தமிழக அரசின் பாட புத்தகங்கள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன.
புதிய புத்தகங்களை பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் வெளியிட்டார்.
இதில் ப்ளஸ் 2 பொதுத்தமிழ் பாடப்புத்தகத்தின் அட்டை படத்தில் சர்ச்சைக்குரிய காட்சிகள் இடம் பெற்றுள்ளன.
அதில் பாரதியார் காவி தலைப்பாகை அணிந்திருக்கிறார்.
இதை பாட புத்தகத்தின் மூலம் காவியை திணிக்கும் செயலாகத்தான் பார்க்க முடிகிறது.
பாரதி வெள்ளை தலைப்பாகை அணியும் வழக்கமுள்ளவர் என்று அவரை அறிந்தவர்கள் கூறுகிறார்கள்.
மதம் சாராத தமிழ் புலவர்கள் யாரும் கண்ணுக்குத் தெரியவில்லையா?
தமிழை வளர்த்தவர்களில் கிறிஸ்தவர்கள் முஸ்லிம்கள் சமணர்கள் பங்கும் அளப்பரியது.
பாடநூல் கழக தலைவர் வளர்மதியிடம் கேட்டபோது அவர் காவி மயமாக்கும் எண்ணத்தில் இவ்வாறு வெளியிட்டதாக கூறுவது தவறு. இந்து மாநில அரசு வெளியிட்ட புத்தகம். கல்வித்துறையில் அரசியலோ மதமோ விளையாடுவதற்கு இடம் இல்லை. இதில் தவறு நடந்துள்ளது. இந்த பிரச்னைக்கு விரைவில் உரிய தீர்வு காணப்படும் என்றார்.
ஜெயலலிதா காலத்தில் ஒருமுறை பாடப்புத்தகங்களில் வள்ளுவர் சிலையை மறைப்பதற்காக என்று நினைவு. குறிப்பிட்ட பக்கத்தில் அட்டை ஒட்டி மறைத்துக் கொடுத்தார்கள். ஏனென்றால் அது கலைஞரை நினைவுபடுத்துவதாக இருந்ததாம்.
அதைப்போல இப்போது யாரோ பாஜக ஆதரவாளர் உள்ளே இருந்து கொண்டு இந்த வேலையை பார்த்திருக்கிறார். அதை இப்போதைய ஆட்சியாளர்கள் எப்படி எடுத்துக் கொள்வார்கள் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.
பாரதி எந்த மதத்துக்கும் சொந்தமானவனில்லை.
ஈசன் வந்து சிலுவையில் மாண்டான் என்று ஏசுவை எழுதினார்.
சொல்லாலும் மனத்தாலும் தொடரொணாத பெருஞ்சோதி, அல்லா அல்லா அல்லா என்று பாடனார்.
சாதி இரண்டொழிய வேறில்லை யென்றே
தமிழ் மகள் சொல்லிய சொல் அமிழ்தமென்போம்
நீதி நெறியினின்று பிறர்க்கு தவும்
நேர்மையர் மேலவர்; கீழவர் மற்றோர்,,, என்றவர் பாரதி.
வாழிய செந்தமிழ், வாழ்க நற்றமிழர், வாழிய பாரத மணித்திரு நாடு என்று தமிழையும் தமிழரையும் நாட்டையும் போற்றியவர்.
பார்ப்பானை ஐயரென்ற காலமும் போச்சே வெள்ளைப் பரங்கியைத் துரை என்ற காலமும் போச்சே என்று பள்ளர் களியாட்டம் பாடியவர் பாரதி.
ஆயிரந்தெய்வங்கள் உண்டென்று தேடி அலையும் அறிவிலிகாள்
பல்லாயிரம் வேதம் அறிவொன்றே தெய்வமுண்டாமெனல் கேளீரோ” என்று சாடியவன் பாரதி.
முன்னாளில் ஐயரெல்லாம் வேதம் ஓதுவார் மூன்று மழை பெய்யுமடா மாதம்; இந்நாளிலே பொய்ம்மைப் பார்ப்பார்-இவர் ஏதுசெய்தும் காசு பார்ப்பார் ;
பேராசைக்காரனடா பார்ப்பான் -ஆனால் பெரியதுரை என்னிலுடல் வேர்ப்பான்;
பிள்ளைக்குப் பூணூல் என்பான் -நம்மைப் பிச்சுப் பணங்கொடெனத் தின்பான் ;
என்று பார்ப்பனரின் போலித்தனத்தை மறவன் பாட்டில் தோலுரித்தவன் பாரதி.
பாரதியையும் விவேகானந்தரையும் ராமானுஜரையும் காட்டிக் காட்டியே ஏமாளி இந்து சமய மக்களை ஏமாற்றுவதையே பிழைப்பாக கொண்டிருக்கிறார்கள் இன்றைய சனாதனிகள்.
அந்த ஞானிகள் சொல்லிய எவற்றையும் இவர்கள் ஏற்றுக் கொண்டதில்லை. ஆனாலும் சொந்தம் கொண்டாடுவார்கள். அந்த முயற்சியில் ஒன்றுதான் பாரதி முன்டாசுக்கு காவி வண்ணம் பூசிய செயல்.
அதிமுக அரசு இந்த தவறை சரி செய்யும் என்று நம்புகிறோம்.