ஆடிட்டர் குருமூர்த்தி அதிமுக உறுப்பினர் அல்ல.
அவர் ஆர்எஸ்எஸ் அமைப்பின் ஆதரவாளர். சுதேசி இயக்கத்தின் நிர்வாகியாக இருந்தவர். இப்போது அது இயங்குகிறதா என்பது தெரியவில்லை. உலக மயமாக்கலில் அது கரைந்து விட்டதாகவே தெரிகிறது.
பாஜக ஆதரவாளர் என்பதால் அவருக்கு ரிசெர்வ் வங்கியின் இயக்குனர்களில் ஒருவராக பொறுப்பு இருக்கிறது.
அதிமுகவின் தோல்வியை விட திமுகவின் வெற்றி குருமூர்த்தியி ரொம்பவும் பாதித்திருக்கிறது. அதனால் எப்படியாவது அதிமுக மீண்டும் எழ வேண்டும் என்று விரும்புகிறார். அது அதிமுக பாசத்தினால் அல்ல. அதிமுக உடைந்து அதில் ஒரு பகுதி பாஜகவை நாளை தமிழ்நாட்டில் காலூன்ற வைக்க உதவும் என்பதால் எழுந்த ஆசை.
அதற்கு ஒபிஎஸ் போன்றோர் கைகொடுக்க தயாராக இருக்கிறார்கள். அவர் மகன் வந்தேமாதரம் ஜெய் ஹிந்த் என்று சொன்னவுடன் அத்தனை பாஜக தலைவர்களும் கைகொடுத்து பாராட்டினர்களே ?
நம்ம ஆள் என்று அடையாளம் கண்டு கொண்டு விட்டார்கள்.
பணத்தால் மட்டும் வெற்றி பெற்று விட முடியாது என்பதை அதிமுக உணர வேண்டும் என்கிறார் குருமூர்த்தி. பணம் தான் தங்கள் பலம் என்பதை எல்லா அதிமுக தலைவர்களும் நம்புகிறார்கள். அதை விட்டால் அவர்களை ஒன்று சேர்க்கும் கொள்கைதான் என்ன? வெறும் திமுக எதிர்ப்பு மட்டுமா?
எம்ஜியார் திமுக எதிர்ப்பில் அதிமுக வை உருவாக்கினார் என்பது உண்மை தான். ஆனால் அதற்கும் மேல் அவர் திராவிட இயக்கத்தின் ஒரு கூறாக தன் கட்சியை வைத்திருந்தாரா இல்லையா? பெரியார் அண்ணா கொள்கைகளுக்கு எதிராக அவர் பேசியோ சிந்தித்தோ இருக்கிறாரா? கட்சியே அண்ணா பெயரில் இருக்கும்போது கொள்கையில் பெருத்த அளவில் அதிமுக -திமுக கட்சிகளுக்கு இடையில் என்ன வேறுபாடு?
தலைமை யார் என்பது மட்டுமே இரு கட்சிகளுக்கு இடையில் இருக்கும் அதிகபட்ச வேறுபாடு.
ஜெயலலிதா அம்மையார் கூட பெரியார் -அண்ணா பாதையை விட்டு விலகி கட்சியை கொண்டு செல்ல வில்லையே? தனக்கு இருந்த தனிப்பட்ட நம்பிக்கைகளை கட்சியின் மீது அதிகாரபூர்வமாக திணித்தாரா?
ஆனாலும் மறைமுகமாக ஜெயலலிதா கட்சியை பெரியார்-அண்ணா பாதையை விட்டு மெதுவாக நகர்த்திக் கொண்டு போனார். பிராமணீய எதிர்ப்பை நீர்த்துப் போகச் செய்தார்.
குருமூர்த்தியின் எண்ணம் எல்லாம் அதிமுக தொண்டன் திமுக பக்கம் போய்விடக் கூடாது என்பதுதான்.
சொன்னாலும் சொல்லா விட்டாலும் அதிமுக தொண்டன் திராவிட இயக்க தொண்டன்தான். ஒருக்காலும் பாஜக பக்கம் சிந்தித்துக் கூட பார்க்க மாட்டான்.
குருமூர்த்திகள் இலவு காத்த கிளிகளாக காத்திருக்க வேண்டியதுதான்.