திரௌபதியை திரையில் பார்க்கவே முடியாதா? ஏன் இவ்வளவு எதிர்ப்பு?
தலித் உரிமைகளை மீட்கவும் அவர்கள் அடக்கி ஆளப் படுவதையும் கண்டித்து சினிமாக்கள் வரும்போது நல்ல வரவேற்பு இருக்கிறது .
அதனால்தான் ரஜினியின் காலா, பேட்ட , படங்களும் ரஞ்சித் தயாரித்த பரியேறும் பெருமாள் படமும் நல்ல வரவேற்பையும் பெற்றன. அதிலும் பரியேறும் பெருமாள் படம் மிகவும் நாசுக்காக தலித்துகள் படும் அவமானங்களை சுட்டிக் காட்டி எடுக்கப்பட்டிருந்தது.
சமீபத்திய வெற்றிமாறனின் அசுரனும் அப்படியே. தனுஷின் நடிப்பு பாராட்டை பெற்றது. யாரும் எதிர்க்கவும் இல்லை. தடை கேட்கவும் இல்லை.
ஆனால் இப்போது நாடகக் காதலுக்கு எதிர்ப்பு என்று திரௌபதி படம் தயாரிக்கப்பட்டு இருக்கிறது. அதன் முன் வெளியீட்டு படம் யு டியுப்பில் வெளி வந்தது. சமீபத்தில் அதிகம் விமர்சனத்துக்கு ஆளான படமாக மாறிவிட்டது. அவ்வளவு விமர்சனங்கள்.
அத்தனையும் சாதி ரீதியாக வரும் விமர்சனங்கள்.
இது நல்லதற்கா என்பது தெரியவில்லை.
காதல் திருமணங்களை எந்தக் காலத்திலும் யாரும் தடுத்து நிறுத்த முடியாது. காலாகாலமாக முடியாதது இப்போது மட்டும் முடிந்து விடுமா என்ன?
அதேவேளை ஏமாற்றும் நோக்கில் பணம் பறிக்கும் நோக்கில் யாராவது செயல்பட்டால் அது காதலே அல்ல.. மோசடி. அதை தடுத்து நிறுத்த யாருக்கும் உரிமை உண்டு.
எது காதல் எது மோசடி என்று யார் தீர்மானிப்பது?
பதினெட்டு வயது மேஜர் என்றால் அந்த வயதைத் தொட்டவுடன் அதுவரை ஆளாக்கி வளர்த்த பெற்றோரை ஒதுக்கி விடும் உரிமை வந்துவிடும் என்பது சட்டப் படி வேண்டுமானால் சரியாக இருக்கலாம். அதற்கு கட்டுப்பாடு ஆய்வு என்பதே இல்லையா என்றால் நிச்சயம் இருக்கத் தான் செய்கிறது;. நல்ல அறிவும் தெளிவும் எதிர்காலத்தை பற்றிய புரிதலும் இருக்கும் எவர்க்கும் சுய நிர்ணய உரிமையை வழங்குவதுதான் சட்டம்.
ஆனால் திரௌபதி படம் திருமாவளவனை குற்றம் சாட்டி குறி வைத்து எடுக்கப் பட்டதாக பரவலான செய்தி பரப்பப்பட்டு வருவதால் பரபரப்பு நிலவுகிறது.
பொண்ணையும் மண்ணையும் தொட்டா வெட்டுவோம் என்ற வசனம் காரணமா?
சென்சார் இதையெல்லாம் பார்க்காமலா அனுமதித்து இருப்பார்கள்?
எப்படியோ படம் எப்படியிருக்கும் என்ற ஆவலை இந்த விமர்சனங்கள் தூண்டி விட்டு விட்டன என்பது மட்டும் உண்மை.