மதம் வேண்டாம். கடவுளை ஒளி வடிவில் வழிபடுவோம் என்பதே வள்ளலாரின் கொள்கை.
Yes God! No Religion! இதுதான் வள்ளலார் கொள்கை. இதுதான் தமிழர் மதம். இதை கடைபிடித்தால் உலகமெங்கும் நிலவும் மதச் சண்டைகள் அனைத்தும் மறைந்து போகும்.
யாரும் தங்களை இந்து முஸ்லிம் கிறித்தவர் பார்சி ஜைனர் பௌத்தர் சீக்கியர் என்று சொல்லிக்கொள்ளாமலேயே எல்லார் போதனைகளையும் ஏற்றுக் கொள்ள முடியும். முரணாக இருப்பவைகளை தவிர்க்கலாம்.
அரசியல் கலக்காமல் மதம் வாழ முடியாது.
கடவுள் இருக்கிறாரா இல்லையா என்ற விவாதத்துக்கு அப்பால் உண்டு என்று நம்புகிறவர்கள் தங்கள் கடவுளர்களை ஏதாவது ஒரு மதத்துக்குள் அடக்கி விடுகிறார்கள். சூரியனையே விழுங்கக் கூடிய கருந்துளைகள் இருக்கின்றன என்ற அறிவியல் கண்டிபிடிப்பு இறைவன் ஒளியா இருளா என்ற கேள்வியை எழுப்பி இருக்கிறது.
இந்தியாவில் அறுவகை சமயங்களான சைவ வைணவ சாக்த காணபத்ய கௌமார சௌர சமயங்களை நாம் இந்து எனது சொல்லாடலில் மிகத் தவறாக கையாண்டு கொண்டிருக்கிறோம்.
நானும் எல்லா சாமிகளையும் கும்பிட்டுக் கொண்டு எதையும் ஏன் எதற்கு என்றெல்லாம் ஆராயாது பட்டை போட்டுக் கொண்டிருந்தவன் தான்.
ஆனால் புராணங்கள் அவைகளில் கூறப்பட்ட கதைகள் எல்லாம் படித்தபோது என் மனதில் எழுந்த கேள்விகள் அவைகளை அப்படியே ஏற்றுக் கொள்ள மறுத்தன.
பல ஆராய்ச்சிகளுக்குப் பிறகு தமிழர்கள் சிவன் முருகன் மாலவன் போன்றவர்களை வணங்கி வந்தாலும் அவர்கள் தங்கள் முன்னோர் என்றே கருதி வணங்கினார்களே தவிர இப்போது நாம் கருதும் சனாதன வாதிகள் கற்பித்த வேத வழி கதைகளுக்கும் தமிழர்களுக்கும் தொடர்பே இல்லை என்று நம்பத் தொடங்கினேன்.
அப்போதுதான் தமிழர்கள் அறமே இறை என வாழ்ந்தவர்கள் எனக் கண்டேன். நடுகல் நாட்டி முன்னோர்களுக்கு வணக்கம் செலுத்தியவர்கள் எனத் தெளிந்தேன்.
அதற்கு சாட்சியாக விளங்குவது திருவள்ளுவரும் திருமூலரும். அவர்கள்தான் தமிழர்களின் அற வாழ்வை உலகத்துக்கு வெளிக்காட்டியவர்கள்.
நான் எப்படி வள்ளலார் அபிமானியாக மாறினேன் என்றால் அதற்கு காரணம் தந்தை பெரியார். 1935-ம் ஆண்டு திருவருட்பா நூலின் ஆறாம் திருமுறையின் நூறு பாடல்கள் தொகுக்கப்பட்டு நூலாக வெளியானது. இந்த நூலைத் தொகுத்தவர் சாமி சிதம்பரனார். குடியரசு பதிப்பகம்தான் இதை வெளியிட்டது. ராமலிங்க சுவாமிகள் பாடல் திரட்டு என்ற பெயரில் குடியரசு வெளியீடாக பெரியார் வெளியிட்டார். மேலும், திருவருட்பாவின் இந்த வெளியீடு எல்லா மக்களையும் சென்று சேர வேண்டும் என்று எண்ணி மலிவு விலை பதிப்பாகவும், கட்டணச் சலுகை அளித்தும் விற்பனையை அதிகரித்து வியந்து விளம்பரமும் கொடுத்தார்.
