புதிது புதிதாக முளைக்கும் தேர்தல் மோசடிகள்?! யார் பொறுப்பு??!!

election-commission
election-commission

பாராளுமன்ற தேர்தலாக இருந்தாலும் சரி சட்டமன்ற இடைத் தேர்தல்களாக  இருந்தாலும் சரி புதிது புதிதாக மோசடிகள் அரங்கேறிய வண்ணம் இருக்கின்றன.

மதுரையில் ஒரு தேர்தல் அதிகாரி நள்ளிரவில் வாக்கு யந்திரங்கள் இருந்த அறையில் அல்லது பக்கத்து அறையில்  அனுமதியின்றி புகுந்து  மூன்று மணி  நேரம் இருந்திருக்கிறார். அது சட்டப்படி தவறு என்பதால் பணி  இடைநீக்கம் செய்யப் பட்டிருக்கிறார். அவர் ஏன் சென்றார் மூன்று மணி  நேரம் அங்கு என்ன செய்தார் என்பது  பற்றி தேர்தல்  ஆணையம் ஏற்றுக் கொள்ளத் தக்க  விளக்கம் ஏதும் தரவில்லை. – இது முதல் மோசடி. 

கோவையில் இருந்து காலி வாக்கு யந்திரங்கள் தேனிக்கு கொண்டு செல்லப்படுகின்றன. அது தேர்தல் ஆணைய உத்தரவுக்கு இணங்கத்தான் கொண்டு செல்லப்பட்டதாக தமிழக தேர்தல் அதிகாரி கூறுகிறார். மறு வாக்குப்பதிவு செய்ய அவசியம் இருக்கும் என தீர்மானித்து கொண்டு செல்லப்பட்டதாக கூறுகிறார்கள். அது 13 மாவட்டங்களில் உள்ளதாக கூறப்பட்டது. எனில், ஏன் எல்லாம் தேனிக்கு கொண்டு செல்லப் பட வேண்டும்? – இது இரண்டாவது மோசடி. 

46 வாக்குச்சாவடிகளில் மாதிரி வாக்குப்பதிவு செய்தபோது பதிவான ஐம்பது வாக்குகளை அழிக்காமல் விட்டிருக்கிறார்கள். அது 13 மாவட்டங்களில் உள்ளவை.  மேலும் 10 வாக்குச் சாவடிகளில் பிற சமூகத்து வாக்காளர்களை வாக்களிக்க விடாமல் செய்தது மற்றும் ஒரு  குறிப்பிட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் யாரையும் வாக்களிக்க விடாமல் தாங்களே வாக்களித்துக் கொண்டது போன்ற குற்றச்சாட்டுகளால் அவைகளுக்கு மறு தேர்தல் நடத்த பரிந்துரைத்து இருப்பதாக தமிழ்நாடு தேர்தல் அதிகாரி கூறினார். ஆனால் இந்திய தேர்தல் ஆணையம் இப்போது 13 வாக்கு சாவடிகளுக்கு மட்டும் மறுதேர்தல் அறிவித்துள்ளது. மாதிரி வாக்குகளை எப்படி நீக்கப்  போகிறார்கள்? எண்ணிக்கை இடிக்குமே? இது மூன்றாவது மோசடி.

1.50 அரசு ஊழியர்கள் போட வேண்டிய அஞ்சல் வாக்குகள் கொடுக்கப்படாமலே விடுபட்டது எப்படி? அதுவும் வாக்குகள் அனைத்தும் கணக்கில் கொண்டு வரப்படாமல் விடுபட்டு போனது எப்படி? அரசு ஊழியர்கள் எதிராக இருப்பதால் ஆளும்கட்சி தலையிட்டு அவர்களது வாக்குகளை களவாடியதா? இது நான்காவது மோசடி. 

கன்னியாகுமரி மாவட்டத்தில் இருபதாயிரத்துக்கும் மேற்பட்ட சிறுபான்மை மக்களது வாக்குகள் காணாமல் போனது எப்படி? இது ஐந்தாவது மோசடி. 

சட்டமன்ற இடைதேர்தல் நடைபெறும் தொகுதிகளில் வாக்குக்கு இரண்டாயிரம் கொடுத்திருப்பதால் ஆளும்கட்சி நம்பிக்கையுடன் இருக்கிறது. இது பற்றி எல்லாரும் பேசுகிறார் களே தவிர புகார் கொடுக்கவோ விசாரிக்கவோ யாரும் தயாராக இல்லை. பணத்தின் ஆதிக்கம் பெருமளவு இந்த தேர்தலில் இருந்ததை மறந்து எப்படி கடந்து போவது? எந்த ஊடகமும் இது பற்றி விரிவாக விவாதிக்க தயாராக இல்லை என்பது சோகம்.

              இன்னும் வாக்கு எண்ணிக்கை நடப்பதற்குள் என்னென்ன மோசடிகள் அரங்கேறுமோ?