இருக்கும் பிரச்னைகள் போதாது என்று பாஜக மாநில தலைவர் தமிழிசை முக்குலத்தோர்- நாடார் பிரச்னையை கிளப்பி இருக்கிறார்.
ஏற்கெனெவே பசும்பொன் முத்துராமலிங்க தேவர் தொண்டர்களுக்கும், பெருந்தலைவர் காமராஜர் தொண்டர்களுக்கும் அரசியல் நிலைப்பாட்டில் மோதல்கள் இருந்து வருகின்றன.
இருவரும் காங்கிரசில் இரண்டு கோஷ்டிகளில் இருந்தவர்கள்.
ஒருவர் முதல்வர் ஆக மற்றவர் எதிர்கட்சித்தலைவர் ஆக இருந்தவர். ஆனால் இருவருமே சமுதாயத்தில் மதிப்பு மிக்க தலைவர்கள் ஆக விளங்கினார்கள்.
கள்ளர்கள் மீது குற்ற பரம்பரை சட்டம் ஆங்கிலேயர் காலத்தில் அமுல்படுத்தப்பட்டு அதை நீக்க போராடியவர்கள் அவர்கள். இந்த வரலாறு தமிழிசைக்கு தெரியாதா?
ஆனால் கனிமொழி வழக்குகளை சந்தித்து வருபவர் என்பதற்காக அவரை தாக்குவதாக எண்ணிக்கொண்டு அவரைப் போல் நான் வழக்குகளை சந்தித்து வரவில்லை என்ற பொருளில் நான் கற்ற பரம்பரை, குற்ற பரம்பரை அல்ல என்று தமிழிசை குறிப்பிட்டது முக்குலத்தோரை காயப்படுத்தி இருக்கிறது.
ஒரு மாநிலத் தலைவர் எச்சரிக்கையுடன் கருத்துக்களை தெரிவிக்க வேண்டும் . எரியும் நெருப்பில் எண்ணையை ஊற்றுவதுபோல் அமைந்து விடக்கூடாது.
தமிழிசை தனது பதிவை உடனடியாக நீக்கி விட்டார். ஆனால் வருத்தம் தெரிவிக்க வில்லை. நான் போற்றும் பரம்பரை என்றும் அவர் குறிப்பிட்டிருக்கிறார். நிச்சயம் அவர் திட்டமிட்டு அப்படி பேசியிருக்க மாட்டார் என்பது உறுதி. அப்படிப்பட்டவர் அல்ல அவர்.
ஆனால் அவசரப்பட்டு கருத்து தெரிவிக்கிறவர் என்ற முத்திரை அவர் மீது விழுந்து விட்டது.
இனியாவது தமிழிசை நிதானம் காட்டட்டும்.