பெரியாரின் இந்த வேண்டுகோளை தமிழ்ச்சமூகம் அன்று ஏற்றிருந்தால் வரலாறே மாறியிருக்கும். பெரியாரின் நாத்திகப் பிரசாரத்துக்கு தேவையே ஏற்பட்டிருக்காது.
நான் எப்படி வள்ளலார் அபிமானியாக வாழ்கிறேன் என்பதை மட்டும் உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். முழுமையான சுத்த சன்மார்க்கியாக நான் இன்னும் ஆகவில்லை. ஆக முயற்சித்துக் கொண்டிருக்கிறேன்.
முதலின் நான் வள்ளலார் அபிமானி என்று சொல்வதில் கூட எனக்குத் தயக்கம் இருந்தது.
ஒரு சன்மார்க்கி எப்படி இருக்க வேண்டும்.? வள்ளலே சொல்கிறார்;
“ இது தொடங்கி எக்காலத்தும் சுத்த சன்மார்க்கத்தின் முக்கியத் தடைகளாகிய சமயங்கள், மதங்கள், மார்க்கங்கள் என்பவற்றின் ஆசார சங்கற்ப விகற்பங்களும் , வருணம், ஆசிரமம் முதலிய உலகாசார, சங்கற்ப விகற்பங்களும் எங்கள் மனதில் பற்றாவண்ணம் அருள் செய்தால் வேண்டும். சுத்த சன்மார்க்கத்தின் முக்கிய லட்சியமாகிய ஆன்மநேய ஒருமைப் பாட்டுரிமை எங்களுக்குள் எக்காலத்தும், எவ்விடத்தும் எவ்வளவும் விலகாமல், நிறைந்து விளங்கச் செய்வித்தருளல் வேண்டும்.
சாதி மதங்களை விடாதவர்கள் எப்படி சன்மார்க்கியாக முடியும்.?
அப்போதுதான் எந்த சமயத்தவரும் அந்தந்த சமயங்கள் சொல்வதை பின் பற்றுவதே இல்லை. ஆனாலும் அவர்கள் தங்களை அந்த சமயத்தை சொந்தம் கொண்டாடுவதை நிறுத்துவதும் இல்லை.
எந்த இந்துவுக்கும் தங்கள் மதம் சொல்வது பற்றி முழுமையாக தெரியாது. யாரோ சொல்வதை எந்தக் கேள்வியும் கேட்காமல் அப்படியே கேட்டுக் கொண்டு வாழ வேண்டும். இந்து மதத்தில் இருக்கும் பூரண சுதந்திரம் தான் அதை வாழ வைத்துக் கொண்டிருக்கிறது. யாரும் யாருக்கும் கட்டுப் பட்டவர் இல்லை. கோவிலுக்குப் போகலாம் போகாமல். இருக்கலாம் சடங்கு செய்யலாம் செய்யாமல் இருக்கலாம். ஏன் நாத்திகம் கூட பேசலாம். ஆனாலும் நான் இந்துதான் இன்று ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் கூட பேசியிருக்கிறார் இந்தியாவில் வாழும் கிறித்தவர் முஸ்லிம் உட்பட அனைவைரும் இந்துக்களே என்று.
முஸ்லிம்கள் குரான் சொல்வதை அப்படியே கடைப்பிடிக்கின்றார்களா? சக முஸ்லிமை கொல்பவன் எப்படி முஸ்லிமாக இருக்க முடியும்?
ஏசு தன்னை கடவுள் என்று சொல்லிக்கொண்டதில்லை. ஆனால் கிறிஸ்தவர்கள் ஏசுவை எப்படி வழிபடுகிறார்கள்? ஏசு பிரான் போதித்ததை அப்படியே கடைப்பிடிக்கின்றார்களா?
