ஆம் .பதினெட்டு ஆண்டு முடிந்ததும் ஒருவர் மேஜர் ஆகி விடுகிறார் என்பதால் என்ன முடிவு வேண்டுமானாலும் எடுக்க முடியும் என்பதால் மேஜர் ஆனவுடன் காதல் திருமணம் செய்தால் பெற்றவர்கள் ஏதும் செய்ய முடியாதவர்கள் ஆகி விடுகிறார்கள். இதுதான் கௌரவக் கொலைகளுக்கு காரணமாக அமைந்து விடுகிறது.
நேற்று வரை என் கட்டுப்பாட்டில் இருந்த என் மகள் இன்று சுதந்திரம் ஆகிவிட்டால் என்னை உதாசீனப் படுத்த முடியுமா என்ற கேள்விக்கு இன்றுவரை பதில் இல்லை.
14-17 வயது adolescent period அதாவது முதிர்ச்சி அடையா பருவம் என்று அறிவியல் சொல்கிறது.
தேர்தலில் வாக்கு செலுத்த இந்த வயது போதும். ஆனால் வாழ்க்கையில் முடிவெடுக்க பெற்றோரை தாண்டி முடிவெடுக்க இந்த வயது போதுமா?
சொத்துப் பிரச்னையில் கூட இந்த வயது போதும். ஆனால் வாழ்க்கைப் பிரச்னையில் இது போதுமா?
பெற்றோர் பெற்று வளர்த்து ஆளாக்குகிறார்கள் . அவர்களின் உரிமைதான் என்ன . அதற்கு என்னதான் அளவுகோல்.?
ஆணுக்கு 21 வயதை ஏன் திருமண வயதாக நிர்ணயித்தார்கள் ? ஏன் மேஜர் ஆனவுடன் திருமணம் செய்து கொள்ள உரிமை கொடுக்க வில்லை?
ஒன்று பெண்ணுக்கும் அதே வயதை நிர்ணயித்திருந்தால் இந்த பிரச்னை எழுந்திருக்குமா?
அல்லது பெற்றோரின் அனுமதியை பெறாமல் திருமணம் செய்து கொள்ளும் உரிமை 21 வயதில்தான் வரும் என்று நிர்ணத்திருந்தால் பல பிரச்னைகள் உருவாகி இருக்காது.
ஈரோடு மாவட்டம் செல்வன் -இளமதி திருமணம் பெற்றோர் தலையீட்டில் ரத்து செய்யப் பட்டிருக்கிறது.
இருவரும் பட்டதாரிகள். இருந்தும் அவர்கள் திருமணத்தை பெண்ணின் பெற்றோர் ஏற்கவில்லை. காரணம் செல்வன் பட்டியல் வகுப்பை சேர்ந்தவர்.
இந்த பிரச்னைக்கு ஒரு முடிவு கட்ட வேண்டாமா?
திரௌபதி திரைப்படம் வந்து வசூல் ரீதியில் மிகப் பெரிய வெற்றியை பெற்ற பிறகு மேலும் அதே நோக்கில் பல படங்கள் வரும் என்பதில் சந்தேகம் இல்லை.
சமுதாயத்தில் உரசல்களை வளர்க்கும் இந்த பிரச்னை ஒரு முடிவுக்கு கொண்டு வரப் பட வேண்டும் என்றால் சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப் பட வேண்டும்.
பெற்றோர் சம்மதத்துடன் ஒரு பெண் திருமணம் செய்து கொண்டால் அவருக்கு 18 வயது பூர்த்தி ஆகியிருந்தால் போதும் பெற்றோர் சம்மதம் இல்லாமல் அவர் 21 வயது பூர்த்தி ஆகும் வரை திருமணம் செய்து கொள்ள முடியாது என்று சட்ட திருத்தம் கொண்டு வர வேண்டும்.
21 வயது பூர்த்தி ஆன பின்னும் ஒரு பெண் பெற்றோரை சம்மதிக்க வைக்க முடிய வில்லை என்றால் அவர் தன் முடிவுப்படியே திருமணம் செய்து கொள்ளலாம் அதில் பெற்றோர் தலையிடும் உரிமையை இழந்து விடுவார்கள் என்பது சட்டப்படி உறுதி செய்யப் பட்டு விட்டால் பெரும்பாலான பிரச்னைகள் தீர்ந்து போகும்.
அரசு சிந்திக்கட்டும்.