக்கு நிலைமை போய்விட்டது என்றும் நீதிமன்றம் தெரிவித்தது.
நீதிபதிகள் கிருபாகரன் அப்துல் குத்தூஸ் கொண்ட அமர்வு வழக்கு விசாரணையை இம்மாதம் முப்பதாம் தேதிக்கு தள்ளிவைத்து விட்டு அதற்குள் இந்த திட்டத்தை அமுல் படுத்த வறுமைக் கோட்டிற்கு கீழே இருப்பவர்கள் பற்றி கணக்கெடுப்பு எடுக்கப் பட்டதா என்பது குறித்த அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவிட்டனர்.
இந்த வழக்கின் மூலமே இலவச அரிசி திட்டத்தின் கீழ் வழங்கப் பட இருந்த அரிசியை கள்ள மார்க்கெட்டில் விற்பனை செய்ததாக கைது செய்யப்பட்ட ஒருவரை விடுவிக்க போடப்பட்ட மனுவின் மீதான விசாரணையின் போதுதான் உருவானது.
தமிழக அரசு ஆண்டுக்கு ரூபாய் 2110 கோடி இந்த திட்டத்திற்கு செலவழிக்கிறது. இது பொது மக்களின் வரிப்பணம். இதற்குப் பதில் வேறு அவசியமான திட்டங்களுக்கு இந்த பணம் பயன்படுத்தப் படலாமே என்றும் அவர்கள் கருத்து தெரிவித்தனர்.
நீதிமன்றத்தின் இந்த கருத்தால் எப்படியும் எல்லாருக்கும் இலவச அரிசி திட்டம் இனி சாத்தியம் இல்லை என்றே தோன்றுகிறது .
ஒட்டு வாங்கும் ஒரு திட்டமாகவே இது செயல்படுத்தப்பட்டு வருகிறது. அது மட்டுமல்ல. கொடுப்பது கடினம் என்றால் நிறுத்துவது அதைவிட கடினம்.
நிறுத்தியவர்களை ஏழைகளுக்கு எதிரானவர்கள் என்று முத்திரை குத்த முடியும்.
1,96,16,093 கோடி குடும்ப அட்டைகளுக்கு 5 விதமான வகைகளில் பொருட்கள் வழங்கப் பட்டு வருகின்றன.
சில இடங்களில் இலவச அரிசியை வசதி உள்ளவர்கள் பெற்று அதை மற்றவர்களுக்கு கொடுத்து விடுவதாகவும் விற்று விடுவதாகவும் புகார் வருகின்றன. எந்த திட்டமாக இருந்தாலும் கால வரையறையில் ஆய்வு செய்யப் பட்டால் மட்டுமே தவறுகளை திருத்த முடியும்.
திட்டத்தின் மைய நோக்கத்தையே சிதைக்கும் அளவு முறைகேடுகள் நடைமுறையில் இருப்பது உண்மைதானே?
சரியான நேரத்தில் நீதிமன்றம் தலையிட்டு தவறுகள் தொடரா வண்ணம் கடிவாளம் போட இருக்கிறது.
திருத்தப்பட வேண்டிய நல்ல திட்டம்.