புத்தம் ஒரு மதமல்ல. கடவுளை ஏற்றுக் கொள்ளாதது. அது ஒரு தர்மம். சனாதனத்தை எதிர்த்து உருவானது
ஜைனம் அல்லது சமணம். கடவுளை ஏற்காமல் கர்ம விடுதலையை போதிக்கும் மார்க்கம்.
சீக்கியர்கள், பார்சிகள் இன்னும் எண்ணில் அடங்கா மதத்தவர்கள் எல்லாருமே தங்கள் மதங்கள் போதிப்பவற்றில் தங்களுக்கு சௌகரியமனவற்றை மட்டும் கடைப்பிடித்துக் கொண்டு தாங்கள் தான் உண்மையானவர்கள் என்று நினைத்து வாழ்கிறார்கள்.
அதாவது கட்டுப்பாட்டை மீறுவதில் எல்லாருமே ஒன்றுதான்.
அப்போதுதான் எனக்கும் தைரியம் வந்தது.
வள்ளலார் போதனைகளில் பலவற்றை அப்படியே அமுல்படுத்த முடியாதவர்கள் கூட வள்ளலார் அபிமானி என்று சொல்லிக் கொள்வதின் தவறே இல்லை.
அதற்காகத்தான் மற்ற மதத்தவர்களை பாருங்கள் என சொல்கிறேன்.
சமரசம் செய்து கொள்ளாமல் வாழ்க்கை இல்லை. வள்ளலாரோடும் சமரசம் செய்து கொள்வோம்.
சட்ட பூர்வமாக மதங்களை ஒழிக்க முடியுமா?
முடியும். அதற்கு நாட்டின் பெரும்பான்மை மக்கள் ஆதரவளிக்க வேண்டும். சீனா ரஷ்யாவெல்லாம் மத சார்பின்றி இயங்க வில்லையா?
இன்று இந்தியாவில் நிலவும் கலவரத்திற்கு காரணம் மதங்கள். அகதிகளாக வந்தவர்களில் முஸ்லிம்களை ஏற்றுக் கொள்ள மாட்டோம் என்பதற்கு காரணம் அச்சம்.
மதத்தை விட்டு எப்படி வெளியே வருவது? மதம் என்ன என்று கேட்டால் நான் கடவுள் நம்பிக்கையாளன் . எந்த மதத்தையும் சேர்ந்தவன் அல்ல என்று குறிப்பிட இடம் வேண்டும். அதற்கு ‘நம்பிக்கையாளர்’ அல்லது Believer என்ற சொல் போதும். போராடிப் பெற வேண்டிய உரிமை அது. அதுவரை இந்து என்று சொல்லிக் கொண்டு இருக்க வேண்டியதுதான்.
எந்த இறை உருவை பார்த்தாலும், அது ஒளி மயமான ஆண்டவரின் அம்சம் என்ற உணர்வு வரவேண்டும். தனிக்கடவுளர் அல்ல என்ற தெளிவு பிறக்க வேண்டும். முதலில் வள்ளலாருக்கு விபூதி அணிவித்தல் தவிர்க்கப் பட வேண்டும். நான் சைவத்தை கைவிட்டு விட்டேன் என்று வள்ளலார் சொன்ன பிறகும் 135 ஆண்டுகள் வழக்கு நடத்தி வடலூர் சத்திய ஞான சபையில் இருந்த லிங்கத்தை அகற்றி ஜோதி தரிசனமே வழிபாட்டு முறை என்று நிலைநிறுத்திய பின்பும் இன்னமும் அவருக்கு விபூதி அணிவிப்பதை எப்படி ஏற்க முடியும்?
என்னைப் பொறுத்தவரையில் நான் விபூதி குங்குமம் சந்தனம் என்று புறசின்னங்கள் அணிவதை நிறுத்தி விட்டேன். யாராவது அவற்றை பிரசாதங்களாக வழங்கினால் மரியாதைக்காக ஏற்றுக் கொண்டு அவருக்குத் தெரியாமல் பின்னர் அகற்றி விடுவேன்.
