வலிமையான மாநிலங்கள் வளமான பாரதம்!!! 2019 பொதுத்தேர்தல் முடிவுகள் காட்டப்போகும் புதியபாதை??!!

indian-politics
indian-politics

மாநிலங்களை பலவீனமாக்கி, மத்தியில் ஆட்சியில் அமரும் ஆட்சிகள் இதுவரை இந்தியாவை புதுவிதமான மேலாதிக்க ஆட்சி முறையை அறிமுகப்படுத்திவிட்டன.

வெள்ளையர்கள் ஆண்டது போலவே சற்று மாறுதலாக வடநாட்டார் மற்ற மாநிலங்கள ஆள்வதும் இந்தி பேசாத மாநிலங்களை அடக்கி ஆள்வதும் நடைமுறைக்கு வந்துவிட்டது.

2019 பொதுத்தேர்தல் முடிவுகள் இத்தகைய மேலாதிக்க முறைக்கு முடிவு கட்டும் என்ற எதிர்பார்ப்பு மேலோங்கி நிற்கிறது.

தேசிய கட்சிகளின் செல்வாக்கு நாளுக்கு நாள் தேய்ந்து வருவதும் மாநிலங்களின் கட்சிகள் நாளுக்கு நாள் செல்வாக்கு பெருகுவதும் இந்திய ஒற்றுமையை மேலும் கட்டிக்காக்கும் வல்லமையை உருவாக்கி வருகிறது.

காங்கிரஸ் பாஜக கட்சிகள் தனித்து ஆட்சிக்கு வருவது இனி நடக்காது.

இரு கட்சிகளுமே மாநில கட்சிகளின் கூட்டுறவால் மட்டுமே ஆட்சியில் அமர முடியும.

சென்ற தேர்தலில் இந்து மத மேலாதிக்கத்தை வலியுறுத்தி பாஜக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சிக்கு வந்தது.

இந்தி பேசும் உ பி, ராஜஸ்தான், ம பி, பீகார், உத்தரகாண்ட், சட்டிச்கார் மாநிலங்களில் சரிந்து விட்ட பாஜக-வின் செல்வாக்கு சென்ற சட்டமன்ற தேர்தல்களில் வெளிப்பட்டுவிட்டது.

modi-farmers
modi-farmers

மோடி பிராமணர் அல்லாதார் என்பதும், சொத்து சேர்க்காதவர் என்ற பெயரும், நாட்டிற்காக தன்னை அர்ப்பணித்தவர் என்ற மதிப்பும், அவர் பிரதிநிதித்துவபடுத்துவது பெரு நிறுவனங்களை என்பதும், உயர்த்த நினைப்பது இந்தியை என்பதும், இலக்கு தன் ஆட்சியை நிலைப்படுத்துவதும், என்ற உண்மை மக்களுக்கு தெரிந்தபின் அவரது செல்வாக்கு மங்கிவிட்டது.

யார் பாஜகவுக்கு சொத்தாக இருந்தாரோ அவர் இன்று பாஜக-வின் சுமையாக மாறிவிட்டார்.

இன்றைக்கு பாஜக தோற்றால் அதற்கு பிரதமர் நரேந்திர மோடியே காரணமாக இருப்பார். 

திராவிட முன்னேற்றக் கழகம் முன்னெடுத்த மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தில் சுயாட்சி தத்துவம் இன்று பெருத்த வெற்றியை பெறும் சூழ்நிலை உருவாகி வருகிறது.

மாநிலங்கள் வளமாக இருந்தால் போதும். வலிமை வேண்டாம் என்பது பழைய சித்தாந்தம். மாநிலங்களுக்கும் வலிமை வேண்டும். இதுவே புதிய  சித்தாந்தம்.

பாஜக-வுக்கும் காங்கிரசுக்கும் வேட்பாளர்களை டெல்லியில் இருந்துதான் அறிவிக்க வேண்டும் என்றால் இங்கே எதற்கு மாநில அமைப்புகள்? மாநில அமைப்புகளுக்கு என்ன அதிகாரம்?

உரிமையை கேட்டால் பிரிவினைவாதி முத்திரை குத்தி அடக்கி விடுவது இனி நடக்காது. ஏனென்றால் இந்தியாவில் பிரிவினை கேட்கும் தேவை எழவே இல்லை. இங்கே இருக்கும் அரசியல் சட்டம் எல்லா குடிமக்களுக்கும் சம உரிமை வழங்கி இருக்கிறது. உரிமை சட்டத்தில் இருக்கிறது.ஆனால் அமுலில் இல்லாமல் இருக்கிறது. இந்த முரண்பாட்டை களையும் பணியை நீதிமன்றங்கள் செய்து கொண்டிருக்கின்றன. எனவே இந்திய ஜனநாயகம் சமத்துவத்தை கட்டிக் காக்கும் வலுவான அரசியல் சட்டத்தின் மேலே கட்டி எழுப்பப் பட்டிருப்பதால் யாரும் பிரிவினை கேட்கும் தேவை எழவில்லை.

தேசிய கட்சிகள் இந்தி பேசும் மாநிலங்களில் அடங்கி விட வேண்டியதுதான்.

   மத்தியில்  மாநிலக் கட்சிகளின் கூட்டாட்சி மலரும் நாளே இந்தியாவின் ஒற்றுமையை உறுதிப்படுத்தும் நன்னாள்.