தினகரனின் அமமுக நடந்து முடிந்த தேர்தல்களில் 5.5% வாக்குகளை பெற்று மூன்றாவது இடத்துக்கு வந்தாலும் அதன் தோல்வி பலத்த அடியைக் கொடுத்துக் கொண்டிருக்கிறது.
செந்தில் பாலாஜி தொடங்கி வைத்த விலகல்கள் நெல்லை பாப்புலர் முத்தையா, மைக்கேல் ராயப்பன், வடசென்னை கலைராஜன், இன்பத்தமிழன் என்று பட்டியல் நீண்டுகொண்டே போனது.
சில நாட்களுக்கு முன்பு தங்கதமிழ்ச்செல்வன் வந்தால் ஏற்றுக் கொள்ளத் தயார் என்று அமைச்சர்கள் பேச ஆரம்பித்தனர். தினகரன் வெற்றி பெரும் தலைவர் அல்ல என்று கூட தமிழ்ச்செல்வன் பேசினார். தேனியில் டெபாசிட்டை பறிகொடுத்த நிலையில் அவர் பேச்சில் கோபம்தான் வெளிப்பட்டதே தவிர முதிர்ச்சி இல்லை.
இந்நிலையில் தினகரன் கட்சி நிர்வாகி ஒருவரிடம் தங்கதமிழ்ச்செல்வன் பேசியதாக் வெளியான ஆடியோ பரபரப்பை உண்டு பண்ணியது.
அதில் கொச்சையான வார்த்தைகளால் தினகரனை விமர்சித்திருந்தார் தமிழ்ச்செல்வன். அவரைக் கேட்காமல் தேனியில் கூட்டம் போட்டது எப்படி என்பதே அவர் கேள்வியாக இருந்தது.
இன்று ஆலோசனை கூட்டம் போட்டு தங்கதமிழ்ச்செல்வனை கொள்கை பரப்பு செயலாளர் பொறுப்பில் இருந்து நீக்கியிருக்கிறார் தினகரன். அவர் இடத்தில் மாவட்ட செயலாளரையும் நியமிக்க போவதாக கூறியிருக்கிறார்.
தங்கதமிழ்ச்செல்வனுக்கு பத்திரிகையாளர்களிடம் பேசுவது எப்படி என்பது தெரியவில்லை. மனம்போன போக்கில் பேசினால் எப்படி மரியாதை வரும். அவர் நல்லவர் என்று அவரே சொல்லிக் கொள்வதால் என்ன பயன்?
நல்லவர்களுக்கு அரசியலில் மரியாதை இருக்காது என்பது அவருக்கு தெரியாதா?
ஒபிஎஸ்-ஐ எதிர்த்து இனி தேனி மாவட்டத்தில் அரசியல் செய்யமுடியாது. ஒட்டிக்கொண்டுதான் அரசியல் செய்ய முடியும். ஒபிஎஸ் ஒப்புக் கொள்வாரா?
இவர்கள் சண்டையில் எந்த கொள்கை பிரச்னையும் இல்லை. எல்லாம் தனிப்பட்ட விவகாரங்கள். எனவே பொதுமக்களுக்கு எந்த வேறுபாடும் இல்லை. இங்கே இருந்தால் என்ன அங்கே இருந்தால் என்ன ?
ஒருநாள் தலைப்பு செய்தியோடு முடிந்து விடும் இந்த தனிப்பட்ட சண்டைகள்.
சில தினங்களில் தெரிந்து விடும் தங்கதமிழ்ச்செல்வன் வெளியேற்றம் வெடியா புஸ்வாணமா என்று?