தமிழகத்தில் மத்திய அரசின் துறைகளாக ஐம்பதுக்கும் மேலான அலுவலகங்கள் இருக்கின்றன.
வருமான வரித்துறை, கலால், பாஸ்போர்ட், சுங்கம், ரயில்வே, என்று ஏராளமான துறைகள்.
இவை அத்தனையிலும் 90% வட மாநிலத்தவரும் 10% மட்டுமே தமிழர்களும் இருப்பது மர்மமாக உள்ளது.
மத்திய பணியாளர் தேர்வாணையம் செயல்படுவது முன்பு மண்டல அளவில் தேர்வு முறை இருந்ததால் இங்கே உள்ளவர்களுக்கு உரிய பங்கு கிடைத்தது. பின்னர் உச்ச நீதி மன்ற உத்தரவின் பேரில் அகில இந்தியாவும் ஒரே ரேங்க் முறையை பின்பற்ற வேண்டி வந்ததால் வட மாநிலத்தவர் ஆதிக்கம் அதிகமாகி விட்டது என்று காரணம் சொன்னாலும் உச்ச நீதிமன்றத்தில் தமிழ் நாட்டு சார்பில் ஏன் தகுந்த முறையில் வழக்காட வில்லை என்ற கேள்வி எழுகிறது.
எல்லாவற்றையும் விட இங்கே அரசியல் செய்பவர்கள் ஏன் இந்த முக்கியமான பிரச்னையை கையில் எடுத்து கொண்டு பரிகாரம் காணவில்லை.?
இந்தி ஆங்கிலம் மட்டுமே தேர்வு மொழி என்றால் தமிழ் படித்தவன் மத்திய அரசின் துறையில் பணி புரிய தகுதி படைத்தவன் ஆக மாட்டானா?
தேர்வு முறையில் முறைகேடு என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஹரியானாவில் உள்ளவன் தமிழில் தேர்வு எழுதி வெற்றி பெறுகிறான். தமிழ் நாட்டு மாணவன் தோல்வியடைகிறான் என்றால் தேர்வு முறையில் ஊழல் நடைபெருகிறது என்றுதான் பொருள்.
கடந்த பத்தாண்டுகளில் நடந்த மத்திய அரசுப் பணி தேர்வுகளை ஒரு தகுதி படைத்த ஆய்வுக் குழுவிடம் ஆராயச் சொல்லி தவறு செய்தவர்கள் மீது தண்டனை நடவடிக்கை எடுத்தால் தான் இது போன்ற தவறுகள் இனி நடவாமல் தடுக்க முடியும்.
கேள்வித்தாள்கள் அந்தந்த பிராந்திய மொழிகளில் தயார் செய்ய வேண்டும். அதேபோல் தேர்ச்சி பெற்றவர்களை அந்தந்த மண்டலங்களில் பணி அமர்த்த வேண்டும்.
அகில இந்தியா என்ற பெயரில் தமிழகத்தை வடவர்களின் காலனியாக மாற்றிட அனுமதிக்கக் கூடாது.
இங்கே இயங்கும் சாலை சுங்க வரி வசூலிக்கும் நிறுவனங்கள் கூட வட மாநிலத்தில் இருந்து ஊழியர்களை நியமித்தால் இங்கே இருப்பவர்களுக்கு வேறு என்ன வேலை தருவீர்கள்?