மோடியை விமர்சித்தால் பாகிஸ்தான் ஆதரவாளர்களா?!
தாமோதரதாஸ் நரேந்திர மோடி – தனிப்பட்ட முறையில் ஒழுக்க சீலர் – சொத்து சேர்க்காதவர் – நாட்டுக்காக தன்னை அர்ப்பணித்தவர் – கடுமையாக உழைப்பவர் .
அதில் எல்லாம் யாருக்கும் எந்த கருத்து வேறுபாடும் இல்லை.
கருத்து வேறுபாடு எங்கே தோன்றுகிறது என்றால் அவர் என்ன கொள்கையை கொண்டிருக்கிறார்? யாருடைய பிரதிநிதியாக செயல் படுகிறார் ? யார் அவரை ஆட்டுவிக்கிறார்கள்? உண்மையான அதிகாரம் யாரிடம் இருக்கிறது? இதில்தான் மாற்றுக் கருத்து நிரம்ப இருக்கிறது.
சனாதன தர்மத்தை நிலைநாட்ட பாடுபடுகிறார். கார்பரேட் பெரு முதலாளிகளின் பிரதிநிதியாக செயல்படுகிறார். ஆர் எஸ் எஸ் அவரை ஆட்டுவிக்கிறது. உண்மையான அதிகாரம் ஆர் எஸ் எஸ் இடம் இருக்கிறது. இதை மறுக்க முடியுமா முடியாதா ?
குடும்பத்தை கவனிக்கவில்லை என்ற கொச்சையான விமர்சனங்கள் அர்த்தமற்றவை. அவரது சொந்தங்கள் சாதாரணமான இயல்பு வாழ்க்கை வாழ்கிறார்கள் என்பது போற்றப்பட வேண்டியதுதான். வாழ்த்துவோம்.
ஆனால் பிரச்னை அதுவா?
ஒப்பீடு சரியா இல்லையா எனத் தெரியவில்லை. ஆனால் ஹிட்லர் , முசோலினி போன்ற சர்வாதிகாரிகள் கூட தனிப்பட்ட முறையில் ஒழுக்க சீலர்கள் தானே? சொத்து சேர்க்காதவர்கள் தானே? உறவினர்களை பேணாதவர்கள் தானே? அவர்கள் கொண்டிருந்த இனவெறி- நாங்கள் ஆளப் பிறந்தவர்கள் என்ற தவறான சித்தாந்தம் அதுதானே அவர்களை மற்றவர்கள் வெறுக்க காரணமாக அமைந்தது.
பாகிஸ்தான் நமக்கு பகை நாடு. அதற்கு அது முஸ்லிம் நாடு என்பது மட்டும் காரணம் இல்லை. பக்கத்தில் பங்களா தேசம் ஆப்கானிஸ்தான் முஸ்லிம் நாடுகள் நம்மோடு நேசத்தோடு வாழவில்லையா? காஷ்மீர் தான் பாகிஸ்தான் நம்மோடு பகை நாடாக தொடர காரணம். காஷ்மீர் பிரச்னை தீர்ந்தால் ஒருவேளை பாகிஸ்தான் நட்பு நாடாக மாற வாய்ப்பு இருக்கிறது.
காஷ்மீர் பிரச்னையை தீர்ப்பதற்கு நாம் மேற்கொண்ட முயற்சிகள் என்ன? சிக்கல் நிறைந்தது காஷ்மீர் பிரச்னை. ஒரே நாளில் அதை தீர்த்து விட முடியாது. காஷ்மீர் பள்ளத்தாக்கு, லடாக், ஜம்மு மூன்றும் தனித்தனி பிரச்னைகளை உள்ளடக்கியவை. காஷ்மீரில் மட்டும்தான் முஸ்லிம்கள் பெரும்பான்மை.மற்ற இரண்டு பகுதிகளை அவர்கள் கட்டுப் படுத்த முடியுமா ? எந்த மக்களையும் ராணுவ பலம கொண்டு மட்டும் ஆண்டு விட முடியுமா? எத்தனை காலத்துக்கு முடியும்? முடிந்தாலும் அது நியாயமா? பேசி மட்டுமே தீர்க்க வேண்டிய பிரச்னை காஷ்மீர்.
