இன்று மேதகு பிரபாகரன் பிறந்த நாள் !

prabhakaran
prabhakaran

இன்று மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரனின்  64 வது பிறந்த நாள்.

கொண்டாட  வேண்டிய திருநாள். மீண்டும் வந்து பிறப்பாரா என்று ஏங்க வைக்கும் நாள்.

தியாகம் என்றால் என்ன என்பதை தன் வாழ்க்கையால் உணர்த்திய பெருமகன்.

வீரம் என்றால் என்ன உலகத்திற்கு உணர்த்திய மாவீரன்.

மறைந்தாலும் வாழும் மாவீரர்கள் தமிழ் மரபில் நடுகல் நடப்பட்டு வணங்கப் பட்டு வந்தார்களே அந்த மரபில் வணங்கப் பட வேண்டிய தமிழ்த் தாயின் தலைமகன் பிரபாகரன்.

இரண்டு சொட்டு கண்ணீர்- இரண்டு நிமிட தியானம்- இரண்டு நிமிட வழிபாடு – உளமார உறுதி பூண்டு அவர்  தம் கொள்கைகளில் சிலவற்றையாவது வெற்றி பெற செய்ய உழைப்பது – இதுவே நாம் செலுத்தும் உண்மையான அஞ்சலியாக இருக்கும்.

வலிமையுள்ளது பிழைத்துக்கொள்ளும் என்ற டார்வினின் தத்துவத்தில் நம்பிக்கை கொண்ட எதார்த்தவாதி .

உடன்படிக்கைகளை உடைத்து  எறிந்து ஏமாற்றுவதையே கலையாக பயின்று அடக்கு முறையை கொள்கையாக கொண்டவர்களிடம் நீதி கிடைக்காது என்ற முடிவுக்கு வந்தபின்னரே ஆயுத போராட்டம் மூலம் தம் மக்களுக்கு விடுதலை தேடித் தர முடியும் இலக்கோடு பணியாற்றினார்.

போரிலும் அறம் பிறழவில்லை.   உலகம் கண்டு வியந்தாலும் இறுதி கட்ட போரில் அமெரிக்காவோடு இந்தியா உள்ளிட்ட 21  நாடுகள் இனவாத இலங்கை அரசுக்கு ஆதரவாக நின்றது ஏன் என்ற கேள்விக்கு யாராலும் இப்போது விடை காண இயலாது.

புலிகளின் தாகம் தமிழ் ஈழ விடுதலை – என்ற கனவு அடக்கி வைக்கப் பட்ட இனத்தின் குமுறல். அது ஆயுத போராட்டத்தால் கிடைக்க வழி அடைக்கப் பட்டுள்ளது.

ஆனால் அறிவாயுதத்தின் வழி என்றும் அடைபடாது அடைக்கப்  பட முடியாது.

எந்த  இனமும் நிரந்தரமாக அடிமைப்படுத்தப் பட  முடியாது.

தீர்வு தள்ளிப் போயிருக்கிறது. வந்தே தீரும்.

மாவீரர் தின உரை கேட்க உலக தமிழர்கள் காத்திருந்த காலம் வீண் போகாது.