விளக்கம் சொல்ல திணறிய அன்புமணி ராமதாஸ் பேட்டியை பாதியில் முடித்தார்?

Anbumani-ramadoss
Anbumani-ramadoss

விளக்கம் சொல்ல திணறிய அன்புமணி ராமதாஸ்

கார் உள்ளளவும் பார் உள்ளளவும் திமுக அதிமுக வோடு  கூட்டு  கிடையாது என்று மார் தட்டிய மருத்துவர் ராமதாஸ் கடைசியில் அதிமுகவோடு கூட்டு சேர்ந்து அதை விருந்து வைத்தும் கொண்டாடி விட்டார்.

ஆனால் மக்கள்தான் ரசிக்கவில்லை.

அதிமுக அரசு மீது ஊழல் புகாரை ஆளுநரிடம் கொடுத்த பாமக எந்த முகத்தோடு இப்போது கூட்டணி வைக்கிறது?

விளக்கம் சொல்கிறேன் என்று அன்புமணி இன்று பத்திரிகையாளர்களை சந்தித்தார்.  ஏடாகூடமாக கேள்விகள் எழுந்தவுடன் பதில் சொல்ல மிகவும் திணறிப் போனார் அன்புமணி. ஒரு கட்டத்தில் எரிச்சல் அடைந்தவர் நிதானம் இழந்து நிருபர்களை பார்த்து உட்காருங்கள் என்று கட்டளை  இட தொடங்கினார்.  மீண்டும் மீண்டும் பழைய நிலைப்பாடுகளை நினைவு படுத்தவே பாதியில் பெட்டியை முடித்துக் கொண்டு  கிளம்பினார் அன்புமணி.

இப்படி எரிச்சல் அடைந்த  முகத்தோடு அன்புமணியை யாரும் பார்த்ததில்லை.

இப்போதும் அதிமுக மீதான ஊழல் புகாரில் உறுதியாக இருக்கிறோம் என்றவர் முகாந்திரம் இருந்தால் நடவடிக்கை கோருவோம் என்றார். முகாந்திரம் இல்லாமலா ஊழல் புகார் கூறினார்?

தாங்கள் கொடுத்த பத்து கோரிக்கைகளை அதிமுக அரசு பரிசீலிக்க தயாராக இருந்ததால் இந்த முடிவு என்றதுதான் இடித்தது. இதுவரை கோரிக்கைகளை ஏற்றுக் கொண்டதால் இந்த முடிவு என்று கேள்விப் பட்டிருக்கிறோம் .  பரிசீலனை செய்வதாக கூறியதை ஏற்றுக் கொண்டு  முடிவு எடுத்தது இதுதான் முதல் முறை.

பாமக வைத்த பத்து கோரிக்கைகளும் மாநில அரசு மட்டுமே ஏற்றுக் கொண்டு  அமுல் படுத்தக் கூடியது அல்ல. மத்திய அரசும் சேர்ந்து முடிவு செய்ய வேண்டியவை.

கோதாவரி-காவிரி இணைப்பு, ஏழு தமிழர்கள்  விடுதலை சாதிவாரி கணக்கெடுப்பு, மேகதாது அணை தடுத்தல், நீட் தேர்வு கைவிடல் ஆகியன மத்திய அரசு முடிவெடுக்க வேண்டியவை. தமிழ் நாட்டின் இருபது பாசன திட்டங்கள், காவிரி வேளாண்மை மண்டலம், மதுக்கடைகள் மூடல், மணல் குவாரி  மூடல், பழைய பென்ஷன், உழவர் ஊதிய குழு மற்றும் கடன் தள்ளுபடி மாநில அரசு முடிவெடுக்கக் கூடியவை.

இதில் எந்த மோரிக்கையை மாநில அரசு ஏற்றுக்  கொண்டது என்பதில்  கூட விளக்கம் ஏதும் இல்லை. பரிசீலிக்கிறோம் என்பது எப்படி ஏற்றுக் கொண்டது ஆகும்?

கொள்கை என்று எல்லாம் இனிமேல் மருத்துவர் ராமதாசோ அல்லது அன்புமணியோ பேச முடியாது. யாரும் நம்ப மாட்டார்கள்.

மாற்றம், முன்னேற்றம், அன்புமணி,

பதவி, பணம், வாரிசு என்றாகிவிட்டது.