திமுகவை வசைபாடி யாரை வளர்க்க உதவுகிறார் சீமான்??!!

seeman

சீமான் திசை மாறி சென்று கொண்டிருக்கிறார்.

எல்லாரும் கெட்டவர்கள் நான் மட்டுமே நல்லவன் என்று நீங்களே சொல்லிக் கொண்டிருந்தால் போதுமா? நாடு நம்ப வேண்டுமே?

இளைஞர்கள் சீமான் பக்கம் திரண்டது எதற்காக?

உரிமைக்காக போராட. பிரச்னைகளில் மக்களின் கவனத்தை திருப்ப. மத வெறியர்களை அடையாளம் காட்ட. மொழி காக்கும் கடமையை நினைவூட்ட.  புதிதாக ஒரு தலைமை கிடைத்தால் நல்லது என்ற எதிர்பார்ப்பில்.

ஆனால் நடப்பது என்ன? ஒரே வசைபாடல். திமுகவை அதன் தலைவர்களை கண்டபடி திட்டுவதுதான் மாற்றத்தை கொண்டு வருவதற்கு ஒரே வழியா சீமான்?

அதிமுகவையும் திட்டுகிறீர்கள். ஆனால் திமுக அளவுக்கு அல்ல. விட்டு விட்டாரே என்ற குறை வராமல் திட்டுகிறீர்கள். இதனால் எல்லாம் மக்கள் நம்பிக்கையை பெற்று விட முடியுமா?

  வள்ளல்பெருமான் புது ஆன்மிக பாதையை காட்டினார்.    

                     சாதி மத அடையாளங்களை சாடிய பெருமகனார் அவர்களை அதற்கு மேல் குறிப்பிட்டு சாடவில்லை. வேண்டாதவை என்று அடையாளம் காட்டினரே தவிர குறிப்பிட்டு எந்த மதத்தையும் விமர்சிக்கவில்லை.    

                    விமர்சித்தால் அவர்கள் இவரை விமர்சிப்பார்கள். அதற்கு பதில் சொல்வதே வேலையாக போய்விடும். அதனால் தான் சொல்ல வந்ததை மட்டும் ஓங்கி வலியுறுத்தி போதித்தார்.

எந்த மதமும் வேண்டாம் என்பது கொள்கை. அதற்காக அவர்களை விமர்சிப்பது வேண்டாத வேலை.

அதைப்போல் பெரியார் அண்ணா வழியில் வந்த திராவிட இயக்கங்களை விமர்சிப்பது என்பது சனாதனவாதிகளுக்கு பாதை விரிக்கும் வேலை. திராவிட இயக்கங்கள் இல்லாமல் இந்த சிந்தனை சீர்திருத்தம் வந்திருக்க முடியுமா?

பெரியாரை விமர்சிக்க என்ன அவசியம்? அதுவும் இன ரீதியில். தமிழர் விழிப்புணர்வுக்கு பெரியார் தடையாக இருந்திருக்கிறாரா? சாதி ஒழிப்புக் கிளர்ச்சிக்காரன் நான் என்று அறிவித்துக் கொண்டு சமுதாய வேலைக்கு வந்தவர் பெரியார். அரசியல் அதிகாரம் பெற அலைந்தாரா பெரியார்?

அதுவும் சமீப காலமாக திமுக அதிமுக தலைவர்களை முட்டா பசங்களா என்று திட்டும் அளவுக்கு கீழே இறங்கிவிட்டார் சீமான். வேறு வழியின்றி திமுக ஆதரவாளர்களும் உங்களை விமர்சிக்க கட்டாயப்படுத்தி விட்டீர்கள். இப்போதும் கூட உங்களை திமுக தலைவர்கள் யாரும் விமர்சிக்கவில்லை.

தமிழர் உரிமைகளுக்கு குரல் கொடுக்கும் எவரையும் திமுக அதிமுக உடனடியாக விமர்சிக்காது. அவர்கள் சொல்லாத எதை நீங்கள் இப்போது சொல்லி விட்டீர்கள்.?

15 லட்சம் வாக்குகளை பெற்று தினகரனுக்கு அடுத்த இடத்தை பெற்றிருக்கிறீர்கள்.    உங்களுக்கும் கீழே இருக்கும் கமலுக்கும் உங்களுக்கும் அதிக வித்தியாசம் இல்லை.

பணம் கொடுக்காமல் இந்த வாக்குகள் என்பது மட்டுமே போதுமா?

              கண்ணியம் தவறும் எந்த தலைவரும் வென்றதில்லை. உங்கள் பேச்சில் கண்ணியம் இருக்கிறதா சீமான்? 

உணர்ச்சிகளை தூண்டிவிட்டால் மட்டும் வெற்றி வந்து தானாக சேர்ந்துவிடாது.      மக்கள் அதை ஏற்றுக்கொள்ள வேண்டும்.

தமிழரின் தொன்மைத் தெய்வங்களை தூக்கிப்பிடிக்கும் நீங்கள் அதன் வழிமுறைகளையும் பிரச்சாரம் செய்ய வேண்டாமா? எப்படி அவைகள் சனாதன தர்மத்தில் இருந்து வேறுபட்டது என்பதை பிரச்சாரம் செய்ய வேண்டாமா?

            தமிழ்நாட்டில்  மட்டும் மண்ணைக் கவ்வி நிற்கும் காவி சக்திகள் அடுத்து தமிழ் நாட்டை குறிவைக்கும் என்பது எல்லாருக்கும் தெரிந்த உண்மை. 

அவர்களுக்கு நீங்கள் பயன்பட்டு விடுவீர்களோ என்ற அச்சம் எழுவது இயற்கைதானே?

           காட்டிக் கொடுப்பவர்களையும் ஐந்தாம் படைகளையும் தேடி அலையும் கூட்டத்திடம் சிக்கி விடுவீர்களோ என்ற அச்சத்தில் உண்மை இருக்கிறதா இல்லையா?