கமல்-ரஜினி கூட்டணி முளையிலேயே கிள்ளி எறியவேண்டிய நச்சு மரம்?

kamal-Rajini
kamal-Rajini

தமிழர்களை அவமானப்படுத்துவது  அடிமைப் படுத்துவது என்பதையே கமலும் ரஜினியும் இலட்சியமாக வைத்திருக்கிறார்கள்.

கமல் பரமக்குடி ரஜினி கிருஷ்ணகிரி மாவட்டம் எனவே அவர்களும் தமிழர்களே .எப்படி அவர்கள் தமிழர்களை அவமானப் படுத்துவார்கள் என்று கேட்கலாம்?

ஒருவர் பார்ப்பனர் மற்றவர் மராட்டியர் என்பதால் மட்டும் இதை சொல்ல வில்லை.   அவர்கள் தங்களை தமிழர்களாக கருதுகிறார்களா? இதுதான் கேள்வி!

அரசியலுக்காக நானும் தமிழன் என்பது வேறு.

உள்ளத்தால் தமி ழனாக உணராமல் இன உணர்வு இல்லாமல், தன் தாய்மொழி எதுவாக இருந்தாலும்  இங்கே வசிப்பதால் தமிழ் மொழி பாதுகாப்பு , வளர்ச்சியை உறுதி செய்வது தன் கடமை என்று கருதாமல் வாழும் எவரும் தமிழராகி விட முடியாது. 

கமலிடம் சம்ச்கிரிதம் உங்கள் தாய் மொழியா என்றும் ரஜினியிடம் உங்கள் தாய் மொழி எது என்றும் கேட்டுப் பாருங்கள்.

தங்களை வாழ வைத்த தமிழகத்திற்கு இவர்கள் செய்யும் நன்றிக் கடன் இதுதான்.

இவர்களின் கூட்டணி இதுவரை உருவாகாத ஒன்று.

ஆனால் உருவாகிவிடும் என்ற அச்சத்தை உருவாக்குகிறார்கள்.

அரசியலுக்கு யாரும் வரலாம். ஆனால் இவர்கள் வருவதற்கு மட்டும் ஏன் இத்தனை எதிர்ப்பு?

என்ன உங்கள் கொள்கை என்றால் அதை பின்னால் பார்த்துக் கொள்ளலாம் என்கிறார் கமல்.

தனிப்பட்ட வாழ்வில் வேண்டுமானால் லிவிங் டுகெதர் என்று சேர்ந்து வாழ்வது பின்னால் பிடித்திருந்தால் திருமணம் செய்து கொள்வது என்பது சாத்தியமாகலாம்.

அரசியலில் அப்படி இருக்க முடியாது. நீங்கள் யாராக வேண்டுமானாலும் இருங்கள்.   ஆனால் நீங்கள் யார் என்பதை சொல்லியாக வேண்டும்.

இன உரிமை, தாய்மொழிப் பாதுகாப்பு அத்துடன் இணைந்த இந்தி திணிப்பு எதிர்ப்பு, சமூக நீதி அத்துடன இணைந்த இட ஒதுக்கீடு உரிமை, வேற்றுமையில் ஒற்றுமை காக்க எல்லா தனித்துவங்களையும் அங்கீகரித்தல் போன்ற பிரச்னைகள் பற்றி  உங்கள் நிலைப்பாடு என்ன?

சனாதன தர்மம் பேசி இழிவு படுத்துகிறார்களே எப்படி தடுக்கப் போகிறீர்கள்?

யார் உங்கள் தலைவர்? எது உங்கள் தத்துவம்?

நீதிக் கட்சித் தலைவர்கள், தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா எல்லா திராவிட இயக்கங்களுக்கும் பொதுவான தலைவர்கள்.

கலைஞருக்கும் எம்ஜியாருக்கும் ஏற்பட்ட தனிப்பட்ட போட்டி பிளவை ஏற்படுத்தினாலும் அவரும் பெரியாரை போற்றி அண்ணா பெயரில்தான் கட்சி தொடங்கினார்.

இன்று பாமக  தேமுதிக மதிமுக விடுதலை சிறுத்தைகள் கம்யுனிஸ்டுகள் ஏன் காங்கிரஸ் கூட திராவிட இயக்க முன்னோடிகளை இகழ்ந்ததில்லை.

பாஜக மட்டுமே கழகங்கள் இல்லா தமிழகம் என்று கனவு காணுகிறது.

ஹே ராம் எடுத்த கமலின் உண்மை உருவம் என்ன?

அக்கிரமங்களை செய்யும் முஸ்லிம்களுக்கு காந்தி ஆதரவாக இருப்பதால் அவரைக் கொலை செய்யும் எண்ணத்தில் கமல் இருக்கும்போது அந்தக் காரியத்தை யாரோ ஒருவன் செய்து விடுகிறான். இதற்கு என்ன பொருள்? ஜனசங்கம் காலம் முதற்கொண்டு இதைத்தானே சொல்லிக் கொண்டு இருக்கிறார்கள்.

காந்தி கொல்லப் பட வேண்டியவர் என்ற நம்பிக்கை  கொண்டவர்கள் ஆட்சிக்கு வரவும் வந்தபின் அவரையே பயன்படுத்திக் கொள்வதும் இங்கே சாத்தியமாகி இருக்கிறதே?

ரஜினி ஆசைப் படலாம். அந்த ஆசையை  தோற்றுப் போன கமல் பயன்படுத்திக் கொள்ள முனைகிறார்.

கடைசி நிமிடத்தில் கூட ரஜினி தன் கலைப் பயணத்தை தொடரும் வாய்ப்புகள் தான் அதிகம்.

ஆனால் இவர்கள் இருவரையும் கழகங்கள் இல்லாத தமிழகம் என்று சொல்லிக் கொண்டிருப்பவர்கள் எப்படி பயன் படுத்தப் போகிறார்கள் என்பதுதான் புதிர்.

பிரஷாந்த் கிஷோரின் திட்டப்படிதான் இவர்கள் இருவரும் செயல்படப் போகிறார்களாம்.

கமல் இழப்பதற்கு ஒன்றுமில்லை. ஏற்கெனெவே தமிழகம் தன்னை ஏற்காது என்று  அவருக்கு தெரிந்து விட்டது.

ஆனால் எதிரிகளே இல்லாமல் சூப்பர் ஸ்டாராக வலம் வரும் ரஜினி அரசியல் என்ற தவறான முடிவால் இருக்கும் அத்தனையையும் இழக்க வேண்டியது அவசியம் தானா?

இனிமேல் தமிழர்களை இத்தனை துச்சமாக எண்ணி இங்கே அரசியல் கனவுகளை யாரும் காணக் கூடாது என்ற உண்மையை அரசியலுக்கு வந்தால் ரஜினிக்கு ஏற்படும் இழிவு உலகுக்கு உணர்த்தும்.