செப்டம்பர் 11 ம் தேதி இமானுவேல் சேகரனின் நினைவு நாள் அமைதியாக கழிந்தது. வரும் அக்டோபர் 30 ம் தேதி பசும்பொன் தேவர் குருபூஜையும் நல்லபடியாக அசம்பாவிதம் ஏதுமில்லாமல் நடந்தேற வேண்டுமே என்ற கவலை தமிழ் உணர்வாளர்களுக்கு ஏற்படுவது இயற்கை.
ஒருகாலத்தில் தேவர்-பள்ளர் இடையே ஏதோ ஒரு காரணத்தால் பகை உணர்வு ஏற்பட்டிருக்கலாம். ஆனால் இன்றும் அது ஏதோ ஒரு வகையில் தொடர்கிறது என்பது உண்மைதானே?
இருவரும் தமிழ்ச்சாதியினர். ஒருவரை ஒருவர் சார்ந்து வாழ்பவர்கள். .
இதை இப்படியே விட்டு விடக்கூடாது என்று நினைப்பவர்கள் படித்தவர்கள் பண்புள்ளவர்கள் தலைவர்கள் இரு தரப்பிலும் இல்லையா???
அரசு தலையிட்டு சமரசப் பேச்சு வார்த்தை நடத்திய போது நிகழ்ந்த சம்பவங்கள்தான் பல்வேறு சம்பவங்களுக்கு காரணம் என்று சொல்கிறார்கள்.
இருக்கட்டும். அவைகளை மீண்டும் பரிசீலனை செய்ய வேண்டும் என்கிற அறிவுஜீவிகள் யாரும் இல்லையா? தமிழ்ச் சாதிகளுக்குள் வேற்றுமைகளை களைய வேண்டும் என்று பாடுபடுகிற சாதித் தலைவர்கள் யார்?
அவரவர் தங்கள் சாதி மீதான பிடிப்பை உறுதி செய்து கொள்வதில்தானே அக்கறை காட்டுகிறார்கள்.
ஆயிரம் சொன்னாலும் கலைஞர் தனது மூத்த மருமகளை பள்ளர் சாதியில் தேர்ந்தெடுத்த முன்னுதாரணத்தை வேறு எந்த தலைவர்கள் செய்து காட்டியிருக்கிறார்கள் ?
விடுதலைப்புலிகளின் தலைவர் மேதகு பிரபாகரன் இயக்கத்தில் விதவைத் திருமணத்தையும் சாதி மறுப்பு திருமணத்தையும் நடத்திக் காட்டிய தீர்க்க தரிசனத்தை தமிழகத்தில் எத்தனை தலைவர்கள் சிந்தித்திருக்கிறார்கள்.
இன்று தமிழர் ஒற்றுமைக்கு சாதிகள் தானே தடைகளாக இருந்து வருகின்றன. மருத்துவர் ராமதாஸ் நல்ல பல கருத்துகளை சொல்லி வந்தாலும் பரிமளிக்காமல் போவது எதனால்? திருமாவளவன் மீது கொட்டும் நெருப்பு விமர்சனங்கள் ஆதி திராவிடர் சமூகத்தின்மீது பிரதி பலிக்கிறதா இல்லையா? அவர்களை ஒதுக்கி வைத்து விட்டு தலித் அல்லாதவர் வாக்குகளை மட்டும் ஒருங்கிணைத்து வெற்றி பெற துடிக்கிறீர்களே தவிர இதனால் பலியாகும் தமிழர் ஒற்றுமையை பற்றிய கவலை உண்டா?
டாக்டர் கிருஷ்ணசாமி தன் பங்குக்கு ஒற்றுமையை ஏற்படுத்த என்ன செய்திருக்கிறார் ?
முக்குலத்தோர் சமூக தலைவர்கள் என்று சொல்லிகொள்ளும் டாக்டர் சேதுராமன் ஸ்ரீதர் வாண்டையார் போன்றோர் இமானுவேல் சேகரன் குருபூஜையிலும் டாக்டர் கிருஷ்ணசாமி , திருமாவளவன் , ஜான் பாண்டியன் , செ..கு.தமிழரசன் போன்றோர் தேவர் குருபூஜையிலும் கலந்து கொண்டால் பகைமை மறையாதா?
போனால் தங்கள் பிடி தளர்ந்து விடும் என்ற அவர்களின் பயம் நியாயமானதா?
ஆதிக்க சிந்தனை மேலோங்கி நிற்பவர்களிடம் சமத்துவம் பேச முடியாது என்பது நிதர்சனமாக இருக்கலாம் . ஆனால் அதை அப்படியே விட்டுவிட இவர்கள் ஏன்?
ஆட்சியில் இருப்பவர்கள் யார் பகைமையும் வேண்டாம் என்று ஒதுங்குகிறார்கள் . யாருமே எவரையும் பகைத்துக் கொள்ள தயாராக இல்லை.
தகுதி வாய்ந்த தலைவர்கள் இந்த பிற்பட்டோர்- தலித் மக்களிடையே உருவாகாததுதான் மோதல்கள் அதிகரிக்க காரணம்.!!!
இனியாவது சிந்திப்பார்களா???
—