தமிழர் ஒற்றுமைக்கு தடையாக இருக்கும் பாமக ??!!

anbumani-ramadoss
anbumani-ramadoss

மீண்டு எழவே முடியாத நிலைக்கு போய் விட்டது பாட்டாளி மக்கள் கட்சி.

ஒரு மகளிர் அணி செயலாளர் விலகிவிட்டார். நடிகர் ரஞ்சித் துணைத்தலைவர் பதிவியில் இருந்தும் உறுப்பினர் பொறுப்பில் இருந்தும் விலகிய கையோடு தினகரனின் அ ம மு க வில் இணைந்து விட்டார்.

ஒரு காலத்தில் தமிழர் ஒற்றுமையை கட்டிக் காக்கும் என நம்பப் பட்ட கட்சி இன்று தமிழர் ஒற்றுமைக்கு உலை வைக்கும் கட்சியாக மாறிப்போய் விட்டது.

சாதிகள்தான் தமிழர் ஒற்றுமைக்கு தடை என்பது உண்மையானால் சாதிக் கட்சியான பாமக எப்படி தமிழர் ஒற்றுமையை ஏற்படுத்தும் என்ற கேள்வி எழுந்ததால் மருத்துவர் ராமதாஸ் திருமாவளவனோடு கைகோர்த்து வன்னியர் தலித் ஒற்றுமையை வலியுறுத்தி வந்தார்.

ஒரு தேர்தலில் வெற்றி  பெற முடியவில்லை  என்பதற்காக அதன் காரணம் தலித் கட்சியோடு காட்டிய உறவுதான் என தவறாக கணக்கிட்டு வாக்கு வங்கி அரசியலுக்காக தலித் உறவையும் திருமாவளவன் உறவையும் துண்டித்தவர் மருத்துவர் ராமதாஸ்.

அதுவரை போராளியாக இருந்தவர் அதுமுதல் வணிகராக மாறிப்  போனார்.

இன்று அதிமுக வுடன் கூட்டணி கண்டவுடன் அன்புமணி பத்திரிகையாளர்களை சந்திக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இன்று நிலவும் வன்னியர்-தலித் பகைமைக்கு ராமதாஸ் காரணமா? திருமாவளவன் காரணமா?

இருவரும் கடைப்பிடிக்கும் விரோதம் தமிழர்களுக்கு நல்லதல்ல என்பதை இருவரும் உணர்ந்து இருக்கிறார்களா ?

பாமக இருக்கும் இடத்தில நான் இருக்க மாட்டேன் என்று திருமா கூறுகிறார்.  நிரந்தரமாக வன்னியர் எதிரியாக இருக்கப் போகிறாரா?    குறைந்த பட்சம் வேல்முருகனோடு கூட சேர்ந்து வலம்வரக்கூடாதா?

சாதிக் கட்சி என்ற முத்திரை விழக் கூடாது என்பதற்காகத்தான் முகமூடி பெயர்களை சூட்டிக் கொள்கிறார்கள்.

பாட்டாளி மக்கள் கட்சி -வன்னியர் கட்சிதான்

புதிய தமிழகம்-தேவேந்திர குல வேளாளர் கட்சிதான்

புதிய நீதி கட்சி -முதலியார் கட்சிதான்

இந்திய ஜனநாயக கட்சி- உடையார் கட்சிதான்

கொங்கு நாடு தேசிய மக்கள் கட்சி- கவுண்டர் கட்சிதான்

அ இ சமத்துவ மக்கள் கட்சி- நாடார் கட்சிதான்

விடுதலை சிறுத்தைகள் கட்சி- பறையர் கட்சிதான்.

தேவநாதன் யாதவர் கட்சி நடத்துகிறார். ஜான் பாண்டியன், வேல்முருகன், என்று பலரும் கட்சிகளின் பெயரை பொதுவாக வைத்துக்  கொண்டு  சாதிக்கட்சிகள் தான் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். முத்தரையர், வேளாளர், கிருத்துவர், முஸ்லிம் என்று மதம் சாதி அடிப்படையில்தான் கட்சிகள் இயங்கி வருகின்றன.

இவர்களது சாதி அமைப்புகளை ஒழித்தால் தான் தமிழர் ஒற்றுமை உருவாகும்.

சாதிகளை வைத்துக் கொண்டு தமிழர் ஒற்றுமையைக் கொண்டு வரவே முடியாது.

எனவே தமிழர் ஒற்றுமையை கொண்டு வரவேண்டும் என்று விரும்பும் எவரும் இந்த சாதிக் கட்சிகளை ஆதரிக்கவே முடியாது- கூடாது.

வேறு விதமாக சொல்லுவதென்றால் பாமக வலுவாக இருந்தால் தமிழர் ஒற்றுமை உருவாகாது  என்பதால் அதை தோற்கடித்தே ஆக வேண்டும்.  வலுவிழக்கச் செய்தே ஆக வேண்டும்.

பாமகவை தோற்கடிப்போம் சாதி ஒழிப்பை நிலை நாட்டுவோம்.