கர்நாடகத்தின் பிடதி ஆசிரமத்தில் நித்தியானந்தா நிலை கொண்டு விட்டார்.
அவரை அங்கிருந்து துரத்த எத்தனையோ முயற்சிகள் நடந்தன. எல்லாவற்றையும் தாண்டி அவர் அங்கேதான் இருக்கிறார்.
ஆன்மிகவாதி என்பதை விட பிரச்னைகளின் நாயகன் என்பதே பிரபலம்.
ஆங்கிலப் பத்திரிகைகள் அவரை தானே சொல்லிக் கொள்ளும் சாமியார் என்றுதான் எழுதுகின்றன.
பார்ப்பனர் அல்லாதவர் என்பதால் மட்டும் அப்படி எழுதுவதாக சொல்ல முடியாது.
ஆனால் அதுவும் ஒரு காரணமாக இருக்குமோ என்று எண்ணத் தோன்றுவதற்கு அவர்கள் குற்றம் சாட்டப்பட்ட எந்த பார்ப்பன சாமியாரை பற்றியும் அப்படி எழுதுவதில்லை.
இரண்டு குழந்தைகளை அடைத்து வைத்து இருக்கும் குற்றத்துக்காக அவர் மீது விசாரணை நடந்து வருகிறது.
புகார் கொடுத்தவர் தன் இரண்டு பெண்களையும் ஒரு மகனையும் அங்கே படிக்க வைக்க அனுப்பி வைத்த ஜனார்தன சர்மா என்ற பார்ப்பனர்.
காவல் துறை விசாரித்து குற்றம் நடந்து இருந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதுதான் எல்லாருடைய எதிர்ப்பார்ப்பும்.
ஆனால் நித்தியானந்தா வெளிநாடு தப்பி சென்று விட்டார் என்று காவல் துறை சொல்கிறது. ஆனால் அன்று மாலையே தான் இமயமலையில் இருப்பதாக நித்தியானந்தா வீடியோவில் விளக்கம் சொல்கிறார்.
காவல்துறை இப்படி ஒரு தவறான தகவலை தந்தால் அதன் மீது எப்படி நம்பிக்கை வரும். ?
இந்தியாவில் நீதியை பெற நீண்ட காலமாகும்என்றும் இந்து மதத்தை வெறுப்பவர்களும் நாட்டை வெறுப்பவர்களும் தனக்கு எதிராக மிகப் பெரிய சதியில் இறங்கி இருப்பதாக நித்தியனந்தா கூறுகிறார்.
சாமியார் மடங்கள் என்றாலே வில்லங்கம் விவகாரம் என்று ஆகிவிட்டது.
காவல் துறைதான் சரியான நடவடிக்கை மூலம் அந்த குற்றச்சாட்டுகளில் உள்ள உண்மையை கண்டு பிடிக்க வேண்டும்.