காலையில் வழிபடும்போது ஜோதி ஏற்றி வள்ளலார் அருளிய திருமந்திரமான
அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி
திருவள்ளுவர் திருக்குறள் கடவுள் வாழ்த்தில் குறிப்பிடும் கடவுளின் குணங்களை குறிப்பிட்டு
இறைவனடி போற்றி
ஆதி பகவன் போற்றி
வாலறிவன் நற்றாள் போற்றி
மலர்மிசை ஏகினான் மாணடி போற்றி
வேண்டுதல் வேண்டாமை இலானடி போற்றி
பொறிவாயில் ஐந்தவித்தான் போற்றி
தனக்குவமை இல்லாதான் தாள் போற்றி
எண்குணத்தான் தாள் போற்றி
( அறவாழி அந்தணன் தாள் என்பது இடைச்செருகல் )
கம்பர் பாடிய கடவுள் வாழ்த்தான
உலகம் யாவையும் தாமுள வாக்கலும்
நிலை பெருத்தலும் நீக்கலும் நீங்கலா
அலகு இலா விளையாட்டு உடையார் அவர்
தலைவர் அன்னவர்க்கே சரண் நாங்களே
வள்ளலார் படத்துடன் குலதெய்வங்கள் படங்களையும் பெற்றோர் முன்னோர் படங்களையும் வைத்து வழிபடுவேன்.
எங்கள் ஊர் சுப்பிரமணியசாமி மடத்தில் வள்ளலார், திருவள்ளுவர், திருமூலர் படங்களை வைத்து வழிபாடு நடத்த ஏற்பாடு செய்திருக்கிறேன்.
எப்போதும் அருட்பெருஞ்சோதி சிந்தனையிலேயே இருப்பது.
வள்ளலார் வாக்கின்படி,
சர்வ சித்தியுடைய கடவுள் ஒருவருண்டென்று அவரை உண்மை அன்பால் வழிபாடு செய்து பூரண சித்தியை பெற வேண்டுமென்பது சன்மார்க்கக் கொள்கை. சுத்த சன்மார்க்கத்துக்கு முக்கிய தடையாகிய சமயம் மதம் முதலிய மார்க்கங்களை முற்றும் பற்றறக் கைவிட்டவர்களும் காமக்குரோதம் முதலியவைகள் நேரிட்ட காலத்தில் ஞான அறிவினால் தடுத்துக் கொள்பவரும் கொலை புலால் தவிர்த்தவர்களும் ஆகிய இவர்கள்தான் சுத்த சன்மார்க்கத்துக்கு உரியவர்கள் ஆவார்கள். ஒருவன் பிரார்த்தனை செய்வதில் அவனுக்கு மட்டும் செய்வது சரியல்ல. இந்த உலகமெல்லாம் வாழும்படி பிரார்த்தனை செய்தல் வேண்டும். அப்படிசெய்வதால் அதில் ஒருவனுக்கு வேண்டியவை எல்லாம் அடங்கி விடுகின்றன. இப்படித்தான் பிரார்த்தனை செய்ய வேண்டும்.
“பாதி இரவி லெழுந்தருளிப் பாவி யேனை யெழுப்பியருட்
சோதி யளித்தென் னுள்ளத்தேசூழ்ந்து கலந்து துலங்குகின்றாய்
நீதி நடஞ்செய் பேரின்ப நிதிநான்பெற்ற நெடும்பேற்றை
ஓதி முடியா தென்போலிவ் வுலகம் பெறுதல் வேண்டுவனே ”
ஆனால் இந்த அனுபவம் நமக்கு இல்லையே. எனவே கொஞ்சம் மாற்றிக் கொண்டு உலகில் அனைத்து உயிர்களும் அமைதியும் மகிழ்ச்சியும் வளமும் நிறைந்து வாழ இறைவா அருள்புரி என்று வேண்டுவேன்.
சீக்கிய குருத்வாராக்களுக்கு சென்று அங்கே பாடப்படும் குரு கிரந்த சாஹிப் எனப்படும் இறை வாழ்த்துப் பாடல்களை கேட்கும்போது மனதுக்கு இதமாக இருக்கும்.
அவ்வளவுதான் எனது இறை வழிபாடு.