பாகிஸ்தான் தனக்குள் முஸ்லிம் பயங்கரவாத பிரச்னைகளை எதிர்கொண்டு வருகிறது. ராணுவம் தான் உண்மையான அதிகாரத்தை செலுத்தி வருகிறது. புட்டோ, பெனாசிர், என்று அதன் தலைவர்கள் கொல்லப்பட்டு ஜனநாயகம் அதற்கு அன்னியப் பட்டு நிற்கிறது. பயங்கரவாதிகளை கட்டுப்படுத்த முடியாமல் அனுமதிப்பதால் தான் அமேரிக்கா போன்ற உலக நாடுகள் பலவும் பாகிஸ்தானை எச்சரித்து வருகின்றனர்.
உயிரைப் பணயம் வைத்து இந்திய வீரர்கள் எல்லைப் பகுதிகளில் பணியாற்றி வருகிறார்கள்.
எந்தப் போரிலும் இந்தியாவை பாகிஸ்தான் வென்றதில்லை. வெல்லவும் முடியாது. எப்போதும் பாகிஸ்தானை ஆதரிக்கும் சீனா கூட இன்று தயங்கி நிற்கிறது. நமது ராணுவ பலம் வெற்றிக்கு உத்தரவாதம் தரும்.
எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் இதே நிலைதான். காங்கிரசும் பாஜக-வும் வெளி உறவுக் கொள்கையில் மாற்றுக் கொள்கை கொண்டவர்கள் அல்ல. மூன்றாவதாக யார் வந்தாலும் இதே நிலைதான் நீடிக்குமே தவிர மாற்று நிலை எடுக்கப் போவதில்லை.
இன்று இந்திய தேசம் முழுவதும் ராணுவத்தின் பக்கம் நிற்கிறது.
அபிநந்தன் விடுதலையை எல்லா இந்தியரும் கொண்டாடுகிறார்கள்.
அவரை பாகிஸ்தான் விடுவித்தது சர்வதேச நிர்பந்தம் காரணமா, இந்தியாவின் மீதான அச்சம் காரணமா என்ற விவாதத்தை தாண்டி பேச்சு வார்த்தைக்கு தயார் என்று அறிவிக்க வேண்டிய நிலையில் தான் இம்ரான் கான் இருக்கிறார்.
ஆனால் இந்தியா பேச்சுவார்த்தைக்கு உடனடியாக சம்மதிக்க தயங்குவதன் காரணம் பாகிஸ்தானில் இயங்கி வரும் பயங்கர வாத குழுக்களை கட்டுப்படுத்தாமல் பேச்சு வார்த்தை நடத்துவதில் பயன் இல்லை என்பதுதான். அதில் நியாயமும் இருக்கிறது.
இப்படி ஒட்டு மொத்த தேசமும் மத்திய அரசின் பின்னாலும் ராணுவத்தின் பின்னாலும் இருக்கும்போது பிரதமர் மோடியை அரசியல் காரணங்களுக்காக விமர்சிப்பதை ஏதோ தேசத்துக்கே எதிராக பேசுவதாக முத்திரை குத்துவது என்ன நியாயம்?
போரினால் கர்நாடகாவில் 22 இடங்களில் வெற்றி பெறுவோம் என்று எடியூரப்பா பேசினால் அது அரசியல் அல்ல. எடியூரப்பாவின் பேச்சை பாகிஸ்தானில் பிரசுரித்து அரசியல் காரணங்களுக்காக மோடி போர் நடத்துகிறார் என்றார்களே அவர்களை என்ன செய்வீர்கள். எடியூரப்பா மேல் நடவடிக்கை எடுத்தீர்களா?
தேசம் பெரிது. அதில் அரசியல் செய்யாதீர்கள்.