ராஜன் செல்லப்பா பற்ற வைத்த திரி ??!! அதிமுகவில் குண்டு எப்போது வெடிக்கும்??!!

rajan-chellappa
rajan-chellappa

ராஜன் செல்லப்பா இன்று பத்திரிகையாளர்களை சந்தித்து அதிமுகவில் உள்ள உட்கட்சி பூசலை கக்கினார்.

பொதுக்குழுவைக்  கூட்ட வேண்டும் என்று கோரிய அவர் அதிமுகவுக்கு வலுவுள்ள ஒற்றைத் தலைமையே வேண்டும் என்று கூறிய அவர் மறைமுகமாக தற்போது  இருக்கும் இரட்டைத் தலைமையை வலுவற்றது என்று குற்றம் சாட்டினார்.

ஒபிஎஸ் மகன் தான் பாராளுமன்றத்துக்கு தேர்ந்து எடுக்கப்பட்டவுடன் தான் மட்டுமே ஜெயலலிதா சமாதிக்கு சென்று மரியாதை செலுத்தியதை குறிப்பிட்டு ஏன் ஒன்பது எம்எல்ஏக்களையும் அழைத்து சென்றிக்கலாமே என்றும் குற்றம் சாட்டும் தொனியில் கூறினார்.

இதனால் தன்னை கட்சியை விட்டு நீக்கினாலும் பரவாயில்லை என்றவர் தன் கருத்தில் உறுதியாக இருப்பதாகவும் கூறினார்.

இதைத்தான் கேசி பழநிசாமியும் கூறி வந்தார். வழக்கும் நிலுவையில் இருக்கிறது. கட்சியில் பொதுச்செயலாளர் பதவி மட்டுமே இருக்க வேண்டும் என்பதில் பழனிசாமி உறுதியாக இருக்கிறார். இரட்டை தலைமை அதிமுகவில் இருக்க முடியாது. அதன் சட்ட திட்டம் அப்படி இருக்கிறது.

பாஜக யார் பக்கம் இருக்கும் என்பதை இப்போது சொல்ல முடியாது.

தன் மகனுக்கு அமைச்சர் பதவி கிடைக்காமல் செய்த இபிஎஸ்-ஐ ஒபிஎஸ் எப்படி மன்னிப்பார்?

அதிமுகவில் எப்போது பிளவு வெடிக்கும் அதை பயன்படுத்தி பாஜகவை எப்படி வளர்க்கலாம் என்பதில்தான் மேலே உள்ளவர்களுக்கு அக்கறை.

இன்னும் எத்தனை நயினார் நாகேந்திரன்கள் உருவாக போகிறார்களோ பொறுத்திருந்து பார்ப்போம்.

ஒபிஎஸ் – இபிஎஸ் இருவருமே ராஜன் செல்லப்பாவின் பேட்டியை முழுமையாக பார்த்து விட்டு கருத்து சொல்கிறோம் என்று நழுவிக் கொண்டார்கள்.

எப்படியோ சொல்லித்தானே ஆக வேண்டும்.

ஒற்றைத்தலைமை அதிமுகவில் உருவாக வாய்ப்பே இல்லை.

ஜெயலலிதாவால் அடையாளம் காட்டப்பட்டவர்கள் என்று இருவரையும் சொல்ல முடியும் என்றால் இவர்கள் இல்லாத வேறு யார் எல்லாராலும் ஒப்புக் கொள்ளக் கூடியவராக இருக்கிறார்?

அப்படி யாருமே இல்லாத நிலையில் இந்த இருவரில் ஒருவர் என்றுதானே ராஜன் செல்லப்பா சுட்டிக் காட்ட முடியும்?

தமிழக அரசியலில் மாற்றங்களை ஏற்படுத்தக் கூடிய நிகழ்வுகளை இன்னும் சில வாரங்களில் நிச்சயம் பார்க்கலாம்.