1926 ல் இருந்து தப்லீக் இ ஜமாஅத் என்ற அமைப்பு டெல்லி நிஜாமுதீன் பகுதியில் இயங்கி வருகிறது. அவர்கள் மார்ச் மாதம் ஐந்து நாட்கள் மாநாடு நடத்த தீர்மானித்து உலகம் முழுதும் இருந்து பிரதிநிதிகளை அழைத்து நடத்தி இருக்கிறார்கள்.
அதற்குள் கொரானா பாதிப்பு வந்து விட்டது. ஆட்சியில் இருப்பவர்கள் என்ன செய்திருக்க வேண்டும்?
அவர்களை மாநாடு நடத்த அனுமதித்து இருக்கக் கூடாது. அல்லது அவர்கள் அனைவரையும் கண்காணிப்பில் வைத்திருக்க வேண்டும்.
1850 பேர் கலந்து கொண்ட அந்த மாநாட்டில் சவுதி அரபியா, இந்தோனேஷியா, மலேசியா , இலங்கை , தாய்லாந்து போன்ற நாடுகளை சேர்ந்தவர்கள் வந்து போய் இருக்கிறார்கள்.
கடைசியில் 24ம் நிகழ்ச்சியை மட்டும் ரத்து செய்திருக்கிறார்கள்.
இப்போது அந்த மாநாட்டில் கலந்து கொண்டவர்கள் கொரானாவை பரப்புகிறார்கள் என்று பிரசாரம் செய்து வருகிறார்கள்.
இதில் உண்மை இருக்கிறதா இல்லையா என்பதை விட அதிகாரிகள் ஏன் முன்கூட்டியே நடவடிக்கை எடுக்க வில்லை என்ற கேள்விக்கு என்ன பதில் ?
அதே நேரம் கலந்து கொண்டவர்கள் தாங்களே முன்வந்து தங்களை சோதனைக்கு ஆட்படுத்தி இருக்க வேண்டும் என்பதிலும் மாற்றுக் கருத்து இல்லை.
அச்சம் காரணமோ அறிவீனம் காரணமோ அதற்காக திட்டமிட்டு நோயை பரப்புகிறார்கள் என்று அவதூறு பரப்புவதில் என்ன நியாயம் இருக்கிறது?
அதில் அவர்களும்தானே பாதிக்கப்படுவார்கள்.
கொரானா மதம் பார்த்து உயிர்களை எடுக்க வில்லை.
மனிதர்கள்தான் கொரனாவை பயன்படுத்தி மதம் பிடித்து அலைகிறார்கள்.