எரிக்காதே புதை எனவும் திதி கருமாதி வேண்டா என்பன கொள்கைகள். ஆனால் அவற்றை மற்றவர்கள் ஏற்றுக் கொள்ளச் செய்தால்தான் அமுல் படுத்த முடியும்.
அடிகளின் 1849 முதல் 1874 வரையான 25ஆண்டுப்பணிகளில்,
1871 ல் சத்திய ஞான சபை அமைத்து, 1872 ல் அருட்பெருஞ்சோதி அகவல் எழுதி , ஞானசபை வழிபாட்டு விதி வகுத்து சன்மார்க்க கொடி கட்டி பேருபதேசம் செய்து 1874 ல் மறைந்து நிறைந்தது வரையிலான மூன்று ஆண்டு வாழ்க்கையில் அவர் எதையெல்லாம் உபதேசித்தாரோ கடைப்பிடித்தாரோ அவற்றைக் கடைப்பிடிப்பதுதான் வள்ளலாருக்கு செய்யும் மரியாதை.
ஆனால் இன்றைக்கு சனாதனவாதிகளின் கையில் வள்ளலார் அடைக்கப் பட்டு கிடப்பதை அனுமதிப்பது அவருக்கு செய்யும் துரோகமா இல்லையா?
ஆறாம் திருமுறையை மட்டுமே பாட வேண்டும். போற்ற வேண்டும். முதல் ஐந்து திருமுறைகளையும் மூட்டை கட்டி வைத்து விட வேண்டும். அடிகள் மறைந்து பதினோரு ஆண்டுகளுக்குப் பின் வழக்குகளை சந்தித்து 1885 ல் வெளி வந்தது ஆறாம் திருமுறை. அது வரக்கூடாது என்று போராடியவர்கள் இன்று அது போற்றப் படாதவாறு தடுத்து தந்திரமாக முதல் ஐந்து திருமுறைகளை போற்றும் படி செய்து வருகிறார்கள்.
என்றும் எங்கும் இருக்கும் பரம்பொருள் ஒன்றுதான். அந்த ஒரே பரம்பொருளாகிய இறைவன்தான் அருட்பெரும்ஜோதி என்பதுதான் வள்ளல் பெருமானின் கொள்கை.
முதல் நான்கு திருமுறைகளும் 1867 ல் தொழுவூர் வேலாயுதனார் வெளியிட 1880 ல் அடிகளின் மறைவிற்குப்பின் ஐந்தாம் திருமுறையும் 1885 ல் ஆறாம் திருமுறையும் வெளிவந்திருக்கின்றன.
இவை அனைத்திலும் விநாயகர் ,முருகப் பெருமான் , சிவபெருமான், நடராசர் , அம்மன்கள், திருமால், இராமர், திருமகள் கலைமகள் போன்ற தெய்வங்கள் அடிகளால் பாடப்பெற்றவர்கள் .
அடிகள் சித்தி பெற்ற 6 ஆண்டுகளுக்குப் பின் 1880 ம் ஆண்டில் ஐந்தாம் திருமுறையை வெளியிட்ட தொழுவூர் வேலாயுதனார் ஆறாம் திருமுறையை வெளியிடும் முயற்சியில் ஈடுபடவில்லை. அவர் மட்டுமல்ல இறுக்கம் இரத்தின முதலியார் புதுவை வேலு முதலியார் சிவானந்தபுரம் செல்வராய முதலியார் மயிலை சிக்கிட்டி சோமசுந்தர செட்டியார் ஆகியோரும் ஆறாம் திருமுறையை அச்சிட்டு வெளிப்படுத்த தலைப்பட வில்லை. அடிகள் சித்தி பெற்று 11 ஆண்டுகள் கழிந்து இனியும் காலம் தாழ்த்தக் கூடாது என்ற எண்ணத்தில் வேலூர் பத்மநாப முதலியார் முயற்சியில் 1885 ல் சோடசாவதானம் சுப்பராய செட்டியார் அவர்களால் ஆறாம் திருமுறை வெளியிடப் பட்டது. அடிகளின் அடியவர்களுக்குக் கூட அதை வெளியிட காலம் கனியவில்லை என்ற அச்சம். காரணம் ஐந்து திருமுறைகளிலும் பாடப் பெற்ற தெய்வங்கள் அடிகளால் ஒதுக்கி வைக்கப் பட்டு ஒரே இறைவனாக அருட்பெரும்ஜோதியை அவர் அறிவித்ததுதான்.
வள்ளலார் மேட்டுக்குப்பம் சித்தி வளாகத்தில் அருளிய பேருபதேசம் இறுதியானது. ‘
“இதற்கு மேற்பட நாம் நாமும் முன் பார்த்தும் கேட்டும் லட்சியம் வைத்துக் கொண்டிருந்த வேதம், ஆகமம், புராணம் இதிகாசம் முதலிய கலைகள் எதனிலும் லட்க்ஷியம் வைக்க வேண்டாம்.”
“இதுபோல் சைவம், வைணவம் முதலிய சமயங்களிலும் வேதாந்தம் சித்தாந்தம் முதலிய மதங்களிலும் லட்சியம் வைக்க வேண்டாம்”.
“நான் முதலில் சைவ சமயத்தில் லட்சியம் வைத்துக் கொண்டிருந்தது இவ்வளவு என்று அளவு சொல்ல முடியாது. அந்த லட்சியம் இப்போது எப்படி போய் விட்டது பார்த்தீர்களா? “‘
“ஏன் அவ்வளவு மிகுந்த அழுத்தம் எனக்கு அப்போது இருந்தது என்றால் அப்போது எனக்கு அவ்வளவு கொஞ்சம் அற்ப அறிவாக இருந்தது. இப்போது ஆண்டவர் என்னை ஏறாத நிலை மேலேற்றியிருக்கின்றார். இப்போது எல்லாவற்றையும் விட்டு விட்டதனால் வந்த லாபம் இது. “
ஆறாம் திருமுறையில் எண்ணற்ற இடங்களில் சாதியையும் மதத்தையும் சடங்குகளையும் குப்பைகள் என்றும் சழக்குகள் என்றும் பிணிகள் என்றும் பல்வேறு வார்த்தைகளில் விமர்சிக்கிறார். தனது சங்க ஆதரவாளர்களுக்கு வேண்டுகோள் விடுக்கிறார் பாருங்கள்;
“கலையுரைத்த கற்பனையே நிலைஎனக் கொண்டாடும்
கண்மூடி வழக்கம் எலாம் மண்மூடிப் போக
மலைவறுசன் மார்க்கம் ஒன்றே நிலைபெற மெய் உலகம்
வாழ்ந்தோங்கக் கருதியருள் வழங்கினை என் தனக்கே “ (187 )
இருட்சாதி தத்துவச் சாத்திரக் குப்பை
இருவாய்ப்புப் புன்செயில் எருவாக்கிப் போட்டு
மருட்சாதி சமயங்கள் மதங்களாச் சிரம
வழக்கெலாம் குழிக்கொட்டி மண்மூடிப் போட்டுத்
தெருட்சாறும் சுத்தசன் மார்க்கநன் நீதி
சிறந்து விளங்கஓர் சிற்சபை காட்டும்
அருட்ஜோதி வீதியில் ஆடச்செய் தீரே
அருட்பெருஞ் சோதிஎன் ஆண்டவர் நீரே. (496)
“நாத்திகம் சொல்கின்றவர்தம் நாக்குமுடை நாக்கு “ என்பதே அவர் முடிபு.
இந்துக்களுக்கு என்று சட்டங்கள் இயற்றியதும் ஆங்கிலேயர்கள்தான். முதல் இந்து சட்டம் ஆங்கில கிழக்கிந்திய கம்பெனி கொண்டு வந்த இந்து விதவைகள் மறுமண சட்டம் 1856. அதற்குப் பின்தான் இந்து என்ற பெயரிலேயே சட்டங்கள் வந்தன. உச்ச நீதி மன்றமும் இந்து என்பது மதமல்ல வாழ்க்கை முறை என்று தீர்ப்பும் சொல்லி விட்டது. ஆனாலும் இந்து என்பது ஒரு மதமாக பாவிக்கப்படுவது மட்டுமல்ல யாரெல்லாம் சீக்கியர், பௌத்தர், ஜைனர் அல்லரோ அவர்கள் எல்லாம் இந்துக்கள் என்று எதிர்மறை விளக்கத்தோடு சட்டங்களும் அமுலில் இருப்பது என்னவொரு விந்தை.
இந்தியா முழுவதும் இப்போது அமுலில் இருக்கும் இந்து மதம் என்பது உண்மையில் பார்ப்பனீய மதமே ஆகும். அதனால்தான் எல்லா பார்ப்பனீய எதிர்ப்பு சீர்திருத்த மதங்களையும் விழுங்கி ஏப்பம் விட்டு இந்து என்ற மாயப் பெயரில் இயங்கி வருகிறது. லிங்காயத்துக்கள், அய்யா வைகுண்டர் வழி நம்பிக்கையாளர்கள், போல சன்மார்க்கிகளும் தனி அடையாளத்தோடு இயங்கும் உரிமை பெற்றவர்களாக இருந்தாலும் அவர்களும் இந்து என்ற வளையத்திற்குள்தான் அடங்கிக் கிடக்கிறார்கள்.
வள்ளலார் சீடர்கள் இந்து மத வளையத்துக்குள் இருந்து வெளியே வர முடியாமல் முடங்கிக் கிடக்கிறார்கள்.
தந்தை பெரியாரும், பசும்பொன் முத்துராமலிங்க தேவரும் வள்ளலாரை ஏற்றுக் கொண்டவர்கள். அறிஞர் அண்ணாவும் திருமூலரை பின்பற்றி ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்பதே கொள்கை என்று அறிவித்தார்.
ஆறாம் திருமுறையில் வள்ளலார் குறிப்பிடும் சிவம், சித்சபை போன்றவை சைவ சமய குறியீடுகள் அல்ல. எல்லாவற்றிற்கும் தத்துவ விளக்கம் சொன்னார் வள்ளலார்.
“சர்வ சித்தியுடைய கடவுள் ஒருவருண்டென்று அவரை உண்மை அன்பால் வழிபாடு செய்து பூரண சித்தியை பெற வேண்டுமென்பது சன்மார்க்கக் கொள்கை. சுத்த சன்மார்க்கத்துக்கு முக்கிய தடையாகிய சமயம் மதம் முதலிய மார்க்கங்களை முற்றும் பற்றறக் கைவிட்டவர்களும் காமக்குரோதம் முதலியவைகள் நேரிட்ட காலத்தில் ஞான அறிவினால் தடுத்துக் கொள்பவரும் கொலை புலால் தவிர்த்தவர்களும் ஆகிய இவர்கள்தான் சுத்த சன்மார்க்கத்துக்கு உரியவர்கள் ஆவார்கள். ஒருவன் பிரார்த்தனை செய்வதில் அவனுக்கு மட்டும் செய்வது சரியல்ல. இந்த உலகமெல்லாம் வாழும்படி பிரார்த்தனை செய்தல் வேண்டும். அப்படிசெய்வதால் அதில் ஒருவனுக்கு வேண்டியவை எல்லாம் அடங்கி விடுகின்றன. இப்படித்தான் பிரார்த்தனை செய்ய வேண்டும்.
தமிழர்களுக்கு ஆன்மிக வழிகாட்ட வள்ளலார் அன்பர்களை ஒருங்கிணைத்து செயல்பட ஒரு மைய அமைப்பு இல்லை. அப்படி ஒன்று உருவானால்தான் உண்மையான வள்ளலார் கருத்துக்கள் பரவிட வழிவகை பிறக்கும். அதுவரை வள்ளலார் சொன்னதற்கு மாறான கருத்துக்களை அவர் பெயரிலேயே பரப்பிக் கொண்டுதான் இருப்பார்கள். அதற்கு அந்த அருட்பெருஞ்சோதி ஆண்டவர்தான் அருள்புரியவேண்டும். அமைப்பு வலுப்பெற்றால் அது உலகம் முழுமைக்கும் வழிகாட்டியாக விளங்கும் என்பதில் ஐயம் இல